Thursday, 17 August 2017

தம்பதிகளின் சங்கடம் தீர்க்கும் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்


உலகில் அக்கிரமங்கள் தலைதூக்கும் போதெல்லாம் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து மக்களைக்காக்க பல அவதாரங்களை எடுத்து மக்களைக் காத்து வருகிறார். அவரின் நாமங்களுள் ஒன்றுதான் வரதராஜப் பெருமாள். புண்ணிய பூமியாம் புதுச்சேரி மக்களின் கண்கண்ட தெய்வம் இது.
   
இங்குள்ள மகாத்மாகாந்தி சாலையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடலூர் திருவந்திபுரம் பெருமாள் கோயில் போல இக்கோயிலிலும் அனைத்து விஷேசங்களும் சிறப்பாக செய்யப்படுகிறது. இதன் வரலாறு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
  
இக்கோயில் முதலில் அரச மரங்களால் சூழப்பட்டு ஸ்ரீநரசிங்க பெருமானை ஆராதனை மூர்த்தியாக கொண்ட சிறிய கோயிலாக விளங்கியது. பின்னர் பல அடியார்களின் முயற்சியால் பெருங்கோயிலாகியது என்பது செவிவழிச் செய்தி. தற்போது அந்த ஸ்ரீநரசிங்க பெருமாள் விக்ரகம் ஸ்ரீவரதராஜ பெருமாளின் சுற்று பிரகாரத்தில் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
  
புதுவையில் இருந்து ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலை கடந்த 1748ம் ஆண்டு செப்.8ம் தேதி பிரெஞ்சு வீரர்களால் அழிக்கப்பட்டதை அறிந்து, ஆனந்தரங்கப்பிள்ளை மனம் வருந்தி இடிபாடுகளுக்கு இடையே இருந்த விக்ரகங்களையும், மற்ற பொருட்களையும் துணிந்து கைப்பற்றி புதுவை வரதராஜ பெருமாள் கோயிலிலும், ஸ்ரீகாளகத்தீசுவரன் கோயிலிலும் வைத்து பாதுகாக்குமாறு ஆலோசனை கூறினார் என்று அவரது நாட்குறிப்பு கூறுகிறது.
தென்னாட்டில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஏராளமான விக்ரகங்கள் இக்கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாம். இதிலிருந்து அதன் தொன்மையை அறியலாம். இக்கோயிலின் பழைய அமைப்பு மணிமாடக்கோயில் அமைப்பினை சேர்ந்த தாகும்.

இக்கோயிலின் மூலவர் பெருமாள் பூமியில் இருந்து கிடைத்தவர். சுமார் 5 அடி உயரத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உபயநாச்சியாரோடு கம்பீரமாக காட்சியளிக்கிறார். கடலூருக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான திருவந்திபுரம் பெருமாள் கோயிலின் அபிமான தலம் இது. எனவே அங்கு பெருமாளுக்கு நடக்கும் அனைத்து விஷேசங்களும் இங்கும் செய்யப்படுகிறது. விசேஷ கண்ணாடி அறை உள்ளது. 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் கதை வடிவங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறு எந்த கோயில்களிலும் காண முடியாது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணர், அனுமர், நவநீதகிருஷ்ணர், சந்தான கோபாலர் சிலைகள் 1902ம் ஆண்டு வைத்திக்குப்பம் என்னும் இடத்தில் கிடைத்தவையாகும். இக்கோயிலின் மூலவர் பெயரையே விமானத்திற்கிட்டு வரதராஜ விமானம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்குள்ள வசந்த மண்டபம் முஸ்லிம் ஒருவரால் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். அந்நியர் படையெடுப்புகளில் பல கோயில்கள் அழிக்கப்பட்டிருப்பினும், இக்கோயிலுக்கு எந்தவிதமான அழிவும் ஏற்படாதது இதன் பெருமையை உணர்த்தும்.  இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் விசேஷங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், நடப்பு ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி, உறியடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.. இதைத் தொடர்ந்து, வருகிற புரட்டாசி மாதவிழா, தேசிகருக்கு 10 நாள் புறப்பாடு ஆகியவை நடைபெற உள்ளது. 

மேலும் சித்ரா பவுர்ணமி, ஆஞ்சநேயருக்கு லட்சதீபம், ராமானுஜர் ஜெயந்தி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மாசிமக கடல் தீர்த்தவாரி, ஸ்ரீராமநவமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் பெருமாளை தரிசிப்பதற்காக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் நடை திறந்து வைக்கப்படுகிறது.

இங்கு எல்லா விதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. திருமண தடை நீங்க, குழந்தை பேறு வேண்டி, மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்பட பெருமாளை வணங்கிவிட்டு சென்றால் நன்மை கிடைக்கும். இதேபோல் சொத்து தகராறு உள்ளவர்களும் பெருமாளை வழிபடுகிறார்கள். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கு வந்து மனமுருகி வணங்கினால் சங்கடங்கள் நீங்கி ஒன்றிணைகிறார்கள் என பக்தர்கள் கூறுகின்றனர். உலகையே தனது காலடியால் அளந்த பெருமாளை மனமுருக வழிபட்டால் அவர் பக்தர்களின் மனக்குறை தீர்த்து மகிழ்வான வாழ்வளிப்பார் என்பது நம்பிக்கை.

பச்சை நிற தீர்த்தம்

கோயிலில் சுவாமியை வழிபட்டு முடிந்ததும் சிவன் கோயில்களில் விபூதி பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தம் வழங்கப்படும். இதனை பயபக்தியுடன் பெற்றுக்கொள்ளும் பக்தர்கள் வலது கையில் வாங்கி ஒரு மிடறு குடித்து விட்டு மீதமுள்ளதை தலையில் தடவிக்கொள்வார்கள். பெருமாளின் அருளும், அனுக்கிரகமும் கலந்திருப்பதால் துளசி தீர்த்தத்திற்கு என்றும் தனி மகத்துவம் உண்டு. இக்கோயிலின் தீர்த்தத்தில் 82 ஊற்றுக் கண்கள் உள்ளன. நடுவில் 12 கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆறு தானாகவே தண்ணீரை வடித்துக் கொள்ளும். அதுவாகவே ஊறும் யாரும் ஊற்றுவதில்லை. இத்தண்ணீர் பச்சை நிறமாக இருப்பதற்கு காரணம் அப்ரகம் எனும் கந்தக அமிலம். இந்த அமிலம் இருப்பதை அறிவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த தீர்த்தத்தில் குளித்தால் காய்ச்சல், தலைவலி ஆகியவை உடனே தீரும்.

No comments:

Post a Comment