Wednesday, 2 August 2017

மூத்தோர் சொல் கேட்காவிட்டால்


ஓர் இடத்தில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அந்த மரத்தின் காய்களைச் "சக்கரவாளம்' என்ற ஒரு வகை பறவைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும். சக்கரவாளப் பறவைகளைக் கிராமத்துப் பெண்கள் பிரியமாக வளர்ப்பார்கள். 

வேடர்கள் அவற்றை உயிருடன் பிடித்து நல்ல விலைக்கு விற்பார்கள்.

அந்தப் பறவைகளுக்கு அடிபட்டு விட்டால், அவற்றை வேடர்களால் நல்ல விலைக்கு விற்க முடியாது; குறைந்த விலைக்குத்தான் விற்க முடியும். ஒரு சமயம் இமயமலைப் பகுதியில் இருந்து 25 சக்கரவாளப் பறவைகள், சுரபுன்னை மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தன. அவை மரங்களில் கூடுகட்டி மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன. 

இந்தப் பறவைகளின் தலைவனாக சுந்தரகீர்த்தி என்ற பறவை இருந்தது. சுந்தரகீர்த்தியின் தாத்தா பறவையின் பெயர் சுதமதி.

சுதமதி அறிவும் அனுபவ முதிர்ச்சியும் கொண்டது. சுந்தரகீர்த்தி இளையது. எப்போதும் துடிதுடிப்பும் பதட்டமும் கொண்டது. அவசரப்பட்டு ஏடாகூடமாக எதையாவது செய்யும். பிறர் சொல்வதைக் கேட்காமல் தன் மனம் போனபடி நடந்து கொள்ளும். போதிய முன்யோசனை இல்லாதது. ஆணவம் கொண்டது. 
சுந்தரகீர்த்தி அவ்வப்போது ஏதேனும் தவறு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அதை, தாத்தா சுதமதி பறவை, அதிலிருந்து விடுவித்து ஆறுதல் கூறி, சரியான வழியில் செலுத்தும். இவ்விதம் அடிக்கடி நடந்து வந்தது. 

ஒருநாள், அந்தப் பறவைகள் கூடு கட்டியிருந்த மரத்தடியில், ஒரு குருகத்தி மலர்க்கொடி வளர ஆரம்பித்தது. அதை சுதமதி தாத்தா பறவை கவனித்தது. சுதமதி தன் பேரன் சுந்தரகீர்த்தியிடம், "நாம் வாழும் இந்த மரத்தடியில், இப்போது ஒரு குருகத்தி மலர்க்கொடி புதிதாக வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கொடி வேகமாக வளர்ந்து, விரைவில் மரத்தின் மீது நன்றாகப் படர்ந்து விடும். இது வளர்வதற்குள், நாம் இங்கிருந்து வேறு இடம் சென்று விட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், வேடர்கள் ஒருநாள் கொடிகளைப் பற்றிக்கொண்டு இந்த மரத்தின் மீது ஏறி வந்து, நம்மைப் பிடித்து விடுவார்கள். ஆகவே, ஆபத்து வரும் முன், நாம் வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், '' என்று அறிவுரை கூறியது. 

அதைக் கேட்ட சுந்தரகீர்த்தி, "தாத்தா! நீங்கள் மிகவும் பயப்படுகிறீர்கள். நீங்கள் சரியான பயந்தாங்கொள்ளி! இந்தக் குருகத்திக் கொடி இப்போது தான் தோன்றியிருக்கிறது. இது மரத்தில் படர்ந்து மேலே வருவதற்கு நீண்ட காலம் ஆகும். மேலும், இப்போது மழை இல்லாததால், இந்தக் குருகத்திக் கொடி விரைவில் இறந்து போகும். அப்படியே மீறி இது வளர்ந்து மரத்தின் உச்சிக்கு வந்தாலும், அப்போது அந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்!'' என்று கூறியது. 

மேலும் அது, "தாத்தா! என்னிடம் நீங்கள் இனிமேல் இந்தக் குருகத்திக் கொடியைப் பற்றி பேசாதீர்கள்!'' என்று ஆணவத்துடன் கூறியது. 

இந்த உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

அதன்பிறகு சுந்தரகீர்த்தி, குருகத்தி கொடியைப் பற்றி அடியோடு மறந்து விட்டது. 

அந்தக்கொடி சிறிது காலத்தில் வேகமாக வளர்ந்து, மரத்தின் மீது படர்ந்து கூடுகளை நெருங்கியது.

ஒருநாள் வேடன் ஒருவன் அந்தக் காட்டிற்கு வந்தான். மரத்தில் உள்ள கூடுகளில், சக்கரவாளப் பறவைகள் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். சுந்தரகீர்த்தியும் அதன் சக பறவைகளும், கூடு கட்டியிருந்த மரத்தடிக்கு வந்தான்.

வளர்ந்து வசதியாக இருந்த குருகத்திக் கொடியைப் பற்றி மரத்தின் மீது ஏறினான். 

கூடுகளில் வலை விரித்தான். பிறகு மரத்திலிருந்து இறங்கி, குளிப்பதற்கு அருகில் இருந்த ஓர் ஆற்றுக்குச் சென்றான்.

வெளியே சென்றிருந்த சக்கரவாளப் பறவைகள், ஓய்வெடுப்பதற்காக மகிழ்ச்சியுடன் கூடுகளுக்குத் திரும்பின. அவை கூடுகளில் கால் வைத்ததுமே, வேடன் விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. 

மரத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த குருகத்தி மலர்க்கொத்துக்கள், "யாரோ ஒரு வேடன் குருகத்திக் கொடிகளைப் பற்றித்தான் மேலே வந்து வலை விரித்திருக்கிறான்' என்பதைப் பறவைகளுக்கு உணர்த்தின.

அவை கலங்கின, அலறித் துடித்தன. சுந்திரகீர்த்தி தன் தாத்தா சுதமதியிடம், "தாத்தா! இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று, நீங்கள் என்னிடம் அன்றைக்கே கூறினீர்கள். உங்கள் அறிவுரையை நான் அப்போது கேட்கவில்லை. அதனால், இப்போது நாம் எல்லாரும் வலையில் சிக்கி வருந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது எப்படியும் வேடன் வந்து நம்மைப் பிடித்துவிடுவான். அவன் நம்மைக் கொன்று விடுவான். அல்லது, அவனிடமிருந்து நம்மை விலைக்கு வாங்குபவர்கள், நம் சிறகுகளை வெட்டி, தங்கள் வீட்டில் நிம்மை அடிமையாக வைத்துக் கொள்வார்கள். இப்படி ஒரு துன்பம், நம் எல்லாருக்கும் நேர்ந்ததற்கு நான்தான் காரணம். நான் பறவைகளின் தலைவனாக இருப்பதற்கு முற்றிலும் தகுதியில்லாதவன்'' என்று கூறி புலம்பியது. 

இதற்குள் வேடன், தான் வலை விரித்திருந்த இடத்திற்குச் சென்றான். வலையில் பறவைகள் சிக்கியிருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் துள்ளினான். குருகத்திக் கொடிகளைப் பற்றி ஏறி, 25 சக்கரவாளப் பறவைகளையும் பிடித்தான். 

இவ்விதம் பெரியோர் சொல் கேட்காமல் ஆணவத்துடன் பேசிய சுந்தரகீர்த்தி தானும் அழிந்ததுடன், தன்னைச் சேர்ந்தவர்களும் அழிவதற்குக் காரணமாயிற்று. 

எந்த ஓர் இயக்கம் அல்லது அமைப்பிற்கும் நல்ல ஒரு தலைமை இருக்க வேண்டும். அவ்விதம் தலைமை சரியாக அமையாவிட்டால், ஓர் இயக்கம் அல்லது அமைப்பு சீர்குலைந்து போகும். 

No comments:

Post a Comment