Friday, 4 August 2017

மாங்கல்யம் மற்றும் மகப்பேறு தரும் அம்மன் கோவில்கள்


திருவக்கரை :

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பேருந்துப் பாதையில் பெரும்பாக்கம் என்னும் இடத்தில் இறங்கி தெற்கு நோக்கி ஏழு கி.மீ. தூரம் சென்றால் திருவக்கரையை அடையலாம். ‘வராகநதி‘ என அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடக்கரையில் திருவக்கரை கோயில் சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. வக்கிரமாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயிலினை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயனடைவர். திருணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர் முதலானவர்கள். இக்கோவிலுள்ள துர்க்கையம்மனை தரிசித்து, ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் இராகு கால நேரத்தில், அர்ச்சனை செய்தால் உடனடியாகப் பயன் கிடைக்கிறது.

பவானி கூடுதுறை :

பவானி கூடுதுறை தலத்தில் ஒரு இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரம் நாள்தோறும் இறைவனின் பூஜைக்கு மிகச் சுவையான கனியன்றைத் தருமாம். இறைவனையும் இறைவியையும் வேண்டி இலந்தைக் கனியை உண்போர் மகப்பேறு அடைவர் என்கிறது தல புராணம். கூடுதுறையை ஒட்டிய கரைப் பகுதியில் மரத்தடியில் கல்லில் வடித்த நாகங்கள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் ஆண்டவனை வணங்கிக் கொண்டு பரிகாரம் செய்ய நட்டவைகள் ஆகும். மகப்பேறு இல்லாத பெண்கள் முக்கூடலில் மூழ்கி எழுந்து, அமுதலிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு, அக்கோவிலை வலம் வந்தால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை அங்கு உள்ளது. ஆடி மாதத்தில் அமாவாசை, கிருத்திகை தினங்களிலும் ஆடிப்பெருக்கு சமயத்திலும் முக்கூடலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

மாங்கல்ய பலம் தரும் பட்டீஸ்வரம் துர்க்கை :

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவார்கள். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை விரதமாகும். செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் :

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாதர் திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பவுர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது. இங்கு ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வரும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி ஆடிமாதத்தில் விரதம் இருந்துதான் இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய பலம் கூடும் :

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்று சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது. ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம், தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாக சாஸ்திரங்களும் ஞான நூல்களும் தெரிவிக்கின்றன. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

மாரியம்மன் மருந்து :

மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். “ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்‘ எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை “ஆடிக்கஞ்சி’ என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. 

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்:

திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திண்டுக்கல்லுக்கு முகவரியாக விளங்குகிறது. கருவறை யில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். ஆடிப்புரத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். ஆடி மாதம் 2-வது வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் திருவிழா காலங்களில் அம்மன் செல்லாத பகுதிகளில் வீதி உலா செல்லும் வைபவம் நடைபெறும். 

கண்ணொளி வழங்கும் வீரபாண்டி கவுமாரியம்மன் :

தேனி அருகே அமைந் துள்ளது வீரபாண்டி கவுமாரியம்மன் ஆலயம். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கவுமாரியம்மன் கன்னி தெய்வமாக அருள்பாலிக்கிறார். சுயம்புவாக உள்ள கவுமாரியம்மனை வணங்கினால் கண்நோய், அம்மைநோய் குணமாகும். ஆடி மாதத்தில் வெள்ளிதோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் கூழ் ஊற்றுவார்கள். ஆடி, அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

தேடி வந்து அருள்புரியும் பெரியகுளம் கவுமாரியம்மன் :

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கவுமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது. வாரம் தோறும் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு பாலாபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு பூஜை, பகல் 12 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி பெருக்கு தினத்தன்று அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வரும் காட்சி நடக்கிறது. இக்கோவிலில் நடக்கும் மறுபூஜை பிரசித்தி பெற்றது. ஆனிமாத கடைசி வாரத்தில் நடக்கும் பெருந்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான மறுபூஜை ஆடிமாத முதல் வார செவ்வாய்கிழமையில் நடைபெறும். 48 நாட்கள் விரதம் இருக்கும் சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் தீர்த்த தொட்டியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அன்று இரவு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெறும். 

No comments:

Post a Comment