
சென்னை திண்டிவனம் சாலையில் அருள்பாலிக்கிறார்
பெருமாளின் அருட்பார்வையே பக்தர்களுக்கு பரவசமளிக்கும் என்றால், அதே பெருமாள் பக்தருடன் பேசும் பாவனையில் காட்சி தந்தால் எப்படி இருக்கும்? மெய் சிலிர்க்கும் அல்லவா? இந்த அற்புதக் காட்சியை கூழமந்தல் கிராமத்தில் காணலாம். சென்னை-திண்டிவனம் சாலையில் (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) இக்கோயில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள இக்கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து 18 கி.மீ, செய்யாறில் இருந்து 22கி.மீ, வந்தவாசியில் இருந்து 22 கி.மீ, சென்னையில் இருந்து 80 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கூழம் எனும் பண்டைச் சொல்லுக்கு எள் என்றும், பந்தல் என்றால் ஓடும் சாலை, விதானம் என்றும் பொருள்கள் உண்டு. பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்த கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பழையாறை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற நகரங்களுக்கு இவ்வூர் வழியாக நெடுஞ்சாலை இருந்ததாலும், இங்கு எள் பயிர் அதிகளவில் விளைந்ததாலும் இவ்வூர் ‘கூழம் பந்தல்’ எனும் பெயர் பெற்றது.
ஒரு ஊரின் ஒருபுறத்தில் சிவாலயமும், மற்றொரு புறத்தில் விஷ்ணு ஆலயமும் இருப்பது அந்த ஊரின் இரு கண்கள்போல் என்பார்கள். அதற்கேற்றார்போல் சோழர்களின் ராஜகுருவான ஈசான சர்வ சிவ பண்டிதர் ஆணையால் ‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் முழுவதும் கருங்கற்களாலான அற்புத கற்றளி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த கற்றளி தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் இருப்பது வியப்புக்குரியது. மேற்கில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு பூமியிலிருந்து 12 அடி உயர மகா விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இவர்தான் பேசும் பெருமாளாக தற்போது அருள்பாலித்து வருகிறார். கங்கைகொண்ட சோழீச்சுரம் சிவன் கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே இப்பேசும் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்தின் நெல்லூரையும், தமிழகத்தில் காஞ்சிபுரத்தையும் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். அதில் விஜயகண்ட கோபாலன் என்பவர் இக்கோயிலுக்கு வந்து இப்பெருமாளைக் கண்டு மிகவும் வியப்புற்று பேச, இப்பெருமாளும் பதிலுக்கு அரசனுடன் சாதாரணமாக உரையாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதும்கூட பெருமாள் முன்பு நின்று அவரை சற்றே ஆர்வத்துடன் நோக்கினால், அவர் கருணையுடன் நம்மை நோக்கி புன்னகைக்கிறார். நம்முடன் பேசுகிறார். நமக்கு பதில் சொல்கிறார்! அவருடைய இரு காதுகளிலும் துளை இருப்பதாகவும் நாம் தெரிவிக்கும் கோரிக்கைகள் எல்லாம் அவருக்கு கேட்கிறது என்பதும் அதன்மூலம் அருளாசி வழங்குகிறார். வேதனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பின் இரு கைகளிலும் சங்கு சக்கரத்துடன், வலக்கை அருள்பாலிக்கும் வரதஹஸ்தமாக, இடக்கை தொடையில் பதிந்துள்ளதாக சேவை சாதிக்கிறார். தோற்றம் கம்பீரமாக இருந்தாலும் பெருமாள் சாந்த மூர்த்தியாகவே திகழ்கிறார். பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள். அவ்விருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்களும், தலைக் கிரீடங்களும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன. இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு, தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பதுதான். பிற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும், இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார்கள். வருடந்தோறும் எல்லா முக்கிய திருவிழாக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முதலில் பேசும் பெருமாளை தரிசித்துவிட்டு, பிறகு கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் என மக்களால் பேசப்படுகிறது.
பெருமாள் பேசினார்-மன்னனின் கல்வெட்டு
தன்னுடன் பெருமாள் பேசியதற்கு ஆதாரமாக இரண்டு வாயிற்படி நிலைகளிலும் உள்ள கல்வெட்டில் ‘‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீவிஜயகண்டகோபாலற்குயாண்டு இருபது காலியூற் கோட்டத்து கூவழன் பந்தலான விக்கிரம சோழபுரத்து பேசும் பெருமாள் கோயில் காணியுடைய உறுபலியாந்தான் நூற்றிவுடையான் சொற்பார்பணிபந்தல்’’ என பொறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment