Saturday 12 May 2018

மணக்கோலத்தில் மங்களம் அருளும் தென்கரைக்கோட்டை கல்யாண ராமர்


தர்மபுரியில் அதியமான்கோட்டைக்கு இணையான புகழ்பெற்றது தென்கரைக்கோட்டை. இந்த கோட்டையில் கல்யாணக்கோலத்தில் அருள்பாலிக்கும் ராமர், எந்த வடிவில் திருமணத்திற்கு தடை வந்தாலும் அதை நிவர்த்தி செய்து, மங்களகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவார் என்பது ஆண்டாண்டு காலமாய் வழிபடும் மக்களின் நம்பிக்கை.  13ம் நூற்றாண்டில் தர்மபுரியை விஜயநகர பேரரசின் கடைசி குறுநில மன்னர்களான சீலப்பநாயக்கர், சென்னப்பநாயக்கர் மற்றும் வகையறாக்கள் ஆட்சி செய்தனர். அப்போது மொரப்பூரை மையமாக கொண்டு வரிவசூலித்தனர். வசூலுக்கு செல்லும்போது ஓய்வெடுக்க, கல்லாற்றின் கரையில் தரைக்கோட்டை கட்டினர். இது தான், காலச்சுழற்சியில் தென்கரைக்கோட்டையாக மாறியது.

விஷ்ணு பக்தர்களான மன்னர்கள், கோட்டையில் ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது கனவில் ராமர், கல்யாண கோலத்தில் காட்சியளித்துள்ளார். மேலும் கோட்டையில் இதே கோலத்தில் எனக்கு கோயில் அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இரண்டு மன்னர்களுக்கும் ஒரே நேரத்தில் இது போன்ற கனவு வந்ததால் அதை, விஷ்ணுவின் கட்டளையாக கருதி கோட்டைக்குள் கோயில் கட்டினர். இப்படி ராமர், லட்சுமணர், அனுமர், சீதையுடன் காட்சியளிக்கும் கல்யாணக் கோயில், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இந்த கோயிலுக்குள் நுழையும் ேபாதே மன்னர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக குதிரைலாயம், தர்பார் மண்டபம், குளியல் அறை, தானியக்கிடங்கு என்று அனைத்தையும் நாம் காணலாம். கோட்டை கோயிலை 18 ராட்சத தூண்கள் தாங்கி நிற்கிறது. 

இதில் ஒவ்வொரு தூணை தட்டும் போதும், ஒவ்வொருவிதமான இசை வெளிப்படுகிறது. மணக்கோலத்தில் காட்சியளிக்கும் அழகன் ராமனை, தூண்களை தட்டி இசைத்து பக்தர்கள் வழிபடுவது, வேறு எங்கும் இல்லாத சிறப்பு. கல்யாணராமர் மட்டுமல்லாமல் நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சநேயர், அம்மன், விநாயகர், முருகன், முனியப்பன் என்று ஏராளமான தெய்வங்களுக்கு கோட்டையில் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிலைகள், முன்னோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் அற்புத சிற்பங்கள், இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான இடம் என்று ஒரு அரிய சூழலை பார்க்கும் போதே மனதிற்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடுகிறது தென்கரைக்கோட்டை. இந்த சூழலில் மனதை ஒருமுகப்படுத்தி ராமரையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவது உண்மையிலேயே இதயத்திற்கு இதமளிக்கிறது என்கின்றனர் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளும் பக்தர்கள்.

தடைநீங்கி, மணம் முடித்த தம்பதிகள், தங்கள் மனதில் என்ன நேர்த்திக்கடன் வைத்தார்களோ, அதை நிறைவேற்றினாலே போதும். வம்சம் தழைக்கவும் வழிகாட்டுவார், மங்கள நிகழ்வுகள் அனைத்திற்கும் துணை நிற்பார் கல்யாணராமர் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் அமாவாசை, சித்ராபவுர்ணமி, ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் என்று அனைத்து நாட்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அலையென திரண்டு கல்யாண ராமரை கரிசனத்துடன் வழிபட்டு செல்கின்றனர்.

மதங்களின் ஒற்றுமை காக்கும் கோட்டை

கல்லாற்றின் கரையில் அமைந்துள்ள தென்கரைக்கோட்டையில் கல்யாணராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் வடது கரையில் இந்துக்கள், தென்கரையில் கிறிஸ்தவர்கள், கோயிலை சுற்றி இஸ்லாமியர்கள் என்று மும்மதங்களை சேர்ந்த மக்களும் திரளாக வசித்து வருகின்றனர். சகோதரர்களாய் அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் வாழும் இவர்கள், மதங்களை கடந்து ராமரை வழிபடுவதும், மும்மத ஒற்றுமைக்கும் உதாரண புருஷர்களாக திகழ்வதும் தென்கரைக்கோட்டை மண்ணின் பெரும்சிறப்பு.

No comments:

Post a Comment