மகரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காக்கையாகவும் (முட்டம்) உருமாறினர். இதனால் மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். அவர்கள் மீது கருணை கொண்ட பெருமானும் நினைத்த உடன் முக்தி தரும் திருத்தலங்கள் ஏழினுள் சிறப்புப்பெற்ற காஞ்சி அருகே உள்ள திருத்தலத்தில், தான் எழுந்தருளியிருப்பதாகவும் அங்கு சென்று வழிபட்டால் வினை நீக்கம்பெறலாம் என்றார். அவ்வாறே குரங்கின் வடிவில் இருந்த வாலி, அங்கு சென்று அம்மையப்பனை பல காலம் வழிபட்டார். சிவபெருமானும், பார்வதியுடன் காட்சி தந்து வாலிக்கு சாப விமோசனம் கொடுத்தனர்.
அதேபோல் இந்திரன் அணிலாகவும், தர்மத்தை காக்கும் எமதர்மன் காகம் உருவிலும் சுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர். இதனால் இக்கோயில் திருக்குரங்கணில் முட்டம் என்று அழைக்கப்படுகிறது. வாலிக்கு திருவருள் புரிந்ததால் இறைவனுக்கு வாலீஸ்வரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. அம்பிகை என்றும் இளமையாய் தனது திருக்கரங்களில் வளையல்கள் அணிந்து அழகும் கருணையும் ஒன்று கலந்து திவ்ய தரிசனம் அளிப்பதால் இறையார் வளையம்மை என்று பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. இக்கோயிலில் மேற்கு பார்த்த சன்னதியில் மூலவர் வாலீஸ்வரரும், தெற்கு திசை பார்த்தவாறு அம்பாளும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
உள்பிரகாரத்தில் சகன முனிவர் இல்லாத தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்த மாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இலந்தை மரம் தலவிருட்சமாக உள்ளது. இலந்தை இலை அம்பாளுக்கு பூஜிக்கப்பட்டு அதை குழந்தை பேறு இல்லாதவர்கள் ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. எமதருமன் வழிபட்டதால் இந்த ஆலயத்தில் எள் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும். மனித பிறவி வினைபயன் நீங்கும். திருமண தடையை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
காக புஷ்கரணி: சாபம் பெற்ற எமதர்மராஜன், காகம் உருவில் தனது மூக்கினால் கிளறி கோயிலை சுற்றி பிறை சந்திர வடிவில் திருக்குளம் அமைத்தார். அந்த புனித நீரினால் இறைவனுக்கும் இறைவிக்கும் தினமும் அபிஷேகம் செய்து பூஜித்த பயனால் காக உருவம் நீங்கி மீண்டும் தனது பழைய உருவத்தை பெற்றார். இதனால் இக்குளம் கொடிய நோய்கள், அர்ப்ப ஆயுளில் மரணம், சிசு மரணம், கரு கலைதல் ஆகிய தோஷங்களை நிவர்த்தி செய்யும் அபூர்வ சக்தி வாய்ந்ததலமாக திகழ்கிறது.
இளமையில் முதுமை: ஆரோக்கிய குறைவினால் சிலருக்கு இளம் வயதிலே முதுமை தோற்றம் ஏற்படும். இத்தகைய தோஷம், அம்பிகை வளையம்மையின் சன்னதியில் தீபம் ஏற்றி தரிசிப்பதால் நீங்கும். இக்கோயிலில் வாலி வந்து வழிபட்டதால் எதிரி பலம் நமக்கு கிடைக்கும், இந்திரன் வந்து வழிபட்டதால் பதவி போனவர்களுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். எமதருமன் வந்து பூஜித்ததால் சனி தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
வழி: காஞ்சிபுரம்வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் இறங்கி அங்கிருந்து 2கி.மீ தூரம் உள்ள குரங்கணில் முட்டத்திற்கு ஆட்டோவில் செல்லலாம்.
No comments:
Post a Comment