மன்னார்புரம்
அந்தமான் தீவுகளில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பக்தர். ஒருநாள் இரவு அவர் கனவில் ஒரு அம்மன் தோன்றினாள். ‘‘பக்தா, எனக்கு ஒரு ஆலயம் கட்டுவாயா?’’ என்று உரிமையுடன் கேட்டாள். பக்தனுக்கு ஏக மகிழ்ச்சி. அன்னையே கனவில் தோன்றி விட்டாளே! ஆனந்தம் பொங்கியது அவருக்குள். ‘‘கட்டுகிறேன் தாயே,’’ என்ற அந்த பக்தரின் கண்களில் நீர் பொங்கியது. ‘‘எங்கே கட்ட வேண்டும் தாயே?’’ என்று ஆர்வமாகக் கேட்டார். ஆனால் உடனேயே, ‘‘என்னுடன் வா, இடத்தைக் காட்டுகிறேன்’’ என்று அம்பிகை சொன்னபோது அவரால் தன்னையே நம்பமுடியவில்லை. திகைப்புடன் அம்மையைப் பின்தொடர்ந்தார், பக்தர். ஓரிடம் வந்ததும் அம்பிகை நின்றாள். ‘‘இதுதான் அந்த இடம்’’ என்று குறிப்பால் உணர்த்தினாள். பளிச்சென்று பக்தர் விழித்துக் கொண்டார். ஆனால் அன்னையை காணோம்!
அவர் மனதில் நம்பிக்கை உதயமானது. அம்பிகை சொன்னபடி அவளுக்கு ஓர் ஆலயம் கட்டுவதென முடிவெடுத்தார். கனவில் கண்ட இடம் அவருக்குப் பரிச்சயமானதுதான். திருச்சிக்கு அருகேயுள்ள மன்னார்புரமே அது. அங்கே ஊர் மக்களின் உதவியோடு ஆலயத்தை நிர்மாணித்து அம்மனையும் பிரதிஷ்டை செய்துவிட்டார். அந்த ஆலயமே இப்போது ஸ்ரீமகாலட்சுமி ஆலயமாகத் திகழ்கிறது. மகாலட்சுமிக்கு தமிழ் நாட்டில் ஆலயங்கள் அபூர்வமாகவே அமைந்திருக்கின்றன. திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அன்னை மகாலட்சுமியின் ஆலயம் சிறியதுதான். ஆனால் கீர்த்தி மிக்கது. ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம். அடுத்து துவாரபாலகிகள் இருபுறமும் கொலுவிருக்க கருவறையில் தாயார் மகாலட்சுமி அமர்ந்த கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.
அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க கீழ் இரு கரங்களில் அபய, வரத, முத்திரைகளுடன் அன்னை அருள்பாலிக்கிறாள். இங்கு வரதராஜப் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னிப் பெண்களும், குழந்தைப் பேறு வேண்டும் மங்கையரும் அன்னையின் சந்நிதானத்தை 108 முறை வலம் வரவேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் வலம்வந்து பிரார்த்தனை செய்தால் அவர்கள் கோரிக்கைகள் விரைவாக, நிச்சயம் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தொழில் அபிவிருத்திக்காகவும் திருமணம் நடக்க வேண்டியும் இங்கு அன்னையின் முன்பு சுதர்சன யாகம் மற்றும் மகாலட்சுமி யாகங்கள் நடக்கின்றன. இந்த யாகங்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வேண்டுதல் விரைந்து ஈடேறுவது கண்கூடான உண்மை.
இங்கு ஓர் அதிசயம் இன்றும் நடப்பதைக் கண்கூடாக காணலாம். நாம் ஒரு பிரச்னையை தீர்த்துத் தரும்படி அன்னையை நோக்கி மனமுருக வேண்டும்போது உடனே அன்னையிடமிருந்து பதில் கிடைத்துவிடும் என்பதுதான் அது. நாம் வேண்டிக்கொள்ளும் தருணத்தில் வடக்கு திசையிலிருந்து பல்லி சப்தமிடும் ஓசை வந்தால் நினைத்த காரியம் நடந்து விடுமாம். மேற்குத் திசையிலிருந்து ஒலி வந்தால் எதிர் மறையாக நடந்தேறுமாம்! ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். காலை 7 முதல் 8 1/2 வரையிலும் மாலை 5 1/2 முதல் இரவு 8 வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது.
இந்த ஆலயத்தின் உக்கிராண அறைக்கு அருகே ஒரு கருநாகம் உள்ளது. அதுவே இந்த ஆலயத்தின் பாதுகாவலன் எனக் கூறுகின்றனர். சில நேரங்களில் தாயார் சந்நதி முன் நின்று படமெடுத்து ஆடி அன்னையை இந்த கருநாகம் வணங்கும் காட்சியைப் பார்த்துப் பலர் பரவசப்பட்டுள்ளனர். பொதுவாக இந்த நாகம் எப்போதாவதுதான் சிலர் கண்களில் தென்படுமாம். ஆனி மாதம் திருவோணம் நட்சத்திரம் தாயார் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினம். அன்று நடைபெறும் யாகத்தில் பலர் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மன்னார்புரத்தில் இந்த ஆலயம் உள்ளது.
No comments:
Post a Comment