தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு செந்தில்வேலன், தண்டாயுதபாணி, சுப்ரமணி, சண்முகம், ஆறுமுகம், அழகர், குமரன் உள்பட பல பெயர்களில் பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் பரணி நட்சத்திரத்தில் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருகபெருமானுக்கு வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். பூகாவடி, தேர்காவடி உள்பட பல நேர்த்தி கடன்கள் செலுத்துவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு ஆடிக்கிருத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது. முன்னொரு காலத்தில் அகஸ்திய மாமுனி இமயமலைச் சாரலில் சிவகிரி, சக்திகிரி என்ற இரு மலைகளை பூஜித்து பொதிகை மலைக்கு புறப்படும் போது இரு மலைகளையும் எடுத்துக் கொண்டு கேதாரமலை வரை கொண்டு வந்து அங்கே இளைப்பாறினார். அதன்பின் அம்மலையை தூக்க அவரால் முடியவில்லை. அப்பொழுது அவர் முன் சூரப்பத்மனின் நண்பன் இடும்பாசூரன் வந்து, நானும் சூரப்பத்மனைப்போல அழியாப்புகழ் பெற வேண்டி முருகப்பெருமானை நோக்கி தவமிருக்கின்றேன்.
முருகனின் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினான். அதற்கு அகத்தியர் இவ்விருமலை சிவ சக்தியாகும். முருகனின் தாய், தந்தை அம்சமான இம்மலையை நீ காவடிபோல் தூக்கி பொதிகைமலை வரை கொண்டு வந்தால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லி மலையை எளிதில் தூக்கி வரும் மந்திரமான அரோகரா! அரோகரா! என்று சொல்லிக் கொடுத்து தூக்கிவரப் பணித்தார். இவ்வாறு இடும்பாசூரன் காவடிபோல் மலைகளை தூக்கி வரும்போது வரும் வழியில் திருவாவினன்குடியில் வைத்து சற்று இளைப்பாறினான். மீண்டும் எடுக்க முயற்சித்த போது எடுக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்திருந்த வேலன், இடும்பனை பார்த்து பலசாலியாக இருக்கிறாய், இதை தூக்க முடியவில்லையா என்று கேலி செய்தார். இதை கண்டு சீறிய இடும்பன் வந்திருப்பது யார் என்று அறியாமல் சினம் கொண்டு தூக்க முற்பட்டு கீழே விழுந்தான்.
அவ்வாறு விழுந்தவனை அணைத்து ஆசீர்வதித்த குமரன் கையில் வேலாகவும், வேல்முருகனாகவும் காட்சி தந்த நாள் ஆடிக்கிருத்திகை தினம் ஆகும். எனவே முருகனின் தரிசனம் கிடைத்து நீங்காப் புகழ்பெற்ற இடும்பனைப்போல் எல்லா பலனும் இந்நாளில் முருகனை பழனிமலையில் தரிசிப்போர் அடைவர் என்று அகஸ்திய மாமுனி கூறினார். எனவே முருகனை பழனிமலை சென்று வழிபடுதல் சாலச்சிறந்தது.பழனி மலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சித்து இரு நெய் விளக்கை, அதாவது பழனி முருகனுக்கு ஒன்றும் மற்றொன்றை அங்குள்ள முருகப் பெருமானுக்குமாக ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் சகல நன்மை பெறலாம். முருகப் பெருமானின் சிறப்புகள் பெற்று இந்த ஆடிக்கிருத்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும். விவசாயம் மேன்மையடையும். உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். உடல் ஆரோக்கியம் பெருகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மக்கட்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.
No comments:
Post a Comment