முருகனின் அடியவரான, கிருபானந்த வாரியார், இளைஞராக இருந்த போது, சென்னையில் தங்கி தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் மூன்று ஆண்டாக வீணை கற்றார். வாரியாரின் தந்தை மல்லையதாசர், அந்த ஆசிரியருக்கு குருதட்சணையாக இரு வேட்டிகளை அனுப்பி வைத்தார். ஆனால், வாரியாருக்கு அந்த வேட்டியுடன் கொஞ்சம் பணமும் கொடுக்க ஆசை. ஒரு முருகன் கோயிலுக்குச் சென்று,""முருகா! குருநாதருக்கு காணிக்கை கொடுக்க காசில்லையே!'' என வருத்தப்பட்டு வேண்டினார்.
மறுநாளே, புரசைவாக்கத்தில் ஒரு வீட்டு சுபநிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற திடீர் அழைப்பு வந்தது. அதற்கு சன்மானமாக நாற்பது ரூபாய் அளித்தனர். புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன் வாரியார் நகைக்கடைக்குப் புறப்பட்டார். அப்போது பவுன் 13 ரூபாய் 2 அணா (12 காசு)விலை விற்றது. இரண்டரை பவுனில் தங்கச் சங்கிலியும், அரை பவுனில் ராமர் பட்டாபிஷேக டாலரும் வாங்கிக் கொண்டார். அத்துடன் பாதாம்பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு குருநாதர் வீட்டுக்கு வந்தார். அப்பா கொடுத்த வேட்டியுடன் அவற்றையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து குருநாதரின் காலில் விழுந்தார்.
""குருவே! என்னை காங்கேயநல்லூருக்கு (வாரியாரின் சொந்த ஊர்) வரும்படி அப்பா கட்டளையிட்டுள்ளார். தங்களுக்கு இதையும் விட இன்னும் அதிகமாகத் தருவதற்கு, ஏழையான அடியேனிடம் காசில்லை. இந்த சிறு காணிக்கையை ஏற்று ஆசிர்வதியுங்கள்'' என்று கண்ணீர் மல்க நின்றார்.
""நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் எப்போதும் துணையிருக்கும்! சவுக்கியமாகப் போய் வா!
சென்னைக்கு வரும்போது என்னை வந்து பார்'' என்று குருநாதரும் ஆசியளித்து அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment