Saturday 19 August 2017

ஆளுக்கு ஆளு மாறுது


கங்கைக்கரையில் இருந்த குடிலில் ஒரு சாது குடியிருந்தார். இளைஞர் ஒருவருக்கு அவரோடு பழகும் ஆர்வம் எழுந்தது. தினமும் அவரது குடி<லுக்கு வந்து வேண்டிய உதவிகளைச் செய்தார். அவரது அன்பு உள்ளத்தைக் கண்ட சாது,""உன் பக்தியை மெச்சுகிறேன். விலை மதிப்பில்லாத பொருள் ஒன்றைத் தர விரும்புகிறேன். இதைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமை,'' என்று சொல்லி அருகில் அழைத்தார். அவரின் காதில் "ராம' நாமத்தை மூன்று முறை ஜெபித்தார். ""இதை இயன்ற பொழுதெல்லாம் ஜெபித்துக் கொண்டே இரு! உன் வாழ்வு நலம் பெறும்'' என்று ஆசிர்வதித்தார். 

இளைஞனுக்கு மனதிற்குள், ""ஏதாவது விலை மதிப்பில்லாத பொருளைக் கொடுத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரிலுள்ள அனைவரும் ஜெபிக்கக் கூடியது தானே இந்த ராமநாமம். இதை விலை மதிப்பில்லாதது என்று சொல்கிறாரே!'' என்று எண்ணித் 
தயங்கி நின்றார். 
இளைஞரின் மனநிலை சாதுவுக்குப் புரிந்தது. இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார். 

மறுநாள் இளைஞர், தன் சந்தேகத்தை சாதுவிடம் கேட்டு விட முடிவெடுத்து வந்தார். ஆனால், வந்தும் வராததுமாக, தன் கையில் இருந்த ஒரு கண்ணாடிக் கல்லை இளைஞரிடம் கொடுத்து, சந்தைக்குப் போய் அதன் விலை என்ன என அறிந்து வரும் படி அனுப்பினார்.

சந்தையில் தென்பட்ட காய்கறி வியாபாரியிடம் கேட்டார் இளைஞர். வியாபாரியோ, ""பார்ப்பதற்கு பளீரென மின்னும் இந்த கண்ணாடிக் கல் என் பிள்ளைகளின் விளையாட்டுக்குப் பயன்படும். இதற்கு விலையாக தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்,'' என்றார். 

இளைஞன் சாதுவின் குடிலுக்கு வந்தார். 

""கண்ணாடி ஈடாக காய்கறி வாங்கலாம்'' என்று தெரிவித்தார்.

""சரி! இப்போது காசுக்கடை வீதிக்குச் சென்று அவர்களின் எண்ணத்தை அறிந்து வா!'' என சாது அனுப்பி வைத்தார். 

அங்கிருந்தவர்கள், ""இதற்கு விலையாக ஆயிரம் ரூபாய் தரலாம்'' என்றார். இளைஞனோ, ""இதை விற்கும் நோக்கமில்லை. மதிப்பை அறியத் தான் இங்கு வந்தேன்'' என்று சொல்லி புறப்பட்டார்.

வரும் வழியில் சாது எதிரே வந்தார். இளைஞரும் நடந்ததைச் சொன்னார்.

""சரி! அப்படியே இருக்கட்டும். எனக்குத் தெரிந்த நகை வியாபாரியைப் போய் சந்திப்போம். அவர் இந்த கல்லுக்கு என்ன மதிப்பு கொடுக்கிறார் என்று பார்க்கலாம்'' என்று அழைத்துச் சென்றார். 
நகை வியாபாரி அந்த கல்லைப் பார்த்ததும் வைரக்கல் என்பதை அறிந்து கொண்டார்.
விலை மதிப்பு மிக்க அந்த கல்லுக்கு பல ஆயிரம் தருவதாகச் சொன்னார். ஆனால் சாதுவோ, ""இந்த கல்லை விற்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை!'' என்று இளைஞருடன் புறப்பட்டார். 
""ஆளுக்கு ஆள் விலை மாறுவதைப் பார்த்தாயா? இதன் உண்மையான மதிப்பை இன்னும் நாம் அறியவில்லை. விலை மதிக்க முடியாத வைரக்கல் இது. உன் மனதை தெளிவுபடுத்தவே இதைச் செய்ய நேர்ந்தது. ராமநாமத்தை யாரும் ஜெபிக்கலாம். அதை சொல்பவர் எவ்விதம் மதிக்கிறாரோ, அதைப் பொறுத்து அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். உனக்கும் இந்த ராம நாமம் விலை மதிப்பில்லாததாக இருக்கட்டும்,'' என்று சொல்லி ஆசியளித்தார்.

No comments:

Post a Comment