Thursday, 10 August 2017

மலரட்டும் மகிழ்ச்சி!


சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இமயமலையில் திருமணம் நிகழவிருந்தது. 

முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்தார்கள். தேவேந்திரன் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

அசுரர் கூட்டமும் திரண்டு வந்திருந்தது. முனிவர்கள், பூதகணங்கள், பாமரர்கள் என்று இமைக்க முடியாத கூட்டம்.

வந்திருந்த ஆயிரம் முனிவர்களில் ஒருவர் ஒல்லியாக, குள்ளமாக இருந்தார். அவர் சிவபக்தியில் தோய்ந்தவர். 

தன்னையும் அறியாமல் முதல் வரிசைக்கு வந்துவிட்டார். ஒரு குட்டி தேவதை முனிவரைப் பார்த்து முகம் சுளித்தது. செல்வந்தர் வீட்டுத் திருமணத்தில் நம் தோற்றம், நம் ஆடை, நாம் அணிந்திருக்கும் நகைகள், நாம் வந்த வாகனம் இதற்குத் தகுந்தாற்போல்தான் நமக்கு மரியாதை கிடைக்கும். அதே நிலைதான் அங்கும்!

""கடைசி வரிசையில் உங்கள் நிலையில் இருப்பவர்களுக்கு இடம் போட்டிருக்கிறோம். இது ரிஷிகள் அமரும் இடம். முற்றும் உணர்ந்த முனிவரான உங்களுக்கு உங்கள் இடம் எது என்று தெரிய வேண்டாமா?''

இடம் தெரியாமல் முன்னால் வந்ததற்காக அந்தக் குட்டித் தேவதையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் அந்த முனிவர். பின் அந்தத் தேவதை சுட்டிக் காட்டிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டார்.

இந்தக் காட்சி தெய்வத் தம்பதியினரின் கண்களிலிருந்து தப்பவில்லை. இறைவன் பேசினான்:

""நாம் அனைவருமே பூமியின் வடபகுதிக்கு வந்து விட்டோம்.. இதனால் பூமி உருண்டையின் சமநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. வடபகுதி கொஞ்சம் கொஞ்சமாக நீரில் ஆழ்ந்து கொண்டிருக்கிறது.'' வந்தவர்கள் அதிர்ந்தார்கள்.

""யாராவது தென் திசை நோக்கிச் செல்ல வேண்டும்.''

இறைவன் தேவேந்திரனை உற்று நோக்கினார்.

""என்னால் சத்தியமாக முடியாது இறைவா! உங்களுக்கும் அன்னைக்கும் நடக்கவிருக்கும் திருமணம் என்பது என் வாழ்நாளிலேயே ஒரே ஒரு முறை வரும் நிகழ்ச்சி. அதைப் பார்க்காமல் தெற்கே போகச் சொன்னால் என்னால் எப்படிப் போக முடியும்? என்னை மன்னித்துவிடுங்கள்.''

முனிவர்களின் தலைவரும் இதே வார்த்தைகளைக் கூறினார். ஏறக்குறைய முக்கிய விருந்தினர்கள் அனைவருமே இறைவனின் வேண்டுகோளை நிராகரித்து விட்டனர்.முகூர்த்தகாலம் இன்னும் ஒரு நாழிகை மட்டுமே பாக்கியிருந்தது.

தன் மெலிந்த குட்டையான தோற்றத்தால் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்ட குறுமுனி முன்னால் ஓடி வந்தார்..

""நான் என்ன செய்ய வேண்டும் இறைவா? ஆணையிடுங்கள். நான் என்ன கனம் இருக்கப் போகிறேன்! இந்த மெலிந்த உடலை வைத்துக் கொண்டு எப்படி உலகத்தைச் சமநிலைக்குக் கொண்டு வரமுடியும்? என்றாலும் உங்கள் ஆணைக்காகக் காத்திருக்கிறேன்.''

இறைவன் குறுமுனியைப் பார்த்து இடிமுழக்கம் செய்தான்.

""மகனே, தெற்கே செல்க. ஒளியின் வேகத்தில் ஆகாயத்தில் பறக்கும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். உலகின் தென்கோடியில் உள்ள மலையை அடைந்ததும் அதன் உச்சியில் அமர்ந்து தியானம் செய். உலகம் சீர் பெறும். ஒரு மனிதனின் தியானத்தால் இந்த உலகமே சீர் பெறும் என்று முன்னோர்கள் சொன்னது பொய்யல்லவே!''

மீண்டும் ஒருமுறை அந்தத் தெய்வத் தம்பதிகளின் காலில் விழுந்து வணங்கினார் குறுமுனி. இமயமலையிலிருந்து கிளம்பினார்.

குறுமுனி இடத்தைக் காலி செய்ததும் திருமண வேலைகள் மும்முரமாக நடைபெற்றன.

தெய்வ சக்தியால், புறப்பட்ட மறுகணமே உலகத்தின் தென்கோடிக்கு வந்து சேர்ந்தார் முனிவர். உலகின் கடைசி மலையின் உச்சியில் தியானம் செய்ய அமர்ந்தார். ஆனால், அவரால் தியானிக்க முடியவில்லை. அழத்தான் முடிந்தது.

