சீரடி பாபா எங்கும் நிறைந்தவர். அவர் பார்வையில் இருந்து ஒருவரும் தப்ப இயலாது. தன் பக்தர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர் அறிந்திருந்தார். அந்த பக்தர்கள் தன்னை பார்க்க வரும்போது முன்பு நடந்த சம்பவங்களை சொல்லி பாபா ஆச்சரியப்படுத்துவார். நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் பாபா இந்த விளையாடலை நடத்தியுள்ளார். ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்பித் தன்னை நாடி வந்தோர் அனைவரையும் பாபா நல்வழி காட்டி நெறிப்படுத்துவார். சிலரை எப்போதும் கடவுள் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளும்படி கேட்டு கொள்வார். தமக்கு பாத பூஜை செய்யும்படி சிலரிடம் கூறுவார். வேறு சிலரைப் பக்தி நூல்களைப் பாராயணம் செய்யுமாறு அறிவுறுத்துவார். தன் பாதத்தின் அருகில் அமரும் பாக்கியத்தை வெகு சில அடியவர்களுக்கு அளித்ததும் உண்டு. சில அன்பர்களை கண்டோபா கோவிலுக்குச் சென்று வருமாறு கூறுவார்.
பலருக்கு, நேரிலேயே உபதேசம் செய்து உரிய வழிகாட்டும் பாபா, சிலருக்குக் கனவில் தோன்றிக் கஷ்ட நிவாரணம் அளிப்பதும் உண்டு. அவர் எல்லாம் அறிந்தவர், எல்லாம் வல்லவர் என்பதை பல தடவை நிரூபித்துள்ளார். கடவுளுக்கு இருக்கின்ற அனைத்து சக்திகளும் பாபாவிடம் காணப்பட்டதால் அவர் கடவுளின் அவதாரமே என்பதை பக்தர்கள் நூறு சதவீதம் நம்பினார்கள். அதை உறுதிப்படுத்தும் சில நிகழ்ச்சிகள்..... அரிச்சந்திர குன்று என்பது சீரடியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அக்குன்றின் உச்சியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஒரு தடவை பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான நானா சாந்தோர்கர் என்பவர் அங்கு அம்மனை வழிபட சென்றார். பாதி வழியில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கே தண்ணீர் இல்லை. அவரால் மேலே ஏறவும் முடியவில்லை. கீழே இறங்கவும் முடியவில்லை. அவர் மிகவும் களைத்துப் போய் அங்கிருந்த பாறை ஒன்றின்மேல் அப்படியே உட்கார்ந்து விட்டார்.
பின்னர் அவர் தம்முடன் வந்தவர்களிடம், “பாபா இருந்தால் நம் தாகம் தீரத் தண்ணீர் வழங்குவாரே” என்றார். அதே நேரத்தில் சீரடி மசூதியில் தம் பக்தர்கள் சிலருடன் அமர்ந்து, உரையாடிக் கொண்டிருந்த பாபா, “நானா, மிகவும் தாகத்தோடு இருக்கிறான். அவன் தாகம் தணியத் தண்ணீர் கொடுக்க வேண்டும்” என்றார்.
அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது, குன்றில் நானா சாந்தோர்கர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வேடன் ஒருவன் திடீரென்று எங்கிருந்தோ வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த சாந்தோர்கர், “ஏனப்பா, குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும்” என்று கேட்டார். அதைக் கேட்ட வேடன் “நீங்கள் உட்கார்ந்திருக்கும் பாறைக்குக் கீழேயே தண்ணீர் இருக்கிறது” என்றான். அதைக் கேட்டுச் சாந்தோர்கரும் அவருடன் சென்றிருந்த வர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். உடனே, அவர்கள் ஆவலோடு அந்தப் பாறையைப் புரட்டிப் பார்த்தார்கள்.
