Saturday, 19 August 2017

குழந்தை செல்வம் வழங்கும் தேவி கருமாரியம்மன்


மனிதன் தனது வாழ்க்கை செம்மையாக நடக்க வேண்டுமானால் கடவுள் மீதான பயமும், பக்தியும் இருக்க வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு உலகம் தோன்றி நாகரீகம் வளர்ந்த காலம் தொட்டு ஆண்டவனை வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கடவுளை வணங்கி நேர்த்தி கடன் ெசலுத்துகிறார்கள். அகிலத்தை ஆள்பவர் ஒருவர் என்றாலும், ஆயிரம் பெயர்களில் ஆண்டவனை தொழுகிறோம். ஆரம்பத்தில் ஏதாவது மரம் ஒன்றின் அருகில் கடவுளுக்கு இடம் ஒதுக்கி வணங்கினர். பின் அது வசதிக்கு ஏற்ப கோயில் கட்டி தொழுதனர். இப்படி மக்கள் மத்தியில் வளர்ந்த பக்தியின் வேகம் நாளடைவில் பெரிய பெரிய கோயில்கள் கட்டி வழிபாடு நடத்தும் வகையில் உயர்ந்தது. நமது நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்களுக்கு பல புராண பின்னணிகள் உள்ளது போல், சமீபத்தில் கட்டப்பட்ட கோயில்களிலும் பல அற்புதங்கள் நடப்பதின் மூலம் பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை மகாத்மாகாந்தி மார்க்கெட் மைய பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்தல வரலாறு

தங்கச்சுரங்கம் தொடங்கப்பட்ட 140 ஆண்டுகள் வரலாறு உள்ளது. சுரங்கத்தை தொடங்கிய ஜான்டைலர் அண்ட் கம்பெனியினர், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்தினர். மேலும் தொழிலாளர்களின் நலனுக்காக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ளது போல் ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன்பேட்டை என இரு மார்க்கெட் பகுதிகளை 120 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினர். அதில் ராபர்ட்சன்பேட்டை மார்க்கெட் பெரியளவில் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் வர்த்தக மையமாகவுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து தேவையான பொருட்கள் வாங்கி செல்கிறார்கள். மார்க்கெட்டின் மைய பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் மரம் ஒன்றின் கீழ் பாம்பு புற்று உருவாகியது. அந்த இடத்தில் வியாபாரிகள் தினமும் வந்து பூஜை செய்வார்கள். சிறியளவில் காணப்பட்ட புற்று நாளுக்கு நாள் வளர்ந்தது. 

மேலும் இந்த இடத்தில் வழிப்பட்டால் கஷ்டங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தியாவதாக பக்தர்களின் நம்பிக்கையும் வளர்ந்தது. மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்கவும், குடும்பத்தில் நிம்மதி பிறக்க இந்த இடத்தில் வேண்டிக்கொண்டனர். நல்லது நடந்தபின் நேர்த்தி கடனும் செலுத்த தொடங்கினர். அதன்மூலம் புற்று இருந்த இடம் பிரபலமானது. அதை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். கோயில் அமைந்துள்ள வளாகத்தில் புற்றும், மரமும் உள்ளது. அதற்கு இன்று வரை பக்தர்கள் பால் வார்த்து வருகிறார்கள். இரவு நேரத்தில் நாகத்தின் வடிவில் தேவி கருமாரி வலம் வருவதாக வியாபாரிகளும், பக்தர்களும் நம்புகிறார்கள்.

குழந்தை செல்வம் வழங்கும் தேவி 

மேலும் கோயிலுக்கு வந்து வேண்டுவோருக்கு திருமண தடை, குழந்தை செல்வம், வேலையில்லாதவர்களுக்கு வேலை, குடும்ப கஷ்டம் தீருதல், வியாபார விருத்தி உள்பட பல நன்மைகள் கிடைக்கிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இக்கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடக்கிறது. தசரா, தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடக்கிறது. தினமும் காலை தொடங்கி வரை வழக்கமான பூஜைகள் நடக்கிறது.

No comments:

Post a Comment