திருச்சியில் பாலகரையில் துர்க்கை அம்மனுக்கு, சுமார் 500 ஆண்டுகளைக் கடந்த தனி ஆலயம் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம். மகாமண்டபத்தின் மேல்புறம் பெரியண்ணாசுவாமி, கருப்பண்ண சுவாமி திருமேனிகள் அருள்பாலிக்க, வடதிசையில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாள் திருமேனிகள் தனி மண்டபத்தில் கொலுவிருக்கின்றன. அர்த்த மண்டப நுழைவாயிலில் இருபுறமும் துவார சக்திகளின் சுதை வடிவங்கள் அலங்கரிக்க, கருவறையில் இறைவி துர்க்கை புன்னகை முகத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இடதுகரத்தில் சங்கையும், மேல் வலதுகரத்தில் சக்கரத்தையும், கீழ் வலது கரத்தில் சூலத்தையும் தாங்கி, கீழ் இடதுகரத்தில் பாசமுத்திரை தரித்திருக்கிறாள். மகிஷனின் சிரசின் மேல் நின்ற கோலம். இளநகை தவழ அருள்பாலிக்கும் பேரழகு.
இந்த ஆலயத்திற்கு ஐந்து தலவிருட்சங்கள்! பிராகாரத்தின் தென்கிழக்கு திசையில் நாகலிங்கமரம், கிழக்கே அரசமரம், வடக்குப் பிராகாரத்தில் மகிழமரம் மற்றும் வில்வ மரம், கிழக்கே வேப்பமரம். பிராகாரத்தின் தெற்கே விநாயகர் திருமேனி பிரமாண்டமாய் அமைந்திருக்கிறது. சங்கடஹர சதுர்த்தியின்போது இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கணபதி ஹோமம் என நடை பெறுகின்றன. வடக்குப் பிராகாரத்தில் நாகர்கள், அய்யனார் அமைந்திருக்க, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இறைவியின் விமானத்தில் சுதை வேலைப்பாடுகள் அற்புதமானவை. விமானத்தை சுற்றி அஷ்டலட்சுமிகள் அலங்கரிக்க, நடுநாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒருபுறம் வக்கிர காளியின் திருமேனியும் நம்மை ஆசீர்வதிக்கின்றன. மகிஷனை வதம் செய்த துர்க்கையின் விமானத்தில், கம்சனை வதம் செய்த கிருஷ்ணனின் திருமேனிகள் அமைந்திருப்பது மிகப் பொருத்தமானதுதான்.
பங்குனி மாத மூன்றாவது ஞாயிறு தொடங்கி மூன்று நாட்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடை பெறுகிறது. தை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று அன்னை வீதியுலா வருவதுண்டு. அதற்கு முன்தினம் ஏகதின லட்சார்ச்சனை. ஆடி வெள்ளி நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள். செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். மாத பௌர்ணமி நாட்களில் மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் உண்டியல் கிடையாது. கன்னிப் பெண்களுக்கு இந்த அம்மன் கண்கண்ட தெய்வம். ஆம், ஏழு வாரங்கள் ராகுகால பூஜையில் கலந்து கொள்வதாகவும், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு அந்த ஏழு வாரங்களுக்குள்ளாகவே திருமணம் நிச்சயக்கப்பட்டுவிடுகிறது!
காலை 7 முதல் 12 மணி வரையிலும் மாலை 5.30 முதல் ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
இந்த ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி. மீ. தொலைவில், பாலக்கரையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment