அம்பிகையை குருநாதராக கருதிய பக்தர் ஒருவர், மாலை நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் புறப்பட்டார். ஒரு காத தூரம்... அதாவது 15 கி.மீ., நடந்திருப்பார். இருள் சூழ்ந்தது. ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். மூன்று மணி நேரம் கழிந்து, தியானம் கலைந்த அவருக்கு பசி உண்டானது. அண்ணாமலையில் அருள்புரியும் உண்ணாமுலையம்மனிடம், ""உமையவளே! உன் பக்தனான நான் உண்பதற்கு சோறு கொண்டு வா,'' என உத்தரவிட்டார்.
அப்போது திருவண்ணாமலை கோவிலில் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர் நைவேத்யம் செய்து கொண்டிருந்தார்.
வீட்டுக்குப் போகும் அவசரத்தில், பொங்கலை அப்படியே விட்டு விட்டு, அர்ச்சகர் சன்னிதிக் கதவைத் தாழிட்டு விட்டு புறப்பட்டார். தன் பக்தனின் பசிதீர்க்க, அம்பாள் தங்க தாம்பாளத்தில் பொங்கலை சுமந்தபடி ஆலமரத்தடிக்கு வந்து அதை வைத்து விட்டு மறைந்து விட்டாள்.
பொழுது புலர்ந்தது. காலையில் பூஜைக்கு வந்த அர்ச்சகர், சன்னிதியில் இருந்த தங்கத் தாம்பாளம் காணாமல் போனதை அறிந்து பதறினார். விஷயம் ஊர் முழுவதும் பரவியது. ஊரார் கோவிலில் ஒன்று கூடினர்.
அப்போது ஒரு சிறுவன் ஆவேசம் வந்தவனாக, "என் பக்தன் குரு நமசிவாயம் சிதம்பரம் போகும் வழியில், பசியால் வாடினான். உணவு அளிக்க நானே நேரில் சென்று தங்க தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கலைக் கொடுத்தேன். அங்குள்ள ஆலமரத்தடியில் காணாமல் போன தாம்பாளம் இருக்கிறது,'' என்றான்.
அவன் சொன்னது போலவே தாம்பாளம் மரத்தடியில் இருப்பதை அனைவரும் கண்டனர்.
திருவண்ணாமலை வரலாற்றுடன் இரண்டறக் கலந்த பக்தரான குரு நமசிவாயம் வாழ்வில் அம்பாள் நடத்திய அற்புதம் இது.
No comments:
Post a Comment