பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் இறைவழிபாட்டுக்கு முக்கியத் துவம் அளித்துள்ளனர். அதனால்தான் திரும்பிய பக்கமெல்லாம் கலைப்பொக்கிஷங்களான கோயில்களை கட்டினர். தஞ்சை பிரகதீஸ்வரர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார், மதுரை அழகர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காரமடை அரங்கநாதர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை உதாரணமாக கூறலாம். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரில் உள்ள ஸ்ரீ வைகுந்தவாசப்பெருமாள் கோயிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சோழ பல்லவராஜா கட்டியுள்ளார். அதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த ஆலயம் பல கலைவேலைப்பாடுகளை கொண்டது. ஆலயத்தின் உள்ளே 4 சிங்ககால் மண்டபம் அமைந்துள்ளது.
மேலும் இந்த ஆலயத்தின் சுற்றுமதில் மற்றும் சில வேலைப்பாடுகளை 16ஆம் நூற்றாண்டில் பரகேசரிவர்மன் என்ற மன்னன் செய்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் அன்றைய வழக்கப்படி சுகபுரி என்று அழைக்கப்பட்டது. சுகபிரம்மரிஷி என்ற முனிவர் இங்கு தங்கி தவம் செய்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு கிளிவளநல்லூர் என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது கிளியனூர் என்று மருவி அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் இவ்வளவு பெரிய வடிவில் அமர்ந்த கோலத்தில் வேறு எங்குமே பெருமாள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேற்கு நோக்கிய அழகிய சுதைவடிவ சிற்பங்களுடன் கூடிய கோபுரம், கருவறையில் வீற்றிருக்கும் பெருமாளும் மேற்கு நோக்கியே உள்ளார். அதிலும் எங்கும் இல்லாதபடி தனது மனைவிமார்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இங்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது. மேற்கு நோக்கியபடி அமர்ந்திருப்ப தால் பக்தர்கள் மனதில் நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம். மேலும் பெருமாளுக்கு நேர் எதிரே உள்ள கருடாழ்வாரும் அமர்ந்த கோலத்திலேயே உள்ளார் என்பது இந்தக்கோயிலுக்கு உள்ள மற்றொரு சிறப்பாகும். இந்த கருடாழ்வார் தச நாகத்தை தனது திருமேனியில் ஆபரணமாக அணிந்துள்ளார். திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருமண கோலத்தில் ஸ்ரீ வைகுந்த வாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோருடன் காட்சி தருவதால் பக்தர்களுக்கு விரைவில் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று நம்புகிறார்கள். பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெருமாளின் திருநாமம் கூறப்படுகிறது. கோயிலின் இடது புறத்தில் அம்பாள் ஜனகவள்ளி தாயார் தனி ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தில் திருக்கல்யாண வைபோகம், பிரதி மாதம் அமாவாசை தினத்தில் இரவில் சுவாமி உள்பிரகார புறப்பாடு, புரட்டாசி மாத்தில் வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலின் தலவிருட்சம் துளசி. இந்த கோயில் தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் உள்ளது. 24 மணிநேரமும் பேருந்து வசதி உண்டு.
No comments:
Post a Comment