சிங்கம்புணரி
வாத்தியார் என்றால் பள்ளி ஆசிரியர் தவிர வேறு சிலரும் நமது நினைவுக்கு வருவார்கள். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் வாத்தியார் என்றால் ஆசிரியர்கூட நினைவிற்கு வரமாட்டார். அங்குள்ள அனைவராலும் வாத்தியாராக போற்றப்படும் ஒருவர் இருக்கிறார். யார் அவர்? சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள நகர் சிங்கம்புணரி. பரம்பு மலையின் பசுமையும், வள்ளல் தன்மைமிக்க மக்களும் இயற்கை அன்னையின் முழு ஆசியும் பெற்ற எழில் சூழ்ந்த நகரம் அது.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் என 5 மாவட்டங்களும் இணையும் பகுதியில் அமைந்துள்ள இந்நகர், கடையேழு வள்ளல்களில் முதன்மையானவராகப் பாடப்பட்ட பாரி வாழ்ந்த தலம். பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட இந்த மாநகரில் என்றும் வாழும் அதிசயமாக இருப்பவர் வாத்தியாரய்யா என போற்றப்படும் சித்தர் முத்து வடுகநாதர். மதுரையை நாயக்கர் ஆண்ட காலத்தில் ராமநாதபுரத்தை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்கள் சேதுபதி மன்னர்கள்.
சேதுபதி சீமையின் ஒரு பகுதியான செம்பி நாட்டில் 22 ஊர்கள் இருந்தன. இவற்றின் தலைநகராக முதலூர் இருந்தது. இந்த ஊர்களின் தலைவராக பூவலத்தேவன் நியமிக்கப்பட்டார். அவரது மனைவி குமராயி. இவர்களின் புதல்வராக 1737ல் பிறந்த குழந்தை முத்துவடுகு என்று அழைக்கப்பட்டது. முத்துவடுகின் ஐந்தாவது வயதில் பூவலத்தேவன் திடீரென்று உயிரிழந்தார். ஆட்சி ஆதிக்கத்திற்கு ஆசைப்பட்ட பங்காளிகள் முத்துவடுகு, குமராயி இருவரையும் கொலை செய்ய முடிவெடுத்தனர். பூவலத்தேவனின் நன்றிமிக்க நண்பர் இந்த தகவலை குமராயியிடம் கூறினார். தப்பினால் போதும் என்று இரவோடு இரவாக தாயும் மகனும் நடக்க துவங்கினர்.
கால்வலிக்கும்வரை நடந்து இவர்கள் அடைந்த நகரம் பாலமேடு. களைத்துப்போன நிலையில் தாயையும், மகனையும் பார்த்த அவ்வூரின் பெரிய மனிதர் ஜெகந்நாத பிள்ளை, இருவருக்கும் உணவு, இருப்பிடம் அளித்தார். முத்துவடுகிற்கு கல்வி போதித்து, பணியும் வழங்க முற்பட்டார். அன்னை பராசக்திதான் தனக்கு தெய்வம், ஆசான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் முத்துவடுகு. மிகச்சிறிய பாலமேடு கிராமத்தில், பாலகன் முத்துவடுகு பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டினார்.
ஆடு, மாடு மேய்க்க சென்றால், அருகில் உள்ள விளைந்த வயல்களில் முத்துவடுகு கூட்டிச்சென்ற கால்நடைகள் மேய்ச்சலுக்காக இறங்காது. ஒழுங்கு முறையாக காட்டுப் பகுதியில் மட்டும் மேய்ந்துவிட்டு சரியான நேரத்திற்கு அவை வீடு வந்து சேர்ந்தன. பள்ளியில் சேர்த்தபின் ஆசிரியரே வியக்கும் வண்ணம் அன்னை பராசக்தி மீது கவிதை பாடினார் முத்துவடுகு. ஒரு முறை முதுகுத் தண்டில் ராஜபிளவை நோய் வந்து ஜெகந்நாத பிள்ளை மிகவும் வேதனைப்பட்டார். மந்திரம் சொல்லி, விபூதி பூசி அதை சரி செய்தார் முத்துவடுகு. அதுமுதல் அவருடைய புகழ் சுற்று வட்டாரத்தில் பரவத்தொடங்கியது.
சிறுவனான முத்துவடுகு இளைஞனான பிறகு ஞானசித்தி பெறுவதற்காக அழகர்மலைக்கு வந்தார். அங்கு பாலைய சுவாமிகளை சந்தித்து அவரை தனது குருவாக ஏற்று உபதேசம் பெற்றார். பின்னர், மதுரை மேலூர் ரோட்டில் உள்ள பட்டூர் மற்றும் ஆலம்பட்டிக்கு சென்றார். அங்குள்ள ஆலமரத்தின் அடியில் தவமிருக்க துவங்கினார். அப்பகுதி மக்கள் அவரிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறி தீர்வு பெற்றனர்.
அப்போது அழகுமிகுந்த சிங்கம்புணரி நகரில் பீதாம்பர பயங்கரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டவர்களின் அராஜகப் போக்கு மக்களை வருத்தியது. அவர்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வருவார்கள்; ஊரையே கொள்ளையடித்துக்கொண்டு போவார்கள். தங்களை எதிர்ப்போரை மந்திரத்தால் முடக்கிப்போடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டார்கள். அவர்களின் கொட்டமடக்க சரியான நபர் முத்துவடுகர்தான் என்று சிங்கம்புணரி மக்கள் உணர்ந்து அவரை அழைத்தனர்.
நம்பி வந்தோர் குறை தீர்க்கும் அவர், ஊருக்கு வந்த உடனேயே பீதாம்பர பேயர்களை விரட்டியடித்தார். அவர்கள் மீதான பயம் விலகி, மக்களிடம் முத்துவடுகர் பற்றிய நம்பிக்கை அதிகரித்தது. அவருடைய புகழ் மேலும் பரவியது. பிரச்னைகளை தீர்த்து வைத்து அருளாசி வழங்கியதால் அவரை ‘வாத்தியாரய்யா’ என மக்கள் அழைக்கத் துவங்கினர்.
தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்தார் முத்துவடுகர். தன்னை போற்றும் மக்களிடம் தான் ஜீவசமாதி அடைய விரும்பும் தகவலை தெரிவித்தார். வாத்தியாரய்யா விருப்பப்படி சிங்கம்புணரி நகரில் உள்ள நல்லாகுளத்தின் வடகரையில் சமாதி அமைக்கப்பட்டது. 1833ம் ஆண்டு ஆடி மாதம் 28ம் தேதி பத்மாசனத்தில் அமர்ந்தபடி வாத்தியாரய்யா ஜீவசமாதிஆனார்.
கல்வியில் தேர்ச்சி காண விரும்புபவர்கள் வாத்தியாரய்யா கோயில் வந்து வணங்கிச் சென்றால் கல்வியில் சிறந்தவர்களாகின்றனர். திருமணத்தடை, குழந்தைப்பேறு, கடன் தொல்லையில் இருந்து விடுதலை என இங்கு வந்து வணங்கியவர்கள் பலரும் பல நன்மைகளையும் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு திருவிழா நடக்கிறது.
சிங்கை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு குடம், குடமாக பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்கின்றனர். மதுரையில் இருந்து சிங்கம்புணரி 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. நேரடி பஸ்கள் உள்ளன. திருச்சி - மதுரை சாலையில் கொட்டாம்பட்டியில் இறங்கி பஸ் மாறி சிங்கம்புணரி செல்ல வேண்டும். தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து வந்தால் பொன்னமராவதி வழியாக சிங்கம்புணரி செல்லலாம்.
No comments:
Post a Comment