மலைவளம், சோலைவளம், நீர்வளம், நிலவளத்துடன் அழகரின் அருள்வளம் நிரம்பியது அழகர்கோயில். மதுரைக்கு வடக்கில் 12 மைல் தொலைவில் இக்கோயில் உள்ளது. இதற்கு திருமாலிருஞ்சோலை, உத்யானசயனம், சோலைமலை, மாலிருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகிரி என பல பெயர்கள் உள்ளன. அழகர் மலை கிழக்கு மேற்காக 10 மைல் நீளமும், ஆயிரம் அடி உயரமும் உடையது. இந்த மலையின் தென்புற அடிவாரத்தில்தான் அழகர்கோயில் உள்ளது. கருவறையில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சி தருகிறார். தவிர உற்சவர், தியாகபேரர், சுந்தரபாகு, நித்திய உற்சவர் நலந்திகழ் நாராயணன், ஏறு திருவுடையான் உள்ளிட்டோரின் சிலைகளும் உள்ளன.
இரண்டாம் பிரகாரத்தில் அக்னி மூலையில் வலம்புரி விநாயகர், தும்பிக்கை ஆழ்வார் என்ற பட்டப்பெயரோடு வீற்றிருக்கிறார். கன்னி மூலையில் சோலைமலை நாச்சியார், வாயு மூலையில் சீனிவாசன், ஸ்ரீதேவி, பூமாதேவி, யோக நரசிம்மர் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும், குபேரமூலையில் தேவசேனாதிபதியும் ஈசானிய மூலையில் ஷேத்ரபாலகனும் உள்ளனர். மூன்றாம் பிரகாரத்தில் கருட மண்டபமும், கருடன் சந்நிதியும் இருக்கின்றன. பெருமாளுக்கு மேலே உள்ள விமானத்தில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் தங்கத்தகடு பொருத்தினான். அது கொள்ளையர்களால் களவாடப்பட்டதால், இப்போது செப்புத்தகட்டில் தங்கமுலாம் பூசி பொருத்தியுள்ளனர்.
நான்காம் பிரகாரத்தின் அக்னி மூலையில் ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்கள் சந்நிதி, அதையடுத்து கல்யாண சுந்தரவல்லித் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. இப்பிரகாரத்தில் பள்ளியறை மண்டபம் உள்ளது. யானைத் தந்த கட்டில் ஒன்றும் உள்ளது. திருமலைநாயக்கர் செய்த கட்டில் இது. நான்காம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆண்டாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ரங்கநாதரை கணவராக அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ஆண்டாள், நூறு அண்டாவில் ‘அக்கார அடிசில்’ செய்து படையல் வைப்பதாக வேண்டிக் கொண்டாராம். இந்த வேண்டுதல் செய்து ஒரு மண்டலம் முடியும் முன்பு ரங்கநாதருடன் ஐக்கியமாகி விடுகிறார். அதனால் சொல்லியபடி படையலை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இதை கேள்விப்பட்டு, ஆண்டாளின் நேர்த்திக்கடனை ராமானுஜர் செலுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாளுக்கு அருகிலேயே மண்டூக மகரிஷி, ஹயக்ரீவர், கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா சந்நிதிகள் உள்ளன. எட்டு கைகளுடன் கூடிய கிருஷ்ணன் சந்நிதியில் வாசல் கதவும் உள்ளது.
ஐந்தாம் பிரகாரத்தில் அனுமான், கிருஷ்ணர், ராமர் சந்நிதிகள், 6ம் பிரகாரத்தில் நந்தவனம் உள்ளன. 7ம் பிரகாரத்தில் சப்த கன்னிகள் உள்ளனர். நாராயணவாவி தீர்த்தமும் உள்ளது. ஆடி பிரம்மோற்சவத்தின் போது இங்கு தீர்த்தவாரி நடக்கிறது. அழகர் கோயிலின் மிக முக்கியமான அம்சம் தீர்த்தம்தான். நூபுர கங்கை என அழைக்கப்படும் இந்த தீர்த்தம் அடிவாரத்திலிருந்து 3 கிமீ மலையேறினால்வந்துவிடும்.
No comments:
Post a Comment