இறைவனின் திருமணக் காட்சியைப் பார்க்க எத்தனை நூற்றாண்டுகளாகக் காத்திருக்க வேண்டியிருந்தது? இன்று மொத்த உலகமும் இறைவனின் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் மட்டும் தன்னந்தனியாகத் தென்கோடியில் தவிக்க வேண்டி வந்துவிட்டதே என்று நொந்து கொண்டார். 

கண்ணீர் பெருகியது... சில நிமிடங்களில் மனதை ஒருநிலைப் படுத்தி தியானத்தில் ஆழ்ந்தார்.

திடீரென்று அவர் தோளை யாரோ தொட்டது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தார். அன்னை பார்வதி தெய்வீகப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். 

""தாயே!''

""மகனே எழுந்திரு. முகூர்த்த காலம் இன்னும் அரை நாழிகை கூட இல்லை. நானும் இறைவனும் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.''

இறைவன் அதே மயக்கும் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். திருமாலும் பிரமனும் அருகே இருந்தார்கள். சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

""மகனே நீ எங்களை இப்போது வணங்கக் கூடாது. எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கப் போகும் புரோகிதனே நீதான். உனக்கு உதவியாக இந்த பிரம்மதேவன் இருப்பான். சரி.. நாம் நிகழ்ச்சியைத் தொடங்கலாமா? 

பிரம்மதேவன் மந்திரம் சொல்லிப் புனிதத் தீயை மூட்டினான்.

முனிவரோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

""ஐயனே, இமயமலையில் உங்கள் திருமணம்?''

""எனக்கு லட்சோப லட்சம் உருவங்கள் மகனே! என்னுடைய ஒரு வடிவம் இமயமலையில் இருக்கிறது. என் சாரம் அன்பு. அந்த சாரம் இங்கே இருக்கிறது. அந்த சாரம் உன் மனதிலும் நிறைந்திருக்கிறது. அதனால்தான் எங்கள் திருமணத்தை நீ நடத்திவைக்க வேண்டும் என்று உமையவள் விரும்பினாள். அங்கே மற்றவர்களை விட்டுவிட்டு உன்னை மேடைக்கு அழைத்தால் பிரச்னைகள் வரலாம். அதனால், அங்கே ஒரு நாடகக்காட்சியை நிகழ்த்திவிட்டு இங்கே உண்மையான திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தேன்.''

ஒரு பெரிய விம்மலுடன் தெய்வத் தம்பதிகளின் திருப்பாதக் கமலங்களில் வேரறுந்த மரம் போல் விழுந்தார் முனிவர்.

இது எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைதான். ஆனால், இதனுள் பொதிந்திருக்கும் உள்ளர்த்தங்கள் விலைமதிப்பற்றவை. வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் தனித்து விடப்படுவோம். நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லாம் எளிதான வேலைகளைச் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டியதிருக்கும். ஒட்டு மொத்த உலகமும் ஒரே கூட்டமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் ஒரு வழியில் சென்று கொண்டிருக்கும் போது நாம் மட்டும் தன்னந்தனியாகக் காட்டுவழியில் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயத்தில், இறைவன் நம் தோளை இடித்துக்கொண்டு நம்முடன் வருகிறான் என்பதை மறந்து விடக்கூடாது. 

இது நம் அனைவருக்கும் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் வரும் குழப்பம். மனதுக்குப் பிடித்ததைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதில் பேரோ புகழோ பணமோ சம்பாதிக்க இடமில்லை என்ற சூழ்நிலை இருக்கும், என்ன செய்வது? மனதுக்குப் பிடித்த வேலைதான் நம் ""ஸ்வதர்மமாக'' இருக்கும். அதில்தான் நாம் நிறைவு காண முடியும். ஆனால் நிறையச் சம்பாதிக்க முடியாதே. அது மட்டும் இல்லை உலகம் முழுவதும் ஒரு பாதையில் செல்லும்போது நாம் எப்படித் தனிப்பாதையில் செல்வது? 

நம்முடன் படித்தவர்கள் அரசாங்க வேலைகளில் அலட்டிக் கொள்ளாமல் சம்பளமும் கிம்பளமுமாக அள்ளிக் கொண்டிருப்பார்கள். நாம் ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களாகப் பணியாற்ற வேண்டியதிருக்கும். 

எல்லோரும் போகும் வழியைத் தேர்ந்தெடுக்காமல் நமக்கு என்று உள்ள அந்தத் தனிவழியைத் தேர்ந்தெடுப்போம். "என் வழி தனி வழி' என்பது நாம் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் தத்துவம். நாம் செல்லும் தனி வழியின் முடிவில் இறைவனே நமக்காகக் காத்திருப்பான் என்ற அற்புதமான உண்மையைத்தான் குறுமுனியின் கதை சொல்கிறது.

ராபர்ட் ப்ராஸ்ட் என்கிற ஆங்கிலேயக் கவிஞர் அழகாகச் சொல்கிறார்.

""நான் இதை ஒரு பெருமூச்சுடன் சொல்கிறேன். எத்தனையோ காலங்களுக்குப் பின் காட்டுவழியில் செல்லுங்கால் பாதைகள் இரண்டு பிரிந்து சென்றன மக்கள் அனைவரும் ஒரு பாதையில் நான் மற்றதில்.அதுதான் என் வாழ்க்கையையே மாற்றியமைத்தது''.

No comments:

Post a Comment