பித்தனாய், பிறைசூடியாய், அருளாளனாய், சித்தமெல்லாம் சிவமாக்கிய இறைவன் சிவன். ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்கிற மந்திரம் நெஞ்சத்து அழுக்கையெல்லாம் துடைக்கும் ஆற்றல் பெற்றது. கோவை வெள்ளலூரில் உள்ளது தேனீஸ்வரர் கோயில். பழமை வாய்ந்த இந்த கோயில் அன்னதான சிவபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவராக தேனீஸ்வரர் உள்ளார். முன்பு இப்பகுதி சோலைகள் சூழ்ந்து இருந்தது. சோலை மலர்களிலிருந்து தேனை எடுத்த தேனீக்கள், அந்த தேனை சேமிக்காமல் சுயம்புலிங்கம் மீது அபிஷேகம் செய்தன. அதனால் தேனீஸ்வரர் என்று பெயர் வந்ததாம்.
சித்திரை மாதம் முதல் நாளில் சூரியக் கதிர்கள் தேனீஸ்வரர் மீது பட்டு, ஒளிவெள்ளத்தில் கருவறை முழுவதும் நிரம்பி அதி அற்புதமாகத் தோன்றும். தேனீஸ்வரருக்கு இடப்பக்கமாக அம்பிகை சிவகாம சுந்தரியின் கருவறை உள்ளது. தனித்தனி கோயில்களாக இல்லாமல் ஈசனும், தேவியும் ஒரே கோபுரத்தின் கீழ் வீற்றிருக்கிறார்கள். திருமணஞ்சேரிக்கு சென்று பூஜிக்கும் பலனை இந்த அம்பிகையிடம் இருந்தே பெறலாம். தாமரைப் பூ ஏந்தி நிற்கும் தேவியிடம் திருமணத் தடைகள் பற்றி மனதார முறையிட்டு, இங்கு பூஜை செய்யும் அனைவருக்குமே திருமணம் நடக்கிறது. அம்மை அப்பனை வணங்கி வலம் வரும் போது பக்தர்கள் பிரகார தெய்வங்களையும் வணங்கி வருகிறார்கள்.
இங்கு சூரிய பகவானுக்கு தனி சன்னிதியும் உள்ளது. ஞாயிற்று கிழமைகளில் சூரிய நீச்சம் உள்ளவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து பலன் அடைந்து வருகிறார்கள். ஓம்கார வடிவில் உள்ள விநாயகர் சிலையானது வெங்கற்களால் செய்யப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் வருடம் பழமையானது. வெங்கற்களால் ஆன பஞ்சலிங்க மூர்த்தமும் உள்ளது. இதுதவிர, பாலதண்டாயுதபாணி, துர்க்கை அம்மன், சண்டிகேசுவரரும் அருள்பாலிக்கின்றனர். பளிங்கு கற்களால் ஆன நந்தி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வரும் 14ம் தேதி இங்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது.
2 ஆயிரம் ஆண்டு பழமையானது
கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் சரிவர கணிக்க முடியாத 50 பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த கோயில் முகப்பில் உள்ள தோரணக்கல்லில் வட்ட எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட செய்திகள், 2ம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தக சோழன் பற்றியது. சேர மன்னன் கோக்கண்டன் வர நாராயணன் காலத்து கல்வெட்டு 11ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதே போல் கோக்கண்டன் ரவி எனும் சேர மன்னனின் கல்வெட்டும் இங்கு உள்ளது. இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது முருகப்பெருமானின் செப்பு சிலை ஒன்று கிடைத்தது.
இது 5ம் நூற்றாண்டை சேர்ந்தது. இதனுடன் 4 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட பெரிய கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இந்த கல்வெட்டு தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. மேலும், கோயிலின் நுழைவு கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறம் உள்ள அருட்பெருஞ்சோதியின் சிறு மண்டபத்திற்கு கீழே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து தோண்டிய பொழுது, அது கோயிலின் நந்தி மண்டபம் வரை நீண்டு சென்றுள்ளது. தொடர்ந்து சுரங்கப் பாதையின் முடிவை கண்டறிய தோண்டிய போது ‘எம்மை பற்றிய ஆராய்ச்சிகளை செய்யாதே’ என்று தெய்வ கட்டளை வந்ததால் நிறுத்தப்பட்டது. இங்கு பிரகாரத்தில் உள்ள பஞ்சலிங்க மூர்த்தியும், அவருக்கு அருகே உள்ள சித்தி விநாயகர் சிலையும் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment