Monday, 7 August 2017

நிலப்பிரச்னை தீர்க்கும் மரக்காணம் பூமிஈஸ்வரர்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில். பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. அதன்பிறகு ஒய்மா நாட்டு மன்னன் நல்லியகோடன் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுக மாக இருந்துள்ளது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயிலை கட்டியுள்ளனர். அப்போது இந்த ஊர் பெயர் ஒய்மா நாட்டு பட்டின நாட்டு பட்டினமான மரக்காணம் என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டன நாட்டு பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜமன்னன் கம்பண்ன உடையார் ஆட்சியின் போது மீண்டும் மரக்காணம் என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து பல்லவ மன்னர்கள் ஆட்சியின் போது இந்த கோயிலில் சில கட்டுமான பணிகளை செய்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் வடக்குபுறத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பகுதியில் விஷ்ணு சிலையும், வடக்குப்பகுதியில் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது.   தினமும் இக்கோயிலுக்கு வந்து பூமிஈஸ்வரரை தரிசனம் செய்தால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்பந்தமான கோயில் என்பதால் பூமீஈஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். 

இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று கூறுகின்றனர். ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள சிவனை வணங்கி விட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்னை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். திருமணத்தடை, குழந்தையின்மை, ராகு கேது தோஷம், தீராத நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்வர் பூமிஈஸ்வரர். கோயிலின் உள்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் (அம்பாள்) அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், பைரவர், முருகப்பெருமான், சித்தி விநாயகர் ஆகிய கடவுளர்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 

கோயிலின் எதிர்புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடிமரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர்புறத்தில் சூரியன், சந்திரன் இணைந்த சிற்பமும் அழகுற அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க சிற்பங்கள் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்து சிற்பங்கள் ஆகும். பல நூறு ஆண்டுகள் ஆகியும் இந்த சிற்பங்கள் சிதிலமடையாமல் கம்பீரமாக அமைந்துள்ளது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. பூமிஈஸ்வரரை வழிபட்டால் நிலப்பிரச்னை தீர்ந்து வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சிவலிங்கமாக மாறிய மரக்கா

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியூரில் இருந்து வந்த சிவபக்தர் ஒருவர் மரக்காணம் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக கோயிலை தேடினார். அப்போது கோயில் கட்டப்படவில்லை. உடனே அருகில் உள்ள விவசாயி ஒருவரிடம் நெல் அளக்கும் பெரிய மரக்காவை வாங்கி அதனை கவிழ்த்து சிவலிங்கமாக மனதில் நினைத்து வழிபட்டு வந்தார். பின்னர் அவர் வெளியூர் சென்று விட்டார். இதற்கிடையே மரக்காவை தேடிவந்தபோது அதனை காணாமல் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு சிவலிங்கம் காணப்பட்டது. இதனால் பரவசம் அடைந்த அவர் மரக்காவை காணோம், மரக்கா சிவலிங்கமாக மாறிவிட்டது என்று கூறியிருக்கிறார். அதனால் மரக்காணம் என்ற பெயர் வந்ததாகவும் இப்பகுதி பெரியவர்கள் கூறுகிறார்கள். சுயம்புவாக தோன்றியதால் இங்குள்ள சிவலிங்கத்திற்கு சக்தி அதிகம்.

No comments:

Post a Comment