Thursday, 3 August 2017

பில்லி, சூன்யம் போக்கும் படைவீடு ரேணுகாம்பாள் : போளூர் தாலுகாவில் அருள்பாலிக்கிறார்


தொண்டை மண்டலத்து சக்தி தலங்களில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அம்மன் சுயம்புவாய் எழுந்தருளியுள்ளதுடன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு உலகில் சக்தியே எல்லாம் என அருள்புரிந்து வருகிறார். பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று உமாதேவி, இரைவத மகாராஜனின் மகளாய் பிறந்தார். அவளுக்கு ரேணுகா என பெயர் சூடப்பட்டது. ரேணுகாதேவி, ஜமதக்கினி முனிவரை திருமணம் செய்து கொண்டு பரசுராமர் என்ற மகனை பெற்றெடுத்தார். ரேணுகாதேவி தனது கணவரின் பூஜைக்காக கமண்டல நாகநதியில் இருந்து தினமும் மண்ணால் பானை உருவாக்கி அதில் தனது பதிபக்தியால் தண்ணீர் எடுத்து வருவார். 

அதேபோல் ஒரு நாள் பானையில் தண்ணீரை எடுத்தபோது வானவீதியில் சென்ற கந்தர்வன் சாயையை ஆற்று நீரில் கண்டு அவனழகையும், இளமையையும் எண்ணி ஆச்சரியப்பட்டாள். உடனே மண்குடம் உடைந்தது. இதை முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். தனது மகன் பரசுராமரை அழைத்து, ரேணுகாவின் (தாய்) தலையை வெட்டும்படி  ஆணையிட்டார். தந்தையின் ஆணையை ஏற்று அவரும் ரேணுகாவின் தலையை வெட்ட சென்றார். அப்போது ரேணுகாதேவியை காப்பாற்ற முயன்ற சண்டாளச்சி என்ற பெண்ணின் தலையை வெட்டினார். பின்னர் ரேணுகாவின் தலையையும் வெட்டினார். பின்னர் தந்தையிடம் வந்து தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன், பெற்ற தாயை கொன்ற என் கையையும் வெட்டிவிட்டேன் என்றார். 

அதற்கு முனிவர், வேண்டிய வரம் கேள் என்றார். உடனே பரசுராமன், பெற்ற தாயை மீண்டும் உயிர்ப்பித்து தர வேண்டும் என்றார். அவரும் மகன் விருப்பத்திற்கிணங்க கமண்டல நீரை மந்தரித்து கொடுக்க, அவர் அதை பெற்றுக்கொண்டு தன் தாய் வெட்டுப்பட்ட இடத்திற்கு சென்று அவசரகதியில் சண்டாளச்சி உடலில் தவறுதலாக ரேணுகாதேவியின் தலையையும், ரேணுகாதேவியின் உடலோடு சண்டாளச்சியின் தலையையும் ஒட்டும்படி வைத்து நீரை தெளித்தார். இருவரும் உயிர் பிழைத்த பிறகுதான் இருவரது தலை, உடல் மாறிபோனது தெரியவந்தது. பின் பரசுராமன் தன் தந்தையிடம் சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச்செயலால் நடந்தது. இனி இதை மாற்ற முடியாது எனகூறியதால் ரேணுகாதேவி, வேறுபட்ட உடலுடன் ஜமதக்கனி முனிவருக்கு பணிவிடை செய்து வந்தார். 

அப்போது ஒருநாளில் அங்கு வந்த கார்த்தவீரிய அர்ச்சுனன் ஜமதக்கனி முனிவரிடம் இருந்த காமதேனுவை தனக்கு வழங்கும்படி வேண்டுகிறார். முனிவர் வழங்க மறுத்ததால் அவரை கொன்று காமதேனுவை கார்த்தவீரிய அர்ச்சுனன் அழைத்து சென்று விடுகிறான். கணவர் இறந்ததால் ரேணுகாதேவி கணவர் உடலுடன் உடன்கட்டை ஏறினார். அச்சமயம் மழை பொழிந்தது, நெருப்பு அணைகிறது. இதனால் ரேணுகாதேவி கொப்புளங்களுடன் எழுந்து வேப்பிலை ஆடையை கட்டிக்கொண்டு மகன் பரசுராமனை நினைத்தாள். உடனே பரசுராமர் வந்து நடந்தவற்றை அறிந்து சினம் கொண்டு கார்த்தவீரியனை கொன்று,  சத்திரிய குலம் முழுவதும் அழிய சாபமிடுகிறார். இதனை கண்ட சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு தோன்றி கோபத்தை விட்டுவிடும்படியும், நடந்தவை எல்லாம் விதிப்பயனால் நடந்தது, யாராலும் தடுக்க முடியாது என கூறி சாந்தப்படுத்தினர். 

பின்னர் ஜமதக்கனி முனிவரை சிவபெருமான் உயிர்ப்பித்தெழ வைத்தார். அன்னை ரேணுகாதேவி, சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாக கொண்டு இப்பூவுலகில் பூஜை கருஉருவாய் விளங்கவும், ரேணுகாதேவியின் உடல், முனிவருடன் சொர்க்கத்துக்கு செல்லவும் அருள் வழங்கினார். அன்று முதல் ரேணுகாதேவி சிரசை பிரதானமாக கொண்டு படைவீட்டில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ‘இந்த கோயிலில் பார்வதி தேவியின் அவதாரமான ரேணுகாம்பாளின் தலை மட்டுமே உருவமாக இருக்க, அவளுக்கு துணையாக சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா போன்ற மூவரும் சூட்சும உருவில் இருப்பதாக ஐதீகம். 

ஆகவே இங்கு வந்து ரேணுகாதேவியை வணங்கினால் மும்மூர்த்திகளை சேர்த்து வணங்கியதற்கான புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். ஜமதக்கனி முனிவர் யாகம் செய்த இடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆனி திருமஞ்சனத்தின்போது வெட்டி எடுத்து வரும் திருநீருதான் இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை அணிந்தால் பிணிகள்நீங்கும். அம்மை, பில்லி, சூன்யம் போன்ற பிணிகளை நீக்கியும், திருமணம், குழந்தை வரம் என அனைத்து செல்வங்களையும் அளித்து வருகிறாள்.  ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 7வெள்ளி கிழமைகளிலும் ஆடி பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

பஸ் வசதி

திருவண்ணாமலை, ஆரணி, வேலூரில் இருந்து இந்த கோயிலுக்கு செல்லலாம். திருவண்ணாமலையில் இருந்து சென்றால் போளூர் சாலையில் செல்ல வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் உள்ளவர்கள் வேலூர் வந்து அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் செல்லலாம். சந்தவாசல் எனும் கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து படவேடு கோயிலுக்கு ஆட்டோக்களில் செல்லலாம்.

No comments:

Post a Comment