Thursday, 3 August 2017

விஷக்கடிகள் போக்கும் வாழைத்தோட்டத்து ஐயன்


கருத்தம்பட்டி

வாழைத் தோட்டத்து ஐயன் ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி ஊரில் உள்ளது. வெகுகாலத்துக்குமுன் இந்தப் பகுதியில் வாழ்ந்த சின்னய்யன் என்பவரையே வாழைத் தோட்டத்து ஐயன் என மக்கள் வழிபடுகின்றார்கள். இந்த ஆலயத்தில் கொடுக்கப்படும் புற்று மண் விஷக்கடி போன்ற விஷ சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக நம்பப்படுகிறது. சின்னையன் என்ற இயற்பெயருடைய இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் பிறந்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். மாடு மேய்க்கும்போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். 

ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்உமாதேவியாருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால், எவரிடமும் கட்டணம் எதிர்பார்க்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ்வைத்து வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக இன்றளவும் பயன்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment