Thursday, 17 August 2017

சீர்மிகு வாழ்வு தரும் சின்னக்கடை மாரியம்மன்


பராசக்தியான அம்பிகை தன் அளப்பரிய சக்தியை பல தலங்களில் நிலை நிறுத்தி உலக நன்மைக்காக, நாம் உய்யும் பொருட்டு, அருள்பாலிக்கின்றாள். தன் திருவடித்தாமரையை தஞ்சம் என்று பற்றிக் கொள்ளும் பக்தர்களின் இன்னல்களைக் களைந்து இன்ப வாழ்வளிக்கும் தாயாய் நம்மைத் தாங்கி காக்கின்றாள். அவ்வாறு புகழ்பெற்ற தலங்கள் எத்தனை, எத்தனையோ! அவற்றுள் ஒன்றாய் சென்னைவாசிகள் மட்டுமின்றி அகிலம் போற்றும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாய் திகழும் சின்னக்கடை ஸ்ரீமாரியம்மன் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் திகழ்கின்றாள். இந்த ஆலயம் சென்னை என்.எஸ்.ஸி. போஸ் ரோடு, தங்க சாலைத் தெரு சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியில் 1775ல் குண்டப்பன் என்பவர் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். அவரிடம் அவருடைய நண்பர்கள், ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டுவந்த ஓர் அம்மன் சிலையைக் கொடுத்தார்கள். தன் சொந்தச் செலவில் ஒரு கோயிலைக் கட்டி, அந்த அம்பாள் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகமும் நடத்தினார். ஒருகால உச்சிவேளை பூஜையையும் செய்து வந்துள்ளார். இந்த அம்மனின் முதல் பெயர் சீதள சக்தியம்மன் என்று கூறப்பட்டது. பின்னர் ஸ்தாபகர் குண்டப்பா, அம்மனுக்கு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் என்று பெயரிட்டு வணங்கிவந்தார். அந்தப் பெயர் உடனேயே பிரபலமாகிவிட்டது. புராணங்களில் சிறப்பிக்கப்பட்ட பெயர் அல்லவா அது!

ஜமதக்னி முனிவரின் இறைவழிபாட்டிற்கு மனைவி ரேணுகாதேவி காலை வேளையில் மணலால் குடம் செய்து பூஜைக்கு தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒருநாள் ஆற்று நீரில், வானத்தில் சென்ற ஒரு கந்தர்வனின் உருவம் பிரதிபலிக்க, அவள் தன்னை மறந்து அவனழகில் மயங்கியதால் அன்று குடம் செய்ய முடியாது போயிற்று. தன் குற்றம் எண்ணி வருந்தி, தன் கணவரிடம் சென்று தெரிவித்தாள். தன் தவவலிமையால் நடந்ததை அறிந்த முனிவர் மனைவியிடம், ‘‘நீ பதிபக்தி நெறி தவறிவிட்டாய். எனவே இனி நீ உயிரோடிருக்க அருகதையில்லை,’’ என கோபித்தார். 

அதோடு, தன் மகன் பரசுராமரை அழைத்து, ‘‘தாயின் சிரம் கொய்து வா’’ என ஆணையிட, தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு பரசுராமரும் தாயின் தலையை வெட்டினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று கடமையாற்றிய மகனைப் பார்த்து, ‘‘பரசுராமா உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என வினவினார் ஜமதக்னி. பரசுராமரோ, ‘‘அப்பா எனக்கு உயிருடன் தாய் வேண்டும். வெட்டுண்ட தலையை பிறர் வணங்க வேண்டும்,’’ என்று கேட்டுக்கொண்டார். தந்தையாரும் சம்மதிக்க, மாற்று உடலில் தலை மாரிய உருவம் மாரியம்மன் என்று வணங்கப்பட்டது. அதுவே இயற்பெயரான ரேணுகா
பரமேஸ்வரி என்றும் பெயர் கொண்டது.

கோயில் பிரதான வாயிலில் நுழைந்தவுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் சாந்தமாக, செளம்யமாக ஆனந்தப் புன்னகையும், அழகும் மிளிர, கருணைபொழியும் கண்களால் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு அருளை வாரி வழங்கும் அமுதசுரபியாய் அன்புத் தாயாய் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றாள். 

அம்மனின் வலதுபுறம் ஆனைமுகத்தோன் சந்நதியும், இடப்புறம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன் சந்நதியும், தென்மேற்கில் உற்சவ அம்மன் சந்நதியும், வடகிழக்கில் நாகர் சிலைகளும் அமைந்துள்ளன. இந்த தெய்வங்கள் எல்லாம் கிழக்கு நோக்கியபடி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

ஒரு எலுமிச்சம் பழம், ஏழு பச்சை மிளகாய் கயிற்றில் கோர்த்து திருஷ்டி மாலையாக அம்மன் பாதத்தில் வைத்து எடுத்துச் சென்று வீட்டின் முன் வாசலிலோ, தொழில் ஸ்தாபனத்தில் முன் வாசலிலோ கட்டி வைத்தால் சகல திருஷ்டிகளும் விலகும் என்று பக்தர்களால் நம்பப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் சிறிய கோயிலாய் அமைந்த இடத்தைச் சுற்றி, சிறிய கடைகள் கட்டி வாடகை விட்டனர். அந்தப் பணத்தை நித்திய பூஜைக்கு பயன்படுத்தினர். சிறிது சிறிதான கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் பூஜை நடத்தப்பட்டதால், இந்த அம்மன் சின்னக்கடை ஸ்ரீமாரியம்மன் என மக்களால் செல்லமாய் அழைக்கப்பட்டு அப்பெயரே நிலைத்தும் விட்டது. இந்தக் கடைக்காரர்கள் தாங்கள் கடையைக் காலையில் திறக்கும்போது கடையின் சாவியை அம்பாள் பாதத்தில் வைத்து, அன்னையின் அருட்பிரசாதமான புஷ்பத்தோடு சாவியையும் வாங்கிக் கொண்டு சென்று கடையை திறப்பர். இரவு மீண்டும் சாவியை அம்மன் பாதத்தில் வைத்து பின்பே வீட்டிற்கு கொண்டு செல்கிறார்கள். 

No comments:

Post a Comment