என்ன ஆச்சரியம். அங்கு ஒருவருடைய தாகத்தைத் தணிப்பதற்கான அளவு தண்ணீர் இருந்தது. நானா ஆவலோடு அதைத் தம் கையால் அள்ளிப் பருகித் தம் தாகத்தைத் தணித்துக் கொண்டார். வேடனுக்கு நன்றி சொல்ல விரும்பிய அவரும் மற்றவர்களும் திரும்பிப் பார்த்தனர். வேடனைக் காணோம். வேடன் திடீரென்று மறைந்து விட்டார். அவர் பாபா என்று யாருக்கும் புரியவில்லை. பின்னர், சாந்தோர்கரும் அவருடன் வந்தவர்களும் அம்மன் கோவிலுக்குச் சென்று, அம்மனை வழிபட்டுத் திரும்பினர். இந்த நிகழ்ச்சி நடந்து, சில நாட்கள் கழிந்தன. நானா சீரடிக்கு சென்று, துவாரகமாயிக்குள் செல்லப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். மசூதிக்குள்ளிருந்த பாபா அதைக் கண்டார். உடனே அவர், “நானா, நீ தாகமாயிருந்தாய், நான் உனக்குத் தண்ணீர் கொடுத்தேன். குடித்தாயா? என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் சாந்தோர்கர் ஆச்சரியம் அடைந்தார். அப்படியே நின்று விட்டார். பாபா எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர்ந்தார். பாபா மீது அவர் கொண்ட பக்தியும் நம்பிக்கையும் மேலும் வளர்ந்தன. குடிப்பழக்கம் கொண்ட பக்தர் ஒருவரைத் திருத்த பாபா பின்பற்றிய வழிமுறை வியப்புக்குரியது. அந்த குடிகாரரின் கனவில் தோன்றிய பாபா, அவரின் மார்பு மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அழுத்தியதால் அவர் அலறினார். “இனிமேல் குடிக்க மாட்டேன்!” என்று வாக்குறுதி பெற்ற பின்னரே பாபா அவர் மார்பை விட்டு இறங்கினார். தொலைதூர பக்தர்கள் பலரிடம் இந்த அற்புதத்தை பாபா நிகழ்த்தியுள்ளார். பண்டரிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் சீரடிக்கு வந்திருந்தார். துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை வணங்கினார். அப்போது பாபா அவரை நோக்கி “மக்கள் வஞ்சம் உடையவர்களாக வாழ்கின்றனர். என் கால்களில் விழுகிறார்கள். தட்சிணையும் தருகிறார்கள். ஆனால் மறைவாக யாரும் காணாத இடத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள் என்றார்.
இதை கேட்டதும் வக்கீல் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் பாபா பற்றி பண்டரிபுரத்தில் இகழந்து பலரிடமும் பேசி இருந்தார். தான் பண்டரிபுரத்தில் பேசியதை மிகத்துல்லியமாக சொல்கிறாரே என்று அந்த வக்கீல் வெடவெடத்து போனார். பண்டரிபுரத்தில் இருந்து சுமார் ஐந்நூறு கி.மீ. தொலைவில் இருக்கிறது சீரடி. எனினும் அங்குள்ள வக்கீல்களின் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். வக்கீல்களின் தவறான செயலை சுட்டிக்காட்டியதும் பண்டரிபுரத்து வக்கீல் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரமாகியது. அதன் பிறகு அவர் பாபாவின் தீவிர பக்தராக மாறினார். ஒரு முறை சீரடிசாய் பாபாவின் பக்தர் நானா சாந்தோர்கர், பத்மாலயா என்னும் காட்டுப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகி விட்டதால் கோயில் வாசல் மூடிவிட்டால் என்ன செய்வது என்று நானா சந்தேகம் அடைந்தார்.
பசியோ வயிற்றைக்கிள்ளியது. உடனே அவர் பாபாவை மனதில் நினைத்தார். எப்படியேனும் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது பசியைத் தீர்க்க ஒரு கோப்பை தேநீர் கிடைத்தால் போதும் என்று வேண்டிக்கொண்டார். அவர் நினைத்தது போலவே இரவு 11 மணி ஆன பின்பும் கோயில் வாசல் மூடப்படாமல் திறந்தே இருந்தது. கோயில் வாசலிலிருந்த அர்ச்சகர் “ நீங்கள் தான் நானாவா”? என்று கேட்டார். பிறகு அவர்,உங்களுக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!” -- என்று கூறினார். நானாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஏனெனில் சாய் பாபாவைத் தவிர வேறு யாரும் அவரை நானா என்ற பெயர் சொல்லி அழைத்தது இல்லை அவர் ஆச்சரியம் அகலாமல். “ஆமாம்! நான் தான் நானா! என்னைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அர்ச்சகரிடம் கேட்டார். அதற்கு அர்ச்சகர், நானாகோயிலுக்கு வரப்போவதாகவும், கோயிலை மூடவேண்டாம் என்றும், சாய்பாபா ஒரு சூட்சுமச்செய்தியை அனுப்பியதாகக் கூறினார்.
