Saturday, 19 August 2017

பெயர் சொன்னாலே பெருமை


ஒரு மன்னன் தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் எந்த வேலையையும் தொடங்கமாட்டான். 

என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். 

பாவத்திற்குஉரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான்.

மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை.

""அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள்,'' என புலம்பிக்கொண்டே இருந்தான்.

ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார்.

அவரிடம், ""சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை.என் உயிர் பிரிய மறுக்கிறதே,'' என அழுதான்.

முனிவர் அவனைத் தேற்றி, ""மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?'' என்றார்.
""ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன்,'' என்றான்.

""இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்,'' என்றார் முனிவர்.

அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், உயிர் பிரியவில்லை.

முனிவர் மன்னனிடம் மீண்டும் வந்தார்.

""சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே,'' என்றான் மன்னன்.

""மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உ<ன் ஏவலர்கள் தானமிடும் போது, "அச்சுதா... அச்சுதா' என பரந்தாமனின் பெயரைச்சொல்லி உ<ணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து,'' என்றார். ஆனால் மன்னன் மறுத்து விட்டான்.

"" எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது,'' என சொல்லிவிட்டான்.

இதையடுத்து பரந்தாமனே மன்னன் முன் தோன்றி, அவனது மனஉறுதியைப் பாராட்டியதுடன் பிறவா நிலையும் அளித்தார்.

கடவுளின் நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது பார்த்தீர்களா! 

குழந்தைகளுக்கு உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயரை வையுங்கள். அவர்களை அந்தப் பெயரால் அழைப்பதால், இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்.

No comments:

Post a Comment