ஒரு காலத்தில் இலந்தை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால், இந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு முத்தாரம்மன் எழுந்தருளி மக்களை காத்து அருள்புரிந்து வருகிறாள். முத்து+ ஆற்று+ அம்மன். அம்மை நோயால் ஏற்படும் முத்துக்களை ஆற்றுவதால் (போக்குவதால்) அம்மனுக்கு இந்தப் பெயர் வந்தது. இத்தல அம்மன் அமர்ந்த கோலத்தில் வடக்கு பார்த்த வண்ணம், கருணை பொங்கும் விழிகளுடன், தீய சக்திகளை அழிக்கும் வகையில் கையில் சூலாயுதத்துடன் காட்சி தருகிறாள். ஐம்பொன்னால் உருவானவள் இந்த அம்மன். ஆண்டு முழுவதும் இந்த அன்னையின் அழகிய திருமுக தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைக்கும். முழுவதும் பட்டாடையால் சூழப்பட்டிருப்பாள். கழுத்தில் இருக்கும் தங்கத்தால் ஆன பெரிய திருமாங்கல்யம், அன்னை பெண்களின் திருமாங்கல்யத்தைக் காப்பவள் என்பதை பறைசாற்றுகிறது. வருடத்தில் ஒருமுறை ஆடிப்பூரத்தில் மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
அப்போது அம்பாளின் முழு உருவத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்த அபிஷேகத்திற்கு தேன், பால், பஞ்சகவ்யம், சந்தனாதி தைலம், சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், தயிர் என ஒன்பது வகையான பொருட்களை வாங்கிக் கொடுத்து தரிசித்து, கருவறை தீபத்தில் சந்தனாதி தைலம் சேர்த்து வழிபட்டால் அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் அகலும். நவக்கிரக நாயகியாய் முத்தாரம்மன் திகழ்கிறாள். கோவிலின் உட்பிரகாரத்தில் சாஸ்தா, மகாவிஷ்ணு சன்னிதிகளும், பலிபீடமும் உள்ளன. சனிக்கிழமையில் தொடர்ந்து 8 வாரங்கள் சாஸ்தா, மகாவிஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி ஒருங்கே வழிபட்டு வந்தால், வியாபாரத்தில் வளர்ச்சி, பொன், பொருள் சேர்க்கை போன்ற நற்பேறுகள் கிட்டும். கருவறையில் அம்மனுடன் அரூபமாக வண்டி மலையான் அருள்பாலிக்கிறார். முத்தாரம்மனின் கருவறை வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களாக பைரவரும், பூத வேதாள கணமும் காவல்புரிந்து அருள்செய்கின்றனர்.
திருக்கயிலையில் ஈசனின் திரு நடனத்திற்கேற்ப இசைக் கருவிகளை மீட்டிப் பாடுபவை பூத வேதாள கணங்கள். மேலும் ஈசன் வேதம் பாட, பூத வேதாளங்கள் ஆடுமாம். வேதாளங்கள், பைரவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. இத்தல முத்தாரம்மன் சிவ அம்ச மாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. சக்தி பீடங்களின் காவலராக சிவபெருமானே பைரவர் வடிவில் எழுந்தருளியிருப்பதாகக் கூறப்படுவதால், சிவாலயங்களில் விளங்கும் பைரவர் சன்னிதியில் செய்யப் படும் பரிகாரங்களைவிட, இத்தலத்தில் பரிகாரம் செய்வது இரட்டிப்பு பலன்களை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கைஆகும். முத்தாரம்மன் ஆலயம் கேரள கட்டிட அமைப்பில் பழமை மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தல வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பக்கம் மாரியம்மனும், உஜ்ஜைனி மாகாளியும், பலிபீடமும் உள்ளன. இத்தல வெளிப்பிரகார தென்மேற்கு மூலையில் தல விநாயகரான வரங்களை அள்ளித்தரும் வரசித்தி விநாயகர் கிழக்கு நோக்கி, தன் அன்னையாம் மூலவரை பார்த்த வண்ணம் உள்ளார்.
இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து, சிதறுகாய் உடைத்து, நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து, 3 சங்கடஹர சதுர்த்தி தினங்கள் வழிபட்டு வர தடங்கல்கள் அகன்று நல்வழிகள் பிறக்கும் என்பது ஐதீகமாகும். வரசித்தி விநாயகரை, சுகப்பிரசவ விநாயகர் என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னிடம் வேண்டுதல் வைக்கும் கர்ப்பிணி பெண்களின் பிரசவம் சுகமாய் அமைந்திட வரமருள்வதால் இந்தப் பெயர் பெற்றுள்ளார். பிரசவ நாட்களில், அவ்வைபிராட்டியின் ‘விநாயகர் அகவல்’ படித்து வருவது அதீத பலன் தரும். இத்தலத்தில் பைரவர் நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சுதை வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. தொடர்ந்து 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாத்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நற்காரியங்கள் யாவும் ஈடேறும். இந்நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது நலம் பயக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் இத்தல பைரவருக்கு வில்வ மாலை அணிவித்து, நெய்யில் சுட்ட உளுந்து வடை நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, தாமரை பூ சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து 8 வாரங்கள் செய்து வர, திருமணத் தடைகள் அகன்று, மனதுக்குப் பிடித்த துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால் பாயசம் நிவேதனம் செய்தால் நாக தோஷமும், சனிக்கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால்பாயசம், கருந்திராட்சை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விஷய பயமும் அடியோடு அகலும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு, தங்கள் தனத்தை பெருக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரியில் இருந்து மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இலந்தையடிவிளை.
No comments:
Post a Comment