ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது சிவபெருமானே பிச்சை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்தபோதுதான் ராவணன் இலங்கைக்கு அவரைக் கவர்ந்துகொண்டு போனான். அரிச்சந்திரனும், நளனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப் படைத்தபோதுதான் நாடு, மனைவி, மக்கள் என சகலத்தையும் இழந்து நிர்க்கதியாக நின்றார்கள் என்றெல்லாம் வரலாறுகள் கூறுகின்றன.
ஆனாலும் இவ்வளவு துன்பங்களைத் தருபவராக இருந்தாலும், சனிபகவான் இளகிய மனம் படைத்தவர். சனி பகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவ நாடியாகும். எனவே சனிபகவானே ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோயிலில் யந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அவருடன், அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் அருள்பாலிக்கிறார்.
சனீஸ்வர பகவானின் பார்வை, அவருடைய மனைவியின் சாபத்தினால் வக்கிரமாக அமைந்தது. இதனால் சனீஸ்வரரின் தாய் சாயாதேவி சனீஸ்வரரைத் தன் அருகிலேயே வைத்திருக்கிறார். தாய் அருகிலேயே இருப்பதால் சனீஸ்வரர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார்.
யந்திர அமைப்பு:
இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் உள்ளனர். அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.
வரலாறு:
1535ம் ஆண்டு ஏரிக்குப்பம் பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கியவர் வையாபுரி. இவர் இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். காரணம் ஏதுமின்றி, திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலைதடுமாறி விழுந்ததால், அதற்கும் பலத்த அடி.
அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்புமாறும், சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி, மேலும் அதனால், வையாபுரியின் உடல்நலம் தேறும் என்றது. அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி யந்திர வடிவிலான சனீஸ்வரன் சிலையை அமைத்து 4கால பூஜைகளை செய்து வந்தார். கால வெள்ளத்தில் கோயில் சிதைவுற்றது. யந்திர சிலை முட்புதர்களால் மூடப்பட்டது. சமீபத்தில் தொல்பொருள் துறையினரால் அகழ்வாராய்ச்சி செய்யும் போது மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பரிகாரம்:
கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘பாஸ்கர தீர்த்தம்‘ என்ற குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டால் திருமண வரம், குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லட்சுமி கடாட்சம், சனீஸ்வர தோஷம் மற்றும் சகல தோஷம் போன்றவை நிறைவேறுவதாகவும், எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினால் வேண்டும் வரம் கிடைப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.
சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை, ஒவ்வொரு வருடம் காணும் பொங்கல் அன்று பால்குட அபிஷேகம் சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசலில் இறங்கி அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆரணி, போளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.
சென்று வரவேண்டும்
ReplyDelete