Monday, 14 August 2017

எம பயம் நீங்கும், செல்வம் கூடும் சீதா ராம ஆஞ்சநேயர் கோயில்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் சந்தப்பேட்டையில் கவுண்டன்ய மகா நதிக்கரையின் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயில். இந்த கோயில் ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மூலவரான அனுமன் சுமார் 6.5 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான கம்பீரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.  ஒரே கல்லில் பிரபையுடன் சேர்த்து அபய ஹஸ்தமும், கடிக ஹஸ்தமும், கதையும், சக்கரமும் கொண்டு தெற்கு முகம் நோக்கியுள்ளார். ஆஞ்சநேயரின் அபய அஸ்த காட்சி இக்கோயிலை தவிர வேறு எந்தக்கோயிலிலும் பார்க்க முடியாது.அதேபோல் கோயிலில் கிழக்கு நோக்கி சீதா லட்சுமணருடன் ராமர் ஒரு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். தை, மாசி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சூரியக்கதிர்கள் கருடாழ்வார் சந்நிதியின் உள்புறம் பட்டு கருவறையின் மூலவரான ராமபிரான் மீது விழுவது தனிச்சிறப்பாகும். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சித்தூர் ஜில்லாவை ஆட்சி செய்த கலெக்டர் குக்துரை என்பவர் நோய்வாய்ப்பட்டு இத்திருத்தலத்தில் ராமரையும், அனுமனையும் வழிபட்டார். அதன்பிறகு உடல்  குணம் அடைந்ததால் அருகேயுள்ள பசுமாத்தூர் கிராமத்தின் வரி வருவாயில் ஒரு பங்கை இக்கோயிலுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார். அது இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இக்கோயிலில் வடக்கு முகமான குபேர பாகத்தில் நின்று அனுமனை தரிசித்தால் கடன் தொல்லை, நோய்கள், நவக்கிரக தோஷங்கள், மனபயம், எமபயம் போன்றவை நீங்கும். வியாபாரம்  அபிவிருத்தியடையும். தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் கோயிலை 1008 முறை வலம் வருவோருக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கையாக உள்ளது.  அனைத்து நாட்களிலும் அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு. புரட்டாசி, மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. முக்கியமாக ராமநவமியன்று சீதாராமர் திருக்கல்யாண நிகழ்வின்போது திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் கோயிலில் மாலை அணிந்துகொண்டு 3 முறை வலம் வந்தால் திருமணம் விரைவில் கைக்கூடும் என்பது நம்பிக்கை. மாதம்தோறும் அமாவாசையன்று கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனமும் சிறப்பு பூஜைகளும் காலையில் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு கோபுர தரிசனமும் சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நன்னாளில் சுவாமி தரிசனம் செய்தால் செல்வம் கூடும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment