Tuesday, 15 August 2017

ஐஸ்வர்யம் பெருக்கும் எறும்பீஸ்வரர் கோயில்


திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில், திருவெறும்பூரில் சிறு குன்றின் மீது புராதனப் பெருமை வாய்ந்த எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயம். இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்டதாக ஐதீகம். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 70வதாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் ஏழாவதாகவும் விளங்குகிறது.

தல வரலாறு: அரக்கன் தாரகாசுரன் இழைத்த கொடுமைகளால் எல்லையில்லா துயருற்ற தேவர்களும், முனிவர்களும், நாரதர் அறிவுரைப்படி இங்குள்ள மலையில் எழுந்தருளிய ஈசனை தொழுவதற்காக, அரக்கன் அறியாத வண்ணம் எறும்பு வடிவை எடுத்து சென்றனர். மலை மீதுள்ள கோயிலை அடைந்து சிவலிங்கத்தைத் தொழ எறும்புகள் சிரமப்பட்டதால், உறைவிடத்தையே ஈசன் எறும்புப்புற்றாக்கினார். இதனால், எறும்பீஸ்வரர் என்று இத்தல நாதர் அழைக்கப்படலானார்.
தலச்சிறப்புகள்: முற்றிலும் கற்களால் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் உள்ளது. நேரடியாக அபிஷேகம் செய்யாமல், நீர் புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிஷேகம் செய்யப்படுகிறது. வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி,  மேற்புறம் சொரசொரப்பாக(எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) உள்ளது. சிவலிங்கம் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன. லிங்க மத்தியில் பிளவு உள்ளது. 

வலப்பகுதியை சிவன், இடப்பகுதியை அம்பாள் அம்சம் என்கின்றனர். சிவசக்தி லிங்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாம். சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்வதுண்டு. இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம். மன்மதனின் மனைவி ரதி, தனது அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள். பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு ேநரே கஜலட்சுமி தனிச் சன்னதியில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக் கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் ெபருகும் என்பது நம்பிக்கை.

அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம் என்பதால், இப் பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் விதவிதமான பல்வேறு அலங்காரம் செய்கின்றனர். அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது. சிவன் கருவறைக்கு முன்பு துவாரபாலகர்களில் ஒருவர் கோபமுகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களை கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்தக் கோலத்தை அடைகின்றனர் என்பதை இவை காட்டுகின்றன. கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறம் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கரநாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொலுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு. 

மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம். இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர், நைமிசர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர். இது ஒரு பாடல் பெற்ற தலம். திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புகளை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார். சூயனான் திருவுரு நவக்கிரக சன்னதியில் தனது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக உள்ளது. கருவறை பின்புறம் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முகசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். இக்கோயிலில் சுவாமியை வேண்டிக் கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும். துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க தலம் 

இத்தலம் சோழ மன்னர்களின் பெரும் ஆதரவைப்  பெற்று விளங்கியது. முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன்,  முதலாம் ராஜராஜன் ஆகியோர் திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுகள்  காணப்படுகின்றன. இவற்றில் இறைவனார் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்ற பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகிறார். கல்வெட்டுத்  துறையினரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும்  கோவிராஜகேசரிபன்மற்குயாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப்பெற்றுள்ளனர். கி.பி 1752ம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும்  பிரெஞ்ச் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது.

No comments:

Post a Comment