Thursday, 3 August 2017

நெல்லிக்காய் நட்டால் பத்துமடங்கு லாபம்


ஒருமுறை, குபேரன் துளி நீர் கூட அருந்தாமல் பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். அவனது தவத்தைக் கண்டு வியந்த பிரம்மா நேரில் காட்சியளித்து பொன்னும், மணியும் கொட்டும் புஷ்பக விமானத்தை வழங்கினார். இதை அறிந்த ராவணன், குபேரன் மீது போர் தொடுத்து புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டான். விமானத்தை இழந்த வருத்தத்தில் குபேரன் பலமற்றுப் போனான். இது தான் சரியான சமயம் எனக் கருதிய சுக்கிரன், குபேரனிடமிருந்த பொன், பொருளை கொள்ளையடித்தான்.

கைலாயம் சென்ற குபேரன் சிவபெருமானிடம் தன் நிலையைக் கூறி முறையிட்டான். பிறர் பொருளைக் கொள்ளையடித்த சுக்கிரனை வதம் செய்யும் நோக்கில் சிவன் திரிசூலத்தைக் கையில் எடுத்தார். ஆனால், தந்திரசாலியான சுக்கிரன் சூட்சும வடிவெடுத்து, சிவனின் வயிற்றுக்குள் நுழைந்து வாய் வழியாக வெளியேறினான். உடம்புக்குள் புகுந்து வெளி வந்ததால் சுக்கிரன், புத்திரனுக்குச் சமமாகி விட்டான். அவனைக் கொல்வது முறையல்ல என்ற பார்வதி சிவனைத் தடுத்தாள். 

அதன் பின் சிவன், ""குபேரா! உன் இருப்பிடமான அளகாபுரியில் நெல்லிவனத்தை உண்டாக்கு. நெல்லிமரத்தில் விரும்பி உறைபவள் மகாலட்சுமி. விரதமிருந்து அவளைத் தினமும் பூஜித்து வா. இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கப் பெறுவாய்'' என்று உபதேசித்தார். அதன்படி குபேரனும் நெல்லிக் கன்றுகளை நட்டு வளர்த்தான். தினமும் லட்சுமி தாயாரை விரதமிருந்து பூஜித்தான். அவனது பக்தி கண்டு மகிழ்ந்த லட்சுமி நேரில் காட்சியளித்து, அவன் இழந்த செல்வத்தை விட பத்து மடங்கு செல்வத்தை வழங்கினாள். 

No comments:

Post a Comment