ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தில் வாழ்ந்த பக்தர் ராமதாசர். அவர் தன் குருவிடம்,""குருவே! ராமபிரானின் தரிசனம் பெற தாங்கள் அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார்.
""நாளை ராமர் உன் வீட்டிற்கு விஜயம் செய்வார். தயாராக இரு'' என்றார் குரு.
ஊருக்குள் இந்த விஷயம் பரவியது.
வாசலில் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் ராமதாசர். வீட்டில் பலவித பலகாரங்கள் தயாரானது. எங்கிருந்தோ ஒரு கன்றுக்குட்டி யாரும் அறியாமல் அவர் வீட்டுக்குள் நுழைந்தது. அங்குமிங்கும் ஓடி பாத்திரங்களைத் தள்ளி விட்டது. பட்சணங்களைத் தின்ன முயன்றது. அதைக் கண்டு வெகுண்ட ராமதாசர் கம்பால் கன்றுக்குட்டியை அடித்தார். வலி தாங்க முடியாமல் கதறியபடி ஓடியது.
"கடவுளுக்காக காத்திருந்த நேரத்தில், இப்படி கன்றுக்குட்டி வந்து அலங்கோலப்படுத்தி விட்டதே' என்று வருத்தப்பட்டார் ராமதாசர். ராமரோ வரவே இல்லை. ஊரார் முன்னிலையில் தன் பக்தி பொய்த்து விட்டதே என்ற வெட்கப்பட்டார் அவர்.
குருவிடம் சென்று, ""நீங்கள் சொன்னது போல ராமபிரான் வரவில்லையே!'' என்று வருந்தினார் அவர்.
குரு அவரிடம்,"" சற்று முன் தான் ராமபிரான் வந்து, கன்றுக்குட்டி வடிவில் உனக்கு காட்சி தந்ததாகவும், நீயோ கம்பால் நையப் புடைத்து அனுப்பியதாகவும் சொன்னார்,'' என்றார். திடுக்கிட்டார் ராமதாசர்.
""குருவே! கன்றுகுட்டி வடிவில் வந்த கடவுளை அறியாமல் மோசம் போனேனே!'' என்று சொல்லி அழுதார். அப்போது ராமரே அங்கு காட்சி தந்து, எல்லா உயிரும் கடவுளின் வடிவமே என்ற உண்மையை எடுத்துரைத்து மறைந்தார்.
No comments:
Post a Comment