நானா கணபதி கோயில் தரிசனம் முடித்துவிட்டு வரவும், அவருக்கு ஒரு கோப்பை தேநீரும் கிடைத்தது. எல்லாம் பாபாவின் அருள்தான் என்று நானா புரிந்து கொண்டார். பின்னாளில் , பாபா நானாவிடம், “நான் உனக்கு நடுக்காட்டில் தேநீர் தந்தேன் இல்லையா?” என்று கேட்டு, அதை உறுதியும் செய்தார். இப்படி நானா வாழ்வில் பல தடவை சாய்பாபா சீரடியில் இருந்த படியே அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஒருமுறை பாலாசாஹேப் மிரீகர் என்பவர் சிதலீ என்னும் ஊருக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்தார். சீரடி அவ்வழியிலேயே இருந்ததால் அவர் சாய்பாபாவைத் தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் சீரடிக்கு வந்தார். மசூதிக்கு வந்த மிரீகர் பாபாவின் முன்னால் விழுந்து வணங்கினார். அப்போது பாபா பக்தர்களிடம் உரையாடத் தொடங்கினார். பாபா அங்கிருந்தவர்களிடம், ”உங்களுக்கு நம்முடைய துவாரகா மாயீயைத் தெரியுமா?''- என்று கேட்டார். பாலாசாஹேப்புக்கு சாய்பாபா கேட்டது புரியவில்லை. எனவே அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
உடனே பாபா ”நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் இம்மசூதியோ துவாரகாமாயீ! இவள் தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும் கவலைகளையும் விலக்குகிறாள். இந்த மசூதி மாயி மிகவும் கருணையுள்ளவள். அவள் எளிய பக்தர்களின் தாயாவாள். அவள் தன் குழந்தைகளை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கிறாள். அவளது நிழலில் இளைப்பாறுவோர் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அடைகின்றனர் என்று கூறினார். பாபாவின் அருள்மொழியை கேட்டபிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட தயாரானார்கள். பாலாசாஹேப் மிரீகரும் சீரடியில் இருந்து புறப்பட எழுந்தார். அப்போது பாபா அவரிடம், ”உங்களுக்கு லம்பா பாவாவைத் தெரியுமா? என்றார். பிறகு ”அவன் எவ்வளவு பயங்கரமானவன்! இருந்தபோதிலும் அவனால் துவாரகாமாயீயின் குழந்தைகளை என்ன செய்ய முடியும்? என்றார். பாபா சொன்னது யாருக்கும் புரியவில்லை. மிரீகரும் எதுவும் புரியாமல் பாபாவிடம் விடை பெற்று சீரடியை விட்டுப் புறப்பட்டார்.
அப்போது பாபா மிரீகரிடம் சாமாவையும் துணைக்கு அழைத்து செல்லும் படியும், சீதலி சுற்றுலாவை மகிழ்ந்து அனுபவிக்கும்படியும் கூறினார். பாலாசாஹேப் மிரீகர் முதலில் தயங்கினாலும், பிறகு சாமாவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு குதிரை வண்டியில் புறப்பட்டுச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு அவர்கள் சிதலீயைச் சென்றடைந்தார்கள். மிரீகரின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லை என்பதால் அவர்கள் அங்கிருந்த மாருதி கோயிலில் தங்கினார்கள். அங்கிருந்த ஒரு நாற்காலியில் மிரீகர் அமர்ந்தார். அப்போது அவர் மீது பாம்பு ஒன்று ஏறியது. கோவில் ஊழியர் ”பாம்பு, பாம்பு'' என்று அலறினார். பாம்பு மெதுவாக மிரீகரின் இடுப்பை விட்டு இறங்கி, மிரீகரை விட்டு அப்பால் நகரத் தொடங்கியது. அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பாம்பைக் கொன்றனர். கொடிய நச்சுப் பாம்பினால் மிரீகருக்கு வரவிருந்த ஆபத்து, பாபாவின் தீர்க்க தரிசனத்தால் தடுக்கப்பட்டது. பாபா லம்பா பாவா என்று குறிப்பிட்டது பாம்பைத்தான் என்பது அதன் பிறகே மிரீகருக்குப் புரிந்தது. இந்த சம்பவத்துக்குப் பிறகு சாய்பாபாவின் மீது பக்தியும் நம்பிக்கையும் மிரீகருக்கு அதிகரித்தது.
No comments:
Post a Comment