Friday, 4 August 2017

அண்ணன் ஒரு கோவில்


மதுரையில் வசித்த தளபதி என்ற பணக்காரருக்கு, சுசீலை என்ற மனைவி இருந்தாள். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், தங்கை குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.

ஒருநாள்... தளபதிக்கும், அவரது தங்கைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவள் கோபத்தில் அண்ணனை நோக்கி, "குழந்தையில்லாத பாவி நீ! பிள்ளையைத் தத்துக் கொடுத்த என்னையே திட்டுகிறாயா? என் பிள்ளை இல்லாவிட்டால் உனக்கு வாழ்வேது?'' என்றாள்.

மனம் வெறுத்த தளபதி, தன் சொத்தை எல்லாம் தங்கையின் பிள்ளைக்கு உரிமையாக்கி விட்டு, மனைவியுடன் தவம் செய்ய காட்டுக்குப் போய் விட்டார். 

நீண்ட நாளானது. தளபதி திரும்புவதாகத் தெரியவில்லை. இதைப் பயன்படுத்தி, தளபதியின் சொத்து முழுவதையும் உறவினர்கள் அபகரித்தனர். அவரது தங்கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவள் சொக்கநாதர் கோவிலுக்குச் சென்று சுவாமியிடம் முறையிட்டாள். 

"உமையொரு பாகனே! அறியாத சிறு பிள்ளையுடன் செய்வதறியாமல் தவிக்கிறேன். அண்ணனின் அருமை இப்போது தான் புரிகிறது. என்னைக் காப்பாற்று!'' என்று அழுதாள்.

அன்றிரவு அவளது கனவில் தோன்றிய சிவன், "சொத்துகளை அபகரித்த உறவினர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வா! அங்கே நான் உனக்குரிய நீதியை வழங்குவேன்,'' என்றார்.

அதன்படியே நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள் தளபதியின் தங்கை. உறவினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக தளபதி அங்கே வந்தார். 

தங்கையையும், குழந்தையையும் தழுவிக் கொண்டு, "எனது சொத்துக்களை இந்தக் குழந்தையின் பெயரிலேயே எழுதி வைத்தேன். ஆனால், என் உறவினர்களோ அவற்றை அநியாயமாக கவர்ந்து கொண்டனர். என் தங்கை மகள் கழுத்தில் நான் அணிவித்த நகையைக் கூட விட்டு வைக்கவில்லை'' என முறையிட்டார். 

உறவினர்களோ, இவர் உண்மையான தளபதியாக இருக்க முடியாது என்று நீதிபதியிடம் எதிர்வாதம் செய்தனர். 

ஆனால், தளபதி அவர்களின் பெயர், குலம், கோத்திரம், தொழில் என்று அனைத்தையும் நீதிமன்றத்தில் விவரித்தார். 

உறவினர்கள் வசமாக சிக்கி, தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டனர். தளபதியின் தங்கையிடமே மீண்டும் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் தளபதியைக் காணவில்லை. அப்போது தான், சிவனே தளபதி வடிவில் வந்த உண்மை தெரிந்தது. 

அண்ணன் ஒரு கோவில் என்பதை தங்கை உணர்ந்தாள். இந்த வரலாறு பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது.

No comments:

Post a Comment