Saturday, 5 August 2017

சிற்ப களஞ்சியமாகும் அம்ருதேஷ்வரர் கோவில்


நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் நீண்ட நெடிய புராண கால வரலாறு உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவில் உள்ள பிரசித்திப்பெற்ற அம்ருத்தேஷ்வரசுவாமி கோயிலுக்கும் வரலாறு உள்ளது. மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டம் மலைகளின் தாய்வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் கண்ணோக்கி பார்க்கும் இடமெல்லாமல் சிறியதாகவும், பெரியதாகவும் மலைகள் தான் கண்ணுக்கு தெரியும். 

இதுபோன்ற ரம்மியமான இயற்கை காட்சியை மாநிலத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் காண முடியாது. காபி, தேயிலை, ஏலக்கி, வாழை, தென்னை, பலா என பல்வேறு மக்கள் பயன்படுத்தும் பயிர்கள் விளையும் மண் என்பதால் சிக்கமகளூருவை தென்னகத்தின் காஷ்மீர் என்ற கவிஞர்கள் வர்ணக்கிறார்கள். மாவட்டத்தின் தரிகெரெ தாலுகா தலைநகரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் வடகிழக்கு பகுதியிலுள்ள ஒரு சிறிய குக்கிராமம் அம்ருத்தாபுரா. 

இக்கிராமத்தில் கடந்த 1197ம் ஆண்டு ஹொய்சள மன்னர்களில் ஒருவரான 2வது பல்லவர் ஆட்சி காலத்தில் அம்ருத்தேஷ்வரசுவாமி கோயில் கட்டப்பட்டதாக சாசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 2 அடி உயரத்தில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருப்பு பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள சிலை பக்தர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. சிவலிங்கத்தின் வலது புறத்தில் சரஸ்வதிதேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் பெற்றோர் இக்கோயிலுக்கு வந்து அரிசியில் எழுதி தொடங்குகிறார்கள். இதன் மூலம் சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். கோயில் வளாகத்தில் வலது பக்கத்தில் கணபதி, சப்த தேவதைகளின் சிலைகள், சரஸ்வதி, நாக தம்பதிகள் சிலைகளும், இடது பக்கத்தில் வீரபத்ரா, சுப்ரமணியசுவாமி சிலைகள் பிரதீஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கோயில் ஆண்டு திருவிழா நடக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளான்று சூரியனின் கதிர் வீச்சு கோயில் கருவறையில் உள்ள சிவபெருமானின் சிலை மீது விழுகிறது. இக்கோயில் சிற்ப களஞ்சியமாக விளங்குகிறது. கோயிலை சுற்றி சிற்ப கலைஞர்கள் தங்கள் கை வண்ணத்தில் வடிவமைத்துள்ள கலைஞர்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளது. கோயிலை சுற்றி ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது ஹொய்சள மன்னர்களின் சின்னம் ஆங்காங்கே காணப்படுகிறது. கோயிலில் 56 தூண்கள் கலைநுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ளது. 

இக்கோயிலில் 10 சாசனங்கள் உள்ளது. இதில் கவி ஜன்னா எழுதியுள்ள சாசனமும் ஒன்றாகும். இக்கோயில் தினமும் காலை 9 மணி 11 மணிவரையும், மாலை 4 முதல் 6 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் நடை திறக்காது. இக்கோயிலுக்கு பெங்களூருவில் இருந்து பி.எச். சாலை வழியாக பயணம் செய்தால் 263 கி.மீட்டர் தூரமாகும். சிக்கமகளூரு நகரில் இருந்து 67 கி.மீ, தரிகெரே நகரில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. 

No comments:

Post a Comment