Wednesday 2 August 2017

திக்கற்றோருக்கு துணைநிற்கும் வழிவாய்க்கால் காளியம்மன்


சேலம் மாநகர பகுதியான தாதகாப்பட்டியில் உள்ளது வழிவாய்க்கால் காளியம்மன் கோயில். ஆனால் சீலநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, கம்மாளப்பட்டி, கருங்கல்பட்டி, களரம்பட்டி என்று பட்டி தொட்டி மக்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் திரண்டு வழிபடுவது தான் இந்த கோயிலின் தனிச்சிறப்பு. இதற்கு காரணமும் இருக்கிறது என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். இன்று தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள், ஆயிரமாயிரம் உள்ளன. ஆனால் ஒரு காலத்தில் கிராமத்து ஆண் காவல் தெய்வங்களை முனியப்பன், கருப்பண்ணன், நாட்டுமுனி, சங்கிலிபாண்டி, சுடலைமாடன், பெரியசாமி, பெரியண்ணன் என்று வழிபட்டனர். கிராமத்திற்கு துணை நிற்கும் பெண் தெய்வங்களை காவல் தேவதைகளாக வழிபட்டனர். அப்படி கிராமத்து காவல் தேவதையாய் வலம் வந்து ஆண்டாண்டு காலமாய் அருள்பாலித்து மக்களை காத்து நிற்பவள் தான் வழிவாய்க்கால் காளியம்மன்.  

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டீசாரின் காலனி ஆதிக்கத்தின் போது அம்மை, காலரா போன்ற கொள்ளைநோய்கள் மக்களை பரவலாக தாக்கியது. போதிய மருந்துகளோ, உயரிய சிகிச்சைகளோ இல்லாத கால கட்டத்தில் மக்கள், கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தனர். நோய் தொற்று பரவி விடுமோ? என்ற அச்சத்தில் அறிகுறிகள் தென்பட்ட பலரை, செல்வந்தர்கள் ஊரை விட்டு விரட்டினர். இப்படி விரட்டப்பட்ட பலர், திருமணிமுத்தாற்று வாய்க்காலின் வழித்தடக்கரையில் குடில் அமைத்து தங்கியிருந்து, அம்மனை கண்ணீர் மல்க வழிபட்டனர். தினமும் வாய்க்காலில் நீராடி பயபக்தியுடன் பூஜைகளை செய்தனர். அப்போது காவல் தேவதையாய் வலம் வந்த காளி, அவர்களை கொடிய நோய்களின் பிடியில் இருந்து விடுவித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

திருமணிமுத்தாற்று வாய்க்கால் கரையில் திக்கற்று நின்றவர்களுக்கு வழிகாட்டி, காத்து நின்ற காளியை வழிவாய்க்கால் காளியம்மன் என்று கொண்டாடினர். அம்மனின் கருணையால் ஈர்க்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் இணைந்து, காவல் தேவதையான அம்மனுக்கு கோயில் கட்டி அங்கேயே குடிவைத்தனர். ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் முடிந்த கையோடு அம்மனுக்கு 22 நாட்கள் விழா எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வகையில் நடப்பாண்டுக்கான வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் பெருவிழா, தை மாதம் 4ம் தேதி  பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

தொடர்ந்து கொடியேற்றுவிழா, அபிஷேக ஆராதனை, புஷ்ப ஊஞ்சல் அலங்காரம், நவக்கிரகபூஜை, சக்தி அழைப்பு, பாலாபிஷேகம், சத்தாபரணம், வாணவேடிக்கை என்று வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் வளாகம் முழுவதும் பக்தி மணம் வீசிக்கொண்டிருக்கிறது.  அம்மனை வழிபடத் திரளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர், வனத்தாயம்மன், கருப்பண்ணசாமி, வில்லேஸ்வரன், லட்சுமி நாராயணன், சந்தானமுனிவர், வெண்ணங்கொடி முனியப்பன், கன்னிமார், பைரவர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக சன்னதிகளையும் வழிபட்டு மனநிறைவோடு திரும்பிச் செல்கின்றனர்.

குண்டம் மிதித்து நேர்த்திக்கடன்

வழிவாய்க்கால் காளியம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், மனமுருக தங்கள் குறைகளை சொல்லி வழிபடுவர். அதற்கு தீர்வு கிடைக்கும் போது, தீக்குழியில் இறங்கி குண்டம் மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து வருகிறது. இந்த வகையில் நடப்பாண்டு, பக்தர்கள் குண்டம் மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் வரும் பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது. இதற்காக கையில் மஞ்சள் காப்புக்கட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். அன்றைய தினம் சுற்றுப்புற பகுதி மக்கள் திரண்டு பொங்கலிட்டும், ஆடு, கோழி பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment