திருச்சி அடுத்த திருப்பராய்த்துறையில் உள்ள பராய்த்துறை நாதர் கோயில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரையில் உள்ள தலங்களில் மூன்றாவதாக விளங்குகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66வது தலம். முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது. இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்ற ஆணவமும், அவர்களது மனைவிகள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள், கற்புக்கரசிகள் என்று அகங்காரமும் கொண்டிருந்தனர்.
சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழுகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார். மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார். இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின் தொடர்ந்தனர். சிவனது பேரழகைக் கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்கள் கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர்.
தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக்கண்ட ரிஷிகள் வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்று எண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர். கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர். அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்கள் ஏவிய விலங்குகளையும், எய்த ஆயுதங்களையுமே தன் உடலில் ஏந்திக் கொண்டார் சிவன். சிவனை அழிக்க முடியாமல் கலங்கிய மகரிஷிகள் குழம்பி நின்றனர். சிவன் அவர்கள் முன்பு பேரழகனாக காட்சி தந்தார். உண்மை உணர்ந்த மகரிஷிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார். முன் மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்று கொண்டு சிவலிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.
பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்த போது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.
சுவாமியும் ‘ பராய்த்துறை நாதர்’ என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்பு உள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருள்கின்றனர். வைகாசியில் பிரம்மோற்சவம் நடக்கும் போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள் கூட வருவதில்லை. இது வித்தியாசமானதாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் ஆகியோர் இத்தலம் மற்றும் சுவாமியைக் குறித்து பாடியுள்ளனர்.
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார். ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ள விநாயகர் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை ‘பரளி விநாயகர்’ என்கின்றனர். சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் 22 கி.மீ தொலைவில் திருப்பராய்த்துறை அமைந்துள்ளது.
பாவங்கள் நீங்க ஐப்பசியில் முதல் முழுக்கு
மாயவரத்தில் (மயிலாடுதுறை) ஐப்பசி மாதம் கடைசி நாளன்று ‘ கடை முழுக்கு’ எனும் துலா ஸ்நானம் நடப்பது போல இங்கு ஐப்பசி மாதம் முதல் தேதியில் காவிரிக் கரையில் ‘முதல் முழுக்கு’ எனும் துலா ஸ்நானம் நடக்கிறது. இந்நாளில் சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காவிரிக் கரையில் எழுந்தருள்கிறார். இந்நாளில் காவிரியில் நீராடி சுவாமியை வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவரான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். கோயில் ராஜகோபுரம் 7 நிலை உடையது. பராய்த்துறை நாதரை வணங்கிட தோல்நோய், புற்றுநோய் நீங்கும். பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும். அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment