Thursday, 17 August 2017

கண்ணன் என்னும் மன்னன்


ருக்மிணிக்கு தாயுள்ளம்! தாயுள்ளமே பிறர் துன்பம் காணச்சகியாது.இங்கே பாமா துன்பப்படுவாள் என்பதையும் ருக்மிணி உணர்ந்து, ""ஐயோ அவள் பாவம் எனக்கு வேண்டாம்,'' என்றாள். கண்ணன் அதை வெகுவாய் ரசித்தான்.

""ருக்மிணி .... உனக்கு மிகவே பெரிய மனது. என்னை உன் சொத்தாக மட்டும் கருதாமல், மற்றவர்களும் பங்கு போட்டுக் கொள்ள நீ அனுமதிப்பதை நினைத்தால் எனக்கு எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது தெரியுமா?'' என்று கேட்டான் கண்ணன். 

""பிரபோ! நீங்கள் எனக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் சொந்தம். எனக்கு மட்டுமே உரியவர் என்று கூறினால், என்னையே சுயநலத்தில் இருந்து மீட்க முடியாதவர் நீங்கள் என்று நாளை உங்களை ஊர் தூற்றாதா?'' -ருக்மிணி இறுதியாகக் கேட்டதே உன்னதம். கண்ணனும் ருக்மிணியை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான். 

இதைத் தொடர்ந்து.....

ருக்மிணியின் சம்மதத்துடன் கண்ணன், பாமா திருமணம் இனிதே நடந்தது. திருமணத்திற்கு வந்த நாரதர், ""கிருஷ்ண பிரபோ! தாங்கள் இப்பிறப்பில் இன்னும் எத்தனை பேருக்குப் பதியாகி சிறப்பிக்க உள்ளீர்களோ தெரியவில்லை. ஏன் என்றால் உங்களைக் காதலித்திடாத ஒரு பெண்ணை நான் இதுவரை பார்க்கவே இல்லை,'' என்று சொல்ல, ""நாரதரே! அவர்களின் பக்தியை காதல்என்று கூறி எங்களைச் சீண்டிப் பார்க்கிறீர்களா?'' என்று கேட்டாள் ருக்மிணி. 

""இப்படி நீங்கள் சொன்ன பிறகே எனக்கும் திருப்தியாயிற்று. இந்த கோபம் முக்கியம். அதிலும் ருக்மிணி பிராட்டிக்கு பெரிய மனசு தான். என் மனதில் பட்டதை கூறி விட்டேன்... பிறகு உங்கள் பாடு,'' என்றார் நாரதர்.

கண்ணன் இதையெல்லாம் கேட்காதவன் போல இருந்தான்.

சத்ராஜித் சமந்தக மணி மாலையை கண்ணனின் கழுத்தில் போட்டு, ""இனி இது உங்கள் சொத்து... மாமன் நான் சீதனமாய் தருகிறேன்...'' என்றான். 

கண்ணனும், ""நல்லது... மருமகன் நான் மாமனுக்கே தர விரும்புகிறேன். இதைக் கொண்டு உங்களை நாடி வருவோரின் துயரைத் தீருங்கள். அந்த புண்ணியத்தை பிரசேனஜித் ஆத்மாவிற்கு சமர்ப்பணமாக்குங்கள்,'' என்றான்.

கண்ணன் விருப்பப்படியே சத்ராஜித்தும் அதை ஏற்றுக் கொண்டான். பாமாவும் கண்ணனின் திருமாளிகையில் ருக்மிணியுடன் ஒற்றுமையுடன் வாழத் தலைப்பட்டாள்.

வனத்திலேயே ஜாம்பவதி தங்கியிருந்தாள். அவள் தியானித்த மாத்திரத்தில் கண்ணனும் அவளை நாடிச் சென்று தன் கடமையைச் செய்து வந்தான்.

சமந்தகமணியால் வந்த பழி நீங்கி, அதுவே கண்ணனைப் பெரிய சம்சாரியாக்கி விட்டது. இனி ஒரு குறையும் இல்லை என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், குறையெல்லாம் ஒன்று சேர்ந்தது போல, அக்ரூரர், கிருதவர்மா, சததன்வா மூவரும், பாமா தங்களுக்கு கிடைக்கவில்லையே என்பதால் சதி ஆலோசனையில் ஈடுபட்டனர். 

சததன்வா, ""அக்ரூரரே... சத்ராஜித் நம்மை எல்லாம் சிறு புல்லாக நினைத்து விட்டான்'' என்றான்.

""எப்போது அந்த பாமா நம்மை இழித்துப் பேசினாளோ, அப்போதே சிறு புல்லாகி விட்டோம் சததன்வா'' 

""விடுங்கள்.. அது தான் முடிந்து விட்டதே.... இனி பேசி என்ன பயன்?'' என்றான் கிருதவர்மா.

""கிருதவர்மா... நீ மானமுள்ளவன் தானா?'' 

""அதில் என்ன சந்தேகம்....?'' 

""என்றால் எப்படி விட்டு விடச் சொல்கிறாய்....'' 

""உணர்ச்சிவசப்படுவதால் மட்டுமே ஏதும் மாறி விடுமா சததன்வா?''

""ஏன் மாறாது? ஒன்றுக்கு மூன்று பேரை மணந்த கண்ணன் வீரன் போல வேடம் போடுவான். நாம் அதைக் கண்டு எனக்கென்ன என்று இருக்க வேண்டுமா?'' 

""சரி... கண்ணன் மீது போர் தொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் பாமாவை அடைய முடியுமா? மாற்றான் மனைவியை அபகரித்த பாவம் அல்லவா வந்து சேரும்?''

""கிருதவர்மா.... பாமாவை விட்டுத் தள்ளு. அவள் மீது ஆசை கொண்டது ஒரு காலம். இப்போது அவள் என் எதிரி...''

""அதனால்...?''

""என்ன அதனால்.... குறைந்த பட்சம் எதிரிக்கு ஏதாவது ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியாக வேண்டும்''

""அப்படி என்றால் கண்ணன் மீது போர் தொடுக்க உத்தேசமா?''

""இல்லை.... கண்ணன் பெரும் மாயாவி. தந்திரங்களிலேயே நம்மை தவிடு பொடியாக்கி விடுவான். சத்ராஜித்திடம் இருக்கும் சமந்தகமணியை நாம் அபகரிக்க வேண்டும்'' 

""மாமனாருக்காக மருமகன் கண்ணன் யுத்தம் புரிய வர மாட்டானா?'' 

""தாராளமாக வரட்டும். மணி என் வசம் வந்ததும், சகல நலங்களையும் நான் அடைந்து விடுவேன். பின் போருக்கு வந்தாலும் கவலையில்லை. ஜராசந்தன் பீமனால் கொல்லப்படும் வரை, அவனுக்கு பயந்து கொண்டு இந்த கண்ணன் மதுராவை விட்டு ஓடி வந்தவன் தானே?''

""அது பழைய கதை.. தன்னால் முடியாததை தந்திரமாக பீமனைக் கொண்டு கண்ணன் சாதித்ததை மறந்து விடக் கூடாது''

""தந்திரம் என்பது கண்ணனுக்கு மட்டும் சொந்தமல்ல. அது சததன்வாவுக்கும் சொந்தம்''

""அப்படியானால், எந்த தந்திரத்தால் சமந்தகமணியை அடையப் போகிறாய்?''
""அந்த மணியோடு, நான் உன் முன் வந்து நிற்கும் போது தெரிந்து கொள்வாய்....''

""என்றால் நீ தனியாக முயற்சி செய்யப் போகிறாயா?''

""பிறகு...? அந்த சத்ராஜித் பெரிய பலசாலி இல்லை. எனது யுத்தம் கண்ணன் மீது அல்ல... சத்ராஜித் மீது தான்''

""கண்ணன் இதை வேடிக்கை பார்க்க மாட்டான். பாமாவுக்காக களத்தில் இறங்குவான்'' - கிருதவர்மா சொல்வதைக் கேட்டு சிந்தனையில் சததன்வா ஆழ்ந்தபோது, வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் அழிந்து போனார்கள் என்ற செய்தி அவர்கள் காதுக்கு வந்தது. இதைக் கேட்டு சததன்வா துள்ளிக் குதித்தான்.

""இந்தச் செய்தி கண்ணனை நிச்சயம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும். கண்ணனுக்கு இப்போது கை உடைந்தது போல் இருக்கும். கண்ணனும், துவாரகாபதியான பலராமனும் ஆறுதல் சொல்ல அஸ்தினாபுரம் போவார்கள்'' என்றார் அக்ரூரர். 

கண்ணனும், பலராமரும் ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டு அஸ்தினாபுரம் புறப்பட்டனர். இது தான் சமயம் என்று சததன்வாவும் ஒரு கொலைக் கட்டாரியுடன் தன்னந்தனியாக சத்ராஜித்தைக் காணப் புறப்பட்டான்.

No comments:

Post a Comment