திருநாரையூர்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், திருநாரையூர் கிராமத்தில் அருள்மிகு ஐயனார் கோயில் அமைந்துள்ளது. பரிவார தேவதைகளும் பலிபீடமும் கொண்டு, தொன்மைச் சிறப்புடன் மிளிர்கிறது இந்த ஐயனார் கோயில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலக் கருவறையில் உள்ள தனிபீடத்தில் ஐயனார், தனது தேவியர்களான பூரணை மற்றும் புஷ்கலையுடன் அமர்ந்து தரிசனம் அளிக்கிறார். முன்பு வழிபாட்டில் இருந்த மூலவரின் திருவுருவத்தின் இடது கால் சற்று பின்னமடைந்ததால் அவரை எடுத்து வேறு தனி மேடையமைத்து பக்கத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஐயனார் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து ஊன்றி வைத்து சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலது கையில் சாட்டையைப் பிடித்திருக்கிறார். இடது கை, இடது முழங்கால் மீது பதிந்துள்ளது. தலையில் ஜடாபாரம் அமைந்துள்ளது. காதுகளில் பத்ரகுண்டலம் சூடியுள்ளார். மார்பில் மூன்று ஹாரங்கள் அணிந்துள்ளார்.
இடுப்பில் உடுத்தியுள்ள ஆடை தொடை வரை நீண்டுள்ளது. ஐயனாரின் வலது பக்கம் அவரது தேவியான பூரணை அமர்ந்துள்ளாள். தலையில் கரண்ட மகுடம், இடது கையில் பூச்செண்டு பிடித்தும், வலது கையை மடிமீது வைத்தும் அருட்கோலம் காட்டுகிறாள். இடது பக்கம் மற்றொரு தேவியான புஷ்கலை அமர்ந்துள்ளாள். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு, ஐயனாரின் இடதுபுறம் ஒரே மேடையில் அமர்ந்துள்ளாள். வலது கை மலர்ச்செண்டை ஏந்த, இடது கை தொடையில் ஊன்றியுள்ளது. தலையில் கரண்ட மகுடமும், கால்களில் மகரகுண்டலங்களும் அழகு செய்கின்றன. மார்பில் மணிமாலைகள் எழிலூட்டுகின்றன. இவ்வாறு மூலவர் ஐயனார் தனது தேவியர்களாடு ஒரே மேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரமளிக்கும் இன்முகத்தோடு காட்சி தருகின்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் தைப்பொங்கல் பண்டிகை, தமிழ் வருடப்பிறப்பு நாட்களிலும் இந்த ஐயனாரைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பெருந்திரளான வந்து வழிபடுவது பிரமிப்பாக இருக்கும். அவர்கள், திருக்குளத்தில் நீராடி பொங்கலிட்டு மாவிளக்கேற்றி, முடி காணிக்கை தந்து, காது குத்தி, தத்தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தொன்று தொட்டு வாழையடி வாழையாக மக்கட் செல்வத்துடன், பிற எல்லா வளமான செல்வங்கள் யாவும் பெற்று வளமுடனும், நலமுடனும் வாழ வைப்பதால் இந்த ஐயனார் ‘மங்காமல் காத்த ஐயனார்’ என்றும் வணங்கப்படுகிறார். அல்லவை தேய்ந்து நல்லவை வளர வாழ்வளிக்கும் ஐயனாரை தரிசித்து பலனடைவோம்.
No comments:
Post a Comment