Saturday 12 May 2018

தீண்டத் தீண்ட தீயினை மூட்டுகிறாய்



ஜெய்ப்பூர் சமஸ்தானத்திற்கு வருகை தந்த சுவாமி விவேகானந்தர், அங்கு பணிபுரிந்த சர்தார்ஜி ஹரிசிங்கிடம் நட்புடன் பழகினார். ஒருமுறை அவரது அழைப்பை ஏற்று, சர்தார்ஜியின் இல்லத்தில் சில நாள் தங்க நேர்ந்தது. அப்போது விவேகானந்தர் ஆன்மிக கருத்துக்களை எடுத்துரைத்தார். ஒரு நாள் உருவ வழிபாடு குறித்த பேச்சு எழுந்தது. வேதாந்தத்தில் புலமை பெற்ற சர்தார்ஜி, ''சுவாமி! பாமரர்களுக்கு மட்டுமே உருவ வழிபாடு அவசியம். நம் போன்றவர்களுக்கு தேவையில்லை'' என்று வாதிட்டார். 

விவேகானந்தர், உருவ வழிபாட்டின் மேன்மையை மணிக்கணக்காக எடுத்துச் சொல்லியும் சர்தார் wஜி ஏற்கவில்லை. அதன் பின், மாலை சிற்றுண்டியை முடித்தபின், இருவரும் கடைவீதிக்கு புறப்பட்டனர். 

வழியில் பக்தர்கள் சிலர் பஜனை செய்தவாறே கிருஷ்ணரின் திருவுருவ சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைக் கண்ட விவேகானந்தர் பரவசத்துடன், ''சர்தார்ஜி! அதோ... உயிருள்ள கிருஷ்ணரை தரிசித்து மகிழுங்கள்!'' என்று சொல்லிக்கொண்டே வலதுகை விரல்களால் சர்தார்ஜியின் முதுகைத் தீண்டினார். 

உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்ப்புக்கு ஆளானார் சர்தார்ஜி. அவரது உள்ளத்தில் ஆன்மிக ஞானம் சுடராக பிரகாசித்தது. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.''ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா!'' என்று கைகளை கூப்பி வணங்கினார் சர்தார்ஜி.

''சுவாமி... மணிக்கணக்கில் விவாதித்தும் உருவ வழிபாட்டை ஏற்க மறுத்த நான், தங்களின் விரல்கள் முதுகில் தீண்டியதும், சுலபமாக உணர்ந்து கொண்டேன். பகவான் கிருஷ்ணரை ஊனக்கண்களால் நேரில் தரிசித்து மகிழ்ந்தேன்.'' என்றார் சர்தார்ஜி.

தான் அறிந்த இறையனுபவத்தை, மற்றவருக்கும் உணர்த்தும் சக்தி விவேகானந்தருக்கு இருந்தது என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது. 

No comments:

Post a Comment