Saturday, 19 August 2017

ராமபிரான் பூஜித்து பாவம் தீர்த்த ராமநாதீஸ்வரர் : அன்னியூர்


திருஞானசம்பந்தர் இத்தல ஈசனை ‘அன்னியூர் மண்ணு சோதியே’ என்று போற்றி வழிபட்டிருக்கிறார். ராமநாதீஸ்வரர் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார் இறைவன். வாலியைக் கொன்ற பாவம் தீர, ராமபிரான் இத்தல ஈசனை பூஜித்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு ‘ராமநாதீஸ்வரர்’ என்கிற பெயர் வந்தது. ராமபிரான் சீதாதேவியை மீட்டுத் திரும்பியபோது இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டுச் சென்றிருக்கிறார். இத்தல நாயகி திரிபுரசுந்தரி. வேண்டிய வரம் யாவும் தந்தருளும் வரப்பிரசாதி. இத்தலம் மட்டுமின்றி, இதனைச் சுற்றியுள்ள எல்லா தலங்களுமே ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. ராமனுடன் ஜானகி தங்கிய இடம் ‘ஜானகிபுரம்’ என்றும், சீதை மாயமானைக் கண்ட இடம் ‘கண்டமான்டி’ என்றும், மரகத நிறத்திலிருந்த அந்த மாயமான் ஓடிய இடம் ‘மரகதபுரம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. 

நெடுநாள் திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் தொடர்ந்து இங்கு வந்து முறைப்படி வழிபட்டால் திருமணம் நடப்பது உறுதி. நவகிரக சந்நதியிலுள்ள சனீஸ்வரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். தன் வாகனமான காகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். வடலூர் வள்ளல் பெருமான் இங்கு வந்து வணங்கிச் சென்ற வரலாற்றுச் சிறப்பும் இந்த அன்னியூர் ராமநாதீஸ்வரருக்கு உண்டு. ‘அன்னையூர்’ என்பதே அன்னியூர் எனமருவியதாகவும், கோயிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் பெயரால் ‘வன்னியூர்’ என்று வழங்கி, அதுவே பின்னர் ‘அன்னியூர்’ ஆனதென்றும் கூறுகின்றனர். விழுப்புரம் அருகே அமைந்துள்ளது அன்னியூர்.

No comments:

Post a Comment