
நவகிரகங்களில் புதனானவர் புத்திக்கூர்மை, எதிலும் வேகம், சாதுர்யமான பேச்சு, குழப்பமின்றி முடிவெடுத்தல், அலங்காரத்தில் ஆர்வம், கணக்கு, நவீன ஆராய்ச்சி என்று எல்லா விஷயங்களுக்கும் காரணமானவர். ஒருவர் ஜாதகத்தில் புதன் சரியில்லையெனில் குழப்பம், ஞாபகமறதி, எதிலும் ஆர்வமின்மை, மந்த புத்தி எல்லாம் சேரும். இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட கோவூர் சுந்தரேஸ்வரரையும், செளந்தராம்பிகையையும் வழிபட புத்தி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். தியாகராஜர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னம் பாடி சிறப்பித்துள்ளார். தேவேந்திரனின் ஐராவதம் எனும் யானை அகழ்ந்து குளமாக்கி நீராடிய ஐராவத தீர்த்தம், சிவகங்கை என அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிருட்சமாக விளங்கும் மகாவில்வம் 9, 16, 27 தளங்களைக் கொண்டு ஆன்மிக வியப்பளிக்கிறது. இங்கு, புதன் ஈசனோடு இணைந்த அம்சமாக விளங்குகிறார். அதனால், புதனுக்கு தனிச் சந்நதியில்லை.
மூலவரை வணங்கினாலே போதும். கருவறையில் சுந்தரேஸ்வரர் அருள்வெள்ளம் பரப்புகிறார். பசு வடிவ பார்வதிதேவிக்கு சிவபெருமான் சிவலிங்க திருமேனியராக காட்சி தந்து அருளியதால் திருமேனீச்சரம் என்றும் இத்தலத்திற்கு ஓர் பெயர். ஒருசமயம் அன்னை காமாட்சி, மாங்காடு தலத்தில் செய்த தவத்தால் மூவுலகும் வெம்மையால் கொதித்தது. அப்போது மகாலட்சுமி காமதேனுவாக இவ்வூரில் தங்கி தேவர்களுக்கு குளிர் நிழலும் அருள் நிழலும் தந்தமையால் இவ்வூர் கோவூர் என்றானது. ஆலயத்தில் சூரியன், நால்வர், காளிகாம்பாள், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுக்கிரவார அம்மன், லிங்கோத்பவர், கருணாகரப் பெருமாள் உற்சவர், முருகன்-வள்ளி-தெய்வானை, துர்க்கை மற்றும் அம்பாள் கருவறையைச் சுற்றிலும் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி, பிராம்மி, துர்க்கை சண்டேஸ்வரி, பைரவர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அம்பாளை தரிசித்து வெளியே வந்து புதனின் நட்பு கிரகமான சனி பகவானின் அருளைப் பெறலாம்.
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் கோவூர் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment