Tuesday 1 August 2017

தீமைகளை விரட்டுவாள் சமயபுரம் மாரியம்மன்


கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையை கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே  மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வமாக திருச்சி சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். 

சமயபுரம் கோயில், காலத்தால் முற்பட்டது. சோழர்களால்  பெரிதும் போற்றி வணங்கப்பட்ட அம்பாளின் திருத்தலம் விஜயநகர,  நாயக்க மன்னர்களின் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதாக அறிய  முடிகிறது. கிழக்கு நோக்கி அமைந்த இக்கோயில் மூன்று திருச்சுற்றுகளை  உடையதாக விளங்குகிறது. கிழக்கே சன்னதித் தெருவில் விநாயகர்  கோயிலும், தெற்கே முருகன் கோயிலும், மேற்கே ராஜகோபாலசுவாமி  கோயிலும், வடக்கில் தேரோடும் வீதியில் விநாயகர் கோயிலும்  அமைந்துள்ளன. கிழக்கே தேர் மண்டபத்திலிருந்து கோயில் முகப்பு வரை  புதிதாக மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முகப்பிலுள்ள மண்டபம்  பார்வதி கல்யாண மண்டபம் என அழைக்கப்படுகிறது.

முதல் கோபுர  வாயில் வழியே கோயிலுக்குள் நுழைந்தால் இரண்டாம் திருச்சுற்றுக்கு  வரலாம். இத்திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, தலமரம் வேம்பு,  பவுர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வாகன அறைகள், வசந்த  மண்டபம், அபிஷேக அம்மன் சன்னதி, யாகசாலை, தங்கரத மண்டபம் ஆகியவை  உள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுற்று பிரகாரங்களை விரிவாக்கம்  செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இத்திருச்சுற்றில் பக்தர்கள்  வேண்டுதல் நிறைவேற பயபக்தியுடன் அங்கபிரதட்சணம் செய்து  வருகின்றனர். தங்கத் தேரோடும் பிரகார மண்டபமாகவும் இது  விளங்குகிறது.  2வது திருச்சுற்று முடிந்து வந்தால் கொடிமரம்,  பலிபீடம், மாவிளக்கு மண்டபம் ஆகியவற்றை கடந்து கருவறைக்கு  செல்லலாம். 

கருவறைக்கு செல்லும் வாயிலில் இருபுறமும் துவா  சக்திகள் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றன.  அர்த்த மண்டபம் முன்புறம் மகாமண்டபத்தில், வடக்குப் புறத்தில்  தெற்கு நோக்கி ஆயிரம் கண்ணுடைய அற்புத உற்சவ அம்பாள் சன்னதியும்,  அதனையடுத்து மகாமண்டப வெளிப்புறத்தில் சக்திவாய்ந்த தலகாவல்  தெய்வமான கருப்பண்ணசுவாமியின் சன்னதியும் உள்ளது. கருவறையில்  மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் கம்பீரமாக காட்சி  தருகிறாள். அம்பாள், மாரியம்மன் வடிவெடுத்த திருவுருவங்களில்  சமயபுரத்தாள் என்னும் இந்த மாரியம்மன் எழுந்தருளியிருக்கும்  இவ்விடமே சக்தி ஆதி பீடமாகும். அம்மன் தலைக்கு மேலே ஐந்து தலை அரவு  குடையாக விளங்குகிறது. 

தங்கக்கிரீடம் திருமுடியில் அணிந்து  குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, கண்களில்  அருள் ஒளி வீச, வைரக் கம்மல்களும் மூக்குத்தியும், சூரியன்   சந்திரன் போல ஒளிவீசக் காட்சி தரும் அன்னையின் அற்புதக் கோலம்  வர்ணிக்க இயலாது. தனது எட்டுக் கரங்களில் கத்தி, உடுக்கை, தாமரை,  திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் தாங்கி இடக்காலை மடக்கி வலக்காலை  தொங்க விட்டு சுகாசனத்தில் அமர்ந்து, பக்தர்களின் குறைகளை நீக்கி  அருள்பாலிக்கிறாள். வலக்காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள்  காணப்படுகின்றன. பார்ப்பதற்கு அம்பாள் கோபமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் முகத்திலே தோன்றும் சிரிப்பினாலும்  அருட்பொலிவினாலும் நம் துன்பங்கள் கரைந்து போகும் வண்ணம்  அருள்பாலிக்கிறாள். 

கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்று  உள்ளது. இதனை உள்பிரகாரம் என்பர். இத்திருச்சுவற்றில்  கருவறையைச் சுற்றி தண்ணீர் தேக்கி வைப்பதற்கு ஏற்றவாறு தொட்டி  அமைக்கப்பட்டுள்ளது. இறைவிக்கு குளிர்ச்சியாக இருப்பதற்காக இதில்  நீர் நிரப்பும் வழக்கம் இருந்து வருகிறது. கருவறையில் பின்னால்  அம்பிகையின் மலர்ப்பாதங்கள் வழிபடப்படுகின்றன. கருவறையின் இடப்புறம் உற்சவ அம்பாளின் சன்னதி உள்ளது. இதற்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்படுகிறது. சமயபுரம் கோயிலின் வடக்கே காணப்படும் செல்லாண்டி அம்மன் கோயிலுக்குரிய திருமேனியும் இங்கே நாள்தோறும் அபிஷேகம் செய்யப் பெற்று வழிபடப் பெறுவது சிறப்பாகும். கோயில் உற்சவ அம்பாளுக்கு தினமும் காலை 7.30 மணிக்கு கோயில் சார்பில் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

இந்த அபிஷேக தீர்த்தம் காலை சந்தி முடிந்தவுடன் கோயில் வடக்கு பிரகாரத்தில் தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், நோயின் தன்மை குறைந்து விரைவில் நலம் பெறுகிறார்கள் என்பது கண்கூடு. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தொடர்ந்து ஐந்து வாரம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரை தேர்த் திருவிழா மற்றும் மே மாதத்தில் நடைபெறும் பஞ்சப்பிரகார விழா ஆகிய விழாக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

No comments:

Post a Comment