வடலூரிலுள்ள வள்ளலார் சத்திய ஞானசபையில், வாரியார் தலைமையில் திருப்பணி நடந்து வந்தது.
பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால், வாரியார் தான் அணிந்திருந்த தங்க நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கொடுத்தார். இருந்தாலும் மனதிற்குள், ""கடவுள் நம்மை இப்படி அடகு வைக்கும் நிலைக்கு ஆளாக்கி விட்டாரே!'' என்று வருந்தினார்.
இந்த சமயத்தில், தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரும், அவருடைய மனைவியும் வழிபாட்டுக்காக வந்திருந்தனர். பணக்காரர்களான அவர்களிடம், வடலூர் திருப்பணிக்கு உதவும்படி வாரியார் வேண்டினார். சம்மதித்த அவர்கள், வாரியாரை தங்கள் ஊருக்குச் சொற்பொழிவாற்ற வரும்படி அழைத்தனர். அதன்படி அங்கு சென்றபோது, பெருமழை பெய்தது. இருந்தாலும் மழை ஓய்ந்த பின் "வள்ளலார் வரலாறு' என்னும் தலைப்பில் வாரியார் சொற்பொழிவாற்றினார்.
வழக்கமாக சன்மானமாக வாரியார் ஐநூறு ரூபாய் பெறுவது வழக்கம். இருந்தாலும் திருப்பணிக்காக ஆயிரம் ரூபாய் கேட்க எண்ணியிருந்தார். அந்த சமயத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையும், அவர் மனைவியும் பெரிய வெள்ளித் தட்டில் சாத்துக்குடி, ஆரஞ்சு, வாழைப்பழம், வெற்றிலைபாக்குகளைக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த வாரியார், நிறைய பழம் இருப்பதால் ரயில் செலவுக்கு மட்டும் பணம் தருவார்களோ என பயந்து போனார். ஆனால், தட்டில் நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. ரசீது எழுதி தருவதற்காக வாரியார் பணத்தை எண்ணிய போது 35 நூறு ரூபாய் தாள்கள் இருந்தன. வள்ளலாரே, அவர்களிடம் சொல்லி கொடுத்தது போல, 3500 ரூபாய் இருந்ததை எண்ணி வாரியார் வியப்பில் ஆழ்ந்தார்.
No comments:
Post a Comment