இந்தியாவின் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்று சேத்தியாத்தோப்பு அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பூவராகவ சுவாமி கோயில். கடலூர் மாவட்டத்தின் பெருமையாக கருதப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலை போலவே இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க கோயில். பெருமாளின் குறிப்பிடத்தக்க அவதார திருத்தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. மச்ச, கூர்ம என தொடங்கும் அவதாரங்களில் 3வது அவதாரமான வராக அவதார திருத்தலமாக விளங்குகிறது.
தல வரலாறு
ஹிரண்யாசகன் எனும் அசுரன் பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்ததால் தேவர்களும், முனிவர்களும் பெருமாளிடம் முறையிட்டு புவியை காக்குமாறு வேண்டியுள்ளனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பூமியை காக்க புறப்பட்டிருக்கிறார் பெருமாள். தன் வழக்கமான உருவமான 4 கைகள், சங்கு சக்கரத்துடன் சென்றால், ஹிரண்யாசகன் நம் காலில் விழுந்து சரணாகதி அடைந்து உயிர் பிழைக்க கூடும் என எண்ணிய பெருமாள் வேறு ஒரு அவதாரம் எடுக்க விரும்பினார்.
அதன்படி பன்றி (வராகன்) அவதாரம் எடுத்து, பூமியை முட்டி கிளம்பி, தனது கோரை பற்களால் ஹிரண்யாசகனை வதம் செய்ததோடு பூமியை கடலில் இருந்து மீட்டு எடுத்துள்ளார். பெருமாள் பன்றி உருவில் இருப்பதால் பக்தர்கள் உள்ளிட்டோர் பரிகாசம் செய்வார்கள் என எண்ணிய தேவர்கள் பெருமாளிடம் பக்தர்கள் வணங்கும் பொருட்டு காட்சியளிக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் எக்ஞ வராகனாக காட்சியளித்துள்ளார். வந்த வேலை முடிந்து திரும்பி செல்ல தயாரான பெருமாளிடம் பூமாதேவி இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி பெருமாள் அவ்விடத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
கோயில் அமைப்பு
இங்குள்ள மூலவர் அசுரனை வென்றதால் ஏற்பட்ட வெற்றி பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு முகத்தை தெற்கு நோக்கி பார்த்த வண்ணம் உள்ளார். மூலவர் சாளக்கிராமமூர்த்தி அமைந்துள்ள இடத்தின் மேல் பகுதியில் சிதானந்த விமானம் என்று கூறப்படும் ஸ்வயம் வியக்க விமானம் உள்ளது. கருவறைக்கு முன்புறம் மேற்குபகுதியில் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. இங்கு எக்ஞ வராகன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். தென்மேற்கு மூலையில் தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி சன்னதி உள்ளது.
வடபுறத்தில் குழந்தையம்மன் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி எதிரே புருஷசுக்த மண்டபம் உள்ளது. இது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கலை நுட்பம் நிறைந்த மண்டபமாகும். இங்கு கற்களால் செய்யப்பட்ட சங்கிலி, இசைக்கருவி போல் ஒலிக்கும் கற்கருவி ஆகியவை அமைந்துள்ளது. கோயிலின் பின்புறம் திருக்குளம் உள்ளது. பெருமாளின் வியர்வையால் இது உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்குளத்தின் நீர் கங்கையை விட புனிதம் என்றும், இதில் நீராடுபவர்களுக்கு பாவம் நீங்கும் எனவும் கூறப்படுகிறது. குளத்தின் அருகே அரச மரம் உள்ளது.
இங்கு பெருமாள் அரச மர வடிவில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இது அசுவத்த நாராயண கோயில் எனவும் கூறப்படுகிறது. பக்தர்கள் திருக்குளத்தில் நீராடிவிட்டு அசுவத்த நாராயண கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அதன்பிறகு பெருமாளை தரிசிக்கின்றனர். மூலவரை வழிபடும்போது மூலவருக்கு பூஜை செய்த குழைவு சீனி, கோரை கிழங்கு, அரிசி மாவு ஆகியவை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது
இஸ்லாமியர் வழங்கும் பட்டு
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கிள்ளை கடற்கரையில் நடைபெறும் மாசி மக தீர்த்தவாரிக்கு இங்கிருந்து பெருமாள் செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள இஸ்லாம் சமூகத்தினர் பெருமாளுக்கு மாலை, பட்டு சால்வை உள்ளிட்டவைகள் அளித்து வரவேற்பார்கள். கோயில் சார்பில் பெருமாள் அணிந்த மாலை, பட்டுத்துணி ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும். இது இந்து முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துகாட்டும் விதமாக உள்ளது.
ஜில்லிகா வனம்
திருமுட்டம் என்ற தமிழ்ச்சொல்தான் ஸ்ரீமுஷ்ணம் என்றாகியிருக்கிறது. பன்றி ரூபத்தில் பெருமாள் பூமியை முட்டிய இடம் என்பதால் இவ்வூருக்கு திருமுட்டம் என்ற பெயர் வந்தது. பழங்காலத்தில் ஸ்ரீமுஷ்ணம் ஜில்லிகா வனம் என்ற பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. ஹிரண்யாசகன் மகள் ஜில்லிகா ஒரு விஷ்ணுபக்தர். இவருக்கு தண்டகன் எனும் மகன் இருந்தான். இவன் அசுரர்களுடன் சேர்ந்து தேவர்களோடு போர்புரிந்து மாண்டான் எனவும், மகன் இறந்த சோகத்தில் ஜில்லிகை, தனது உயிரை போக்கி வைகுண்டம் அடைந்தாள் எனவும் கூறப்படுகிறது. இதனால் பெருமாள் இவ்வூரை ஜில்லிகை நினைவாக ஜில்லிகாவனம் என அழைத்ததாக கூறப்படுகிறது.
எப்படி போகணும்?
உடையார்பாளையம் ஜமீன் குடும்பத்தினர் நிர்வகித்து வந்த இந்த கோயில் நாளடைவில் அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கோயில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். நீங்களும் இக்கோயிலுக்கு போகணுமா? விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் பகுதிகளில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஸ்ரீமுஷ்ணம் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே கோயில் அமைந்துள்ளது.
வேண்டுதல், நேர்த்திக் கடன்
பூவராகவ பெருமாளை வழிபட்டால் புத்திர தோஷம், திருமண தடை உள்ளிட்டவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறினால் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். பன்றிகள் மீது வாகனம் மோதினால் ஆபத்து என்று நம்புகிறவர்கள் இந்த தலத்திற்கு வந்து பூஜை செய்துவிட்டு போகிறார்கள். பூவராகவ பெருமாளை சேவித்தவர்களை சேவித்தாலே மகாபாக்கியம் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment