கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிறைமீட்ட அய்யனார் கோயில். இந்த அய்யனார் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிறைமீட்ட அய்யனார் என்ற பெயர் எப்படி வந்தது? அதுபற்றி பார்ப்போம். பல நூறு வருடங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த ஆதமங்கலம் என்ற கிராமத்தில் ஒரு சலவை தொழிலாளி வசித்து வந்தார்.
அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது ஒரு சமயம் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு நள்ளிரவில் தாய் வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள். வயல் பகுதியில் உள்ள ஒரு ஓடையை கடக்க முயன்ற போது அவளுக்கு திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் அம்மா என கத்தினாள். அருகில் இருந்த கிராம தேவதை கோயிலை நோக்கி வணங்கியபடி நீதான் என்னை காப்பாத்தணும் என்று வேண்டிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அவளை அங்குள்ள குடிசைக்குள் அழைத்துச்சென்று பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. காலையில் தாய் கண்விழித்துப்பார்த்தபோது குழந்தை மட்டும் உறங்கி கொண்டிருந்தது. பிரசவம் பார்த்த வயதான பெண்ணை காணவில்லை, இரவில் குடிசையாக தெரிந்த அந்த இடம் கோயிலாக மாறியிருந்தது.
ஒரு ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து வயிற்று சிறையில் இருந்து குழந்தையை மீட்ட அந்த கிராம காவல் தெய்வம் சிறை மீட்ட அய்யனார் என கிராம மக்கள் அழைத்து வழிபட்டு வருகின்றனர். அய்யனாருடன் அன்னை மீனாட்சி, கருப்பசாமி, செம்மலையப்பர், பூமாலையப்பர் ஆகிய தெய்வங்களும் கோயில் கொண்டுள்ளனர். கொட்டாரம் கிராம மக்களே இந்த சிறைமீட்ட அய்யனார், கருப்புசாமி ஆகியோருக்கு விழா நடத்தி வந்தனர்.
பின்னர் போத்திரமங்கலம் பகுதி மக்களும் விழா எடுத்து வழிபட்டு வந்தனர். கொட்டாரம் கிராமத்தில் இருக்கும் இந்த உற்சவ திருமேனிகளை போத்திரமங்கலம் மக்கள் ஆண்டுதோறும் தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதியுலா நடத்துவது வழக்கம். நாளடைவில் இந்த தெய்வங்கள் எங்களுடையதுதான் என்ற உரிமை பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.
கொட்டாரத்தைச்சேர்ந்த சிதம்பரத்தை பார்த்து சுவாமி உங்களுடையதுதான் என்பதற்கு சாட்சி என்ன கொண்டு வரப்போகிறீர்கள்? என கேட்க அந்த சிறை மீட்ட அய்யனாருடன் இருக்கும் கருப்பண்ண சுவாமியையே கூட்டி வருகிறேன் என கூறினார். பின்னர் கருப்பண்ண சுவாமியை வேண்டிக்கொண்டார்.
மறுநாள் சிதம்பரம் நீதிமன்றம் சென்றபோது சாட்சி எங்கே என்று நீதிபதி கேட்டபோது, அங்கு வெண்ணிற ஒளி ஒன்று சட்டென்று தோன்றி வேகமாக மறைந்து விட்டது. குதிரை கனைக்கும் சத்தமும் கேட்டது. உடல் சிலிர்த்த நீதிபதி கருப்புசாமியே வந்து சாட்சி சொல்லிவிட்டார், எனவே கொட்டாரம் கிராமத்திற்கே சிறை மீட்டார் கோயிலும் உற்சவர்களும் சொந்தம். ஆனால் யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்று தீர்ப்பு அளித்தார்.
தன்னை நம்பியவருக்கு நீதிமன்றம் வரை சென்று சாட்சி சொல்லியவர்தான் கருப்பசாமி என்பதால் வழக்கு பிரச்னை உள்ளவர்கள் இந்த அய்யனார், கருப்பசாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் வெற்றி கிடைக்கும், சிறை செல்வதை தவிர்க்கலாம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொழுதூர் மாநில நெடுஞ்சாலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அய்யனார் கோயில் உள்ளது. பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
No comments:
Post a Comment