Friday 11 May 2018

பதிலுக்கு பதில்


சோம்பேறி குணம் படைத்த துறவி ஒருவர், உணவை எதிர்பார்த்து காத்திருந்தார். மூதாட்டி ஒருத்தி சோற்று மூடையுடன் எதிர்ப்பட்டாள். அவளிடம் தனக்கு உணவை அளிக்கும்படி துறவி கேட்க, அவளும் சம்மதித்தாள். கடமை உணர்வு மிக்கமூதாட்டி, “சுவாமி! ஆற்றுக்கு சென்று நீராடி வாருங்கள். அதற்குள் உணவை தயாராக எடுத்து வைக்கிறேன்” என்றாள். ஆனால், துறவிக்கு குளிக்க மனமில்லை. 

“ஒன்றும் கவலையில்லை அம்மா.... எப்போதும் கோவிந்த நாமத்தை ஜெபிப்பவன் நான். இந்த நாமத்தைச் சொல்பவர் யாராக இருந்தாலும் அவரது உள்ளமும், உடலும் எப்போதும் துாய்மையாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். 'கோவிந்தேதி சதாஸ்நானம்' என்று இதைச் சொல்வர்” என்றார். ஏதுமறியாத பாமரப்பெண் போல இருந்தாலும், பக்தியில் சிறந்த மூதாட்டி சாஸ்திர ரீதியாக பதிலளித்தாள். 

“ராம நாமத்தைச் சொன்னால் போதும். அதுவே உணவுக்கு ஈடானது. 'ராம நாமாமிர்தம் சதா போஜனம்' என்பார்கள் பெரியவர்கள். அதாவது ராமநாமம் என்னும் உணவை எப்போதும் உண்ணுங்கள் என்பது இதன் பொருள். அதனால் நீங்களும் சாப்பிட்டதாக கருதி புறப்படலாம்” என விளக்கினாள். மூதாட்டியின் பதிலைக் கேட்ட துறவி, குளிப்பதற்கு ஆற்றை நோக்கி நடந்தார். 

No comments:

Post a Comment