Saturday 12 May 2018

சந்திரன் சாபம் நீக்கிய திருமழப்பாடி திருத்தலம்


அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடம் வடகரையில் சுந்தராம்பிகை சமேத வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மழவர்கள் வாழ்ந்தமையால் மழவர்பாடி என்றாயிற்று. இதுவே பின்னாளில் திருமழப்பாடி என்றழைப்பட்டது. மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் என்பதால் மழுபாடி என்ற பெயர் வந்ததாகவும் புராணம் கூறுகிறது. கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது இக்கோயில். மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சம் பனை மரம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற  தலம். மனித தலை, மிருக உடலமைப்பை கொண்ட புருடாமிருகரிஷி வழிபட்ட தலம் இது. நடராஜர் சன்னதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில்  இருந்து தனர் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

கோயில் வரலாறு

தக்கன் தனது  27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். இதையடுத்து எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்துக்கு ஆளாவாய் என சந்திரனை தக்கன் எச்சரித்தான். ஆனாலும் சந்திரன் எப்போதும் போல ரோகிணியிடம் மட்டுமே அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்கு இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன். இறைவன் சந்திரனின் முன் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய் என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால் இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.இதேபோல் முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமி தேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னதிக்கு எதிரே லட்சுமி தேவி நீராடிய குளம், லட்சுமி தீர்த்தம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக்கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நந்திகேசுவரர், சுயசாம்பிகை திருக்கல்யாணம்

கோயிலில் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசுவாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.  இதில் திருவையாறு ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும் கலந்துகொண்டு நந்திகேசர் திருமணத்தை தாமே முன்னிட்டு நடத்தி வைப்பதாக ஐதீகம். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாதவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. நவகோள்களின் காரணமாக பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை இறைவனே முன்னிட்டு தீர்த்து வரம் தருகிறார். பழமையான வெண்கல பாவை விளக்கு மூலவர் சன்னதி முன் உள்ளது. இதன் அருகே உள்ள மூன்று குழிகளில் எள் தீபமிட்டு சுவாமியை மனம் உருகி வேண்டினால் சகல தோஷங்களையும் வைத்தியநாதசுவாமி அகற்றிவிடுவார் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment