Wednesday, 9 August 2017

கோடி கோடியாய் அருள்மழை பொழிந்திடும் கோடீச்சுரர்: திருக்கொட்டையூர்


அவனருளாலே அவன் தாள் பணிவது பக்தனின் நிலை. ஆனால், தன்னருளாலே தன் பக்தர்களுக்கு நன்மைகள் விளைவிக்க, தானே தனக்கென பல ஆலயங்களை உருவாக்கிக்கொண்டது அந்த பரமேஸ்வரனின் கருணை. அத்தகைய ஒரு திருத்தலம் தான் திருக்கொட்டையூர். இன்றைக்கும் இத்தலத்தில் செய்யும் ஒரு நல்ல செயலும் அல்லது தீயசெயலும் கோடி மடங்காகப் பெருகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

‘குணமுடை நல்லடியார் வாழ்
கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான்
தானே!’

- என்று அப்பர் சுவாமிகள் பாடியப் பரவசமானது இந்தக் கொட்டையூரைத்தான்! நீண்ட நெடிய மதில் சுவர்கள் அரணாகத் திகழ, கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட இந்த ஆலயத்திற்கு மூன்று வாயில்கள்! முதல் கோபுர வாயில், திருத்தோரணத் திருவாயில் என்றும், இரண்டாவது கோபுர வாயில் திருமாளிகைத் திருவாயில் என்றும், ஈசனின் கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்து வாயில் திருவணுக்கன் திருவாயில் என்றும் அழைக்கப்பெறுகின்றன. முதலாவது கோபுரம் அறுபதடி உயரம், ஐந்து  நிலைகள்; இரண்டாவது கோபுரம் நாற்பதடி உயரம், மூன்று நிலைகள் கொண்டு நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் திகழ அமைந்திருக்கின்றன. கொடிமரம் கடந்து முதலாவது பிராகாரத்தினுள் நுழைகிறோம். கோடி விநாயகரைத் தரிசித்து அப்படியே கோடி முருகர், கோடி சண்டேஸ்வரர், சமயக்குறவர் நால்வர் மற்றும் ஆலயம் அமைந்திடக் காரணமாகத் திகழ்ந்த ஏரண்ட முனிவர் ஆகியோரைத் தரிசித்து, ஈசனின் கருவறை முன் மெய்மறந்து கைகூப்பி சிரந்தாழ்த்தி வணங்கி நிற்கிறோம்.

ஈசனின் திருமேனி முழுவதும் பலாப்பழம் போல் முள் முள்ளாகத் தெரிகிறது. விவரம் இதுதான்: ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாம்! மொத்தம் கோடி சிவலிங்கங்கள் இருப்பதால் இங்குள்ள ஈசனுக்குக் கோடீச்சுரர் என்ற பெயர் ஏற்பட்டது. மக்களைக் கோடீசுவரராக்கிச் சோதிக்கும் மகாதேவனுக்கும் கோடீச்சுரர் என்று ஒரு திருப்பெயர்! இரண்டாம் பிராகாரத்தில் அம்பாள் சந்நதி, வசந்த மண்டபம், பள்ளியறை, யாக சாலை ஆகியன அமைந்துள்ளன. பந்தாடு நாயகி என்னும் திருநாமம் ஏற்ற அன்னை, அழகும், சாந்தமும் தவழும் முகத்துடன் அருட்காட்சி அளிக்கிறாள். சரி, இங்குள்ள ஈசன் ஏன் கோடீச்சுரர் ஆனார்? இதற்கு பதிலாக ஒரு சம்பவப் பின்னணி உள்ளது. தவயோகியே ஆனாலும் சினம் மட்டும் கொள்ளக்கூடாது; அப்படிச் சினம் கொண்டால் தவப்பயன் வீணாகிப்போகும் என்பதை உணர்த்துவதுபோலவும்; அப்படி சினம் கொண்ட தவற்றை உணர்பவருக்குப் பரமனின் அருள் கிடைப்பது உறுதி என்பதை உணர்த்துவது போலவும் நிகழ்ந்தது அந்தச் சம்பவம்.

முன்னொரு காலத்தில் பத்ரயோகி என்ற முனிவரொருவர் இருந்தார். முக்தி அடைய விரும்பிய அவர், அதன்பொருட்டு இமயமலைச் சாரலில் நீண்ட நெடுந்தவம் ஆற்றி வந்தார். எங்கே அவரது தவம் பூரணமடைந்து, தேவர்க்குத் தலைவனான இந்திரனுக்கு அவர் நிகராகி விடுவாரோ என்ற அச்சத்தில் ரம்பை முதலான விண்ணக மகளிர், முனிவர் முன்தோன்றி, நடனங்கள் ஆடி, மயக்கி, அவரது தவத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், முக்திநிலை பெறுவதில் மட்டுமே முனைப்புடன் தவமியற்றிக்கொண்டிருந்த முனிவரிடம் அவர்களது முயற்சிகளெல்லாம் பலனற்றுப்போயின. முனிவரின் தவம் தொடர்ந்தது. காலம் கடந்தது. முனிவர் தவமியற்றிய தவச்சாலைக்கு அருகில், திரிகர்த்த தேச அரசனின் மகனான  சத்தியரதி, வேட்டையாடிய வண்ணம் அங்கு வந்து சேர்ந்தான். தியானப் பெருவெளியில் தோன்றிய ஞான ஒளிச்சுடரைப் பரவசமுடன் பார்த்தபடி இருந்த முனிவரின் பார்வை, அங்கு வந்த இளவரசனால் எந்தச் சலனமும் கொள்ளவில்லை. 

ஆழ்ந்த அமைதியுடன் அசைவற்று இருந்த அருந்தவ முனிவரின் அருட்பார்வையை அரசகுமாரன் உணரவில்லை. மாறாக முனிவர் தன்னைப் பார்த்தும் பாராததுபோல் அலட்சியமாக இருக்கிறார் என்றே தவறாக எண்ணிவிட்டான். அதன் விளைவாய்த் தன்னை அவமதித்த முனிவரைத் தானும் அவமதிக்க வேண்டும் என்ற உணர்வில், அங்கு புலியினால் கொல்லப்பட்டுக் கிடந்த ஒரு உடலைச் சிதைத்து முனிவரின் முன்போட்டுத் தகாத செயல்களில் ஈடுபட்டான். அவ்வேளையில் தியானம் கலைந்து சுய உணர்வு பெற்ற முனிவர், அரச குமாரனின் அடாத செயல் கண்டு துடித்துப் போனார். காமத்தை வென்ற முனிவர் சினத்தை வென்றாரில்லை. சினம் கொண்டு அரச குமாரனைப் பார்த்து, ‘நீ பிசாசாக மாறுவாயாக’ என்று சாபமிட்டார். சாபத்தின்படி அரசகுமாரன் பிசாசாக மாறினான். சாபம் கொடுத்த பின்னர்தான் முனிவரின் நெஞ்சில், ‘அடடா! சினம் கொண்டு சாபமிட்டதன் மூலம் தவத்தின் பலனை இழந்தோமே’ என்ற தன்னிரக்கம் தோன்றியது.

‘சினத்தை வென்றிடாத தமது சிறுமை தீர்க்கக் கோடி புண்ணியத் தலங்களுக்குச் சென்று கோடி சிவலிங்க மூர்த்தங்களைத் தரிசிப்பேன்’ என்று உறுதிகொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று ஈசனை வணங்கி வழிபடத் தொடங்கினார். இப்படிப் பல தலங்களையும், மூர்த்திகளையும் தரிசித்த வண்ணம் பத்ரயோகி முனிவர் திருக்கொட்டையூர் திருத்தலம் சேர்ந்தார். கோடி தீர்த்தம் எனப்படும் அமுதக் கிணற்றில் புண்ணிய நீராடி, ஏரண்டேஸ்வரரை வழிபட்டு, அடுத்த சிவத்தலத்திற்குச் செல்ல முற்பட்டார். அவ்வேளையில், முனிவரை இனியும் அலைக்கழிக்க விரும்பாத ஈசன், ‘முனிவரே! நீர் கோடி தலங்களுக்குக் கால்தேய நடக்க வேண்டாம். இத்தலத்தைத் தரிசித்ததே கோடி தலங்களைத் தரிசித்ததற்கு நிகராகும். இங்கு எம்மை வழிபட்டதே கோடி மூர்த்தங்களை வழிபட்டதற்குச் சமமாகும். எனவே உம் விரதம் நிறைவேறி விட்டது. எனவே நீர் இங்கேயே தவமும், தியானமும் தொடர்வீராக. உமக்கு அன்னையின் தரிசனமும் கிட்டும்’’ என்று அசரீரியாக அருள்புரிந்தார். 

ஈசன் அன்று முதல் கோடீச்சுரரானார், இறைவனின் ஆணைப்படி பத்ரயோகி முனிவர் அங்கேயே தங்கியிருந்து தவயமியற்றி வரலானார். ஒருநாள் முனிவர் ஈசனை வணங்கி வழிபட்டிருக்கையில் பச்சைக்கொடி போன்ற பாவையொருத்தி பந்தாடிய வண்ணம் அங்கு வந்து சேர்ந்தாள். ‘வந்திருப்பவள் மலைமகளான உமையம்மையோ?’ என்ற ஐயம் முனிவருக்குத் தோன்றியது. எனவே அவர் மிகப்பணிவுடன், ‘அம்மையே! நீ யார்?’ எனக் கேட்க, அன்னை கலகலவென்ற சிரிப்புடன், ‘‘நான் ராஜசேகரன் மனைவி, கெளரி’’ எனக் கூறிச் சிலை வடிவாய் நின்றாள். அன்னையின் அழகும், அருளும் ஒருங்கே சேர்ந்து தரிசனம் கிடைக்கப் பெற்ற முனிவர், பக்திப் பரவசத்துடன் அன்னையைப் பணிந்து வணங்கிப் புகழ்ந்தார். அழகு நங்கையாகப் பந்தாடிய வண்ணம் வந்து அருள் புரிந்ததால் அம்பிகை பந்தாடு நாயகி எனும் திருநாமம் ஏற்றாள். பத்ரயோகி முனிவரின் சாபத்தினால், இளவரசன் பிசாசாக மாறியது கண்ட படைவீரர்கள், அச்சம் கொண்டு ஓடிச்சென்று, நடந்தசம்பவத்தை அரசனிடம் தெரிவித்தனர்.

மிகவும் மனம் வருந்திய அரசன் அமைச்சர்களுடன் ஆலோசித்தான். அமைச்சர்கள் சொன்ன அறிவுரையின்படி தன் மகனைக் கட்டிப்பிடித்து தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் சென்றான். பல தீர்த்தங்களில் அரசகுமாரனைப் புண்ணிய நீராட்டிச் செல்லும் வழியில், தனது குலகுருவாகிய வியாச முனிவரைக் கண்டு வணங்கினான். நடந்ததைக் கேட்டறிந்த வியாச முனிவர் அவனைப் பார்த்து, ‘‘அரசனே! வருந்தாதே. தென்னாட்டில் காவிரிக்கரையில் திருக்கொட்டையூர் என்ற திருத்தலம் உள்ளது. அங்குள்ள காவிரியிலும், கோடி தீர்த்தத்திலும் உன் மகனைப் புண்ணிய நீராடச் செய்து, கோடீச்சுரரை வழிபட்டால் சாபம் நீங்கும்’’ என்று கூறினார். குலகுருவின் சொற்படி தனது மகனை அழைத்துக்கொண்டு திருக்கொட்டையூர் சேர்ந்த அரசன், அங்குள்ள காவிரியிலும், கோடி தீர்த்தத்திலும் பிசாசு வடிவிலிருந்த தனது மகனைப் புண்ணிய நீராட்டினான். உடனே அரசகுமாரன் பைசாச வடிவம் நீங்கப்பெற்று, பேரழகும், பேரறிவும் கொண்டவனாய் தோன்றினான். 

மனம் மகிழ்ந்த அரசன், அரச குமாரனுடன் கோடீச்சுரரைத் தரிசித்துப் பலநாட்கள் அங்கேயே தங்கியிருந்து பல நன்மைகளும் பெற்றான். அதாவது, சாபம் கொடுத்த முனிவரும் சரி, அவரிடமிருந்து சாபம் பெற்ற அரசகுமாரனும் சரி, தங்கள் குறைகளை ஒரே புண்ணியத் தலத்தில் ஈசனால் தீர்க்கப்பெற்றனர்! அத்திரி முனிவர் மரபில் தோன்றிய முனிவர் ஒருவர், ‘தாம் சிவத் தியானம் செய்து, சிவனருள் பெற்று, சிவானந்தப் பேரொளியுடன் ஐக்கியமாகிவிட வேண்டும்’ என்ற தீராத வேட்கையுடன் திருக்கொட்டையூர் திருத்தலம் சேர்ந்தார். அங்கு ஒரு கொட்டை மரத்தின் (ஏரண்ட மரம்) அடியில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி, இறைவனைப் புனித நீராட்ட கிணறு ஒன்றும் ஏற்படுத்தினார். நாள்தோறும் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, தவமியற்றி வந்தார். ஏரண்டம் என்கிற கொட்டை மரத்தினடியில் முனிவர் தவமியற்றியதால், முனிவருக்கு ஏரண்ட முனிவர் என்ற பெயரும், ஈசனுக்கு ஏரண்டேஸ்வரர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. 

முனிவர் ஏற்படுத்திய கிணறு அமுதக் கிணறு என்றும், கோடி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. ஊரும் ஏரண்டபுரம் எனப்பெற்றது. இவ்வாறு முனிவர் தவமியற்றி வந்த வேளையில் சோழவள நாட்டைக் கனகத்துவஜன் என்ற கனகசோழ மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில், ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற புகழுக்குக் காரணமாகத் திகழ்ந்த காவிரி ஆறு, திருவலஞ்சுழித் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள கபர்தீஸ்வரரை வழிபட்டு, அங்கிருந்த பிலத்தினுள் நுழைந்துவிட்டது. வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளநதியான காவிரி பிலத்தினுள் நுழைந்து விட்டதால் சோழ வளநாடு பஞ்சத்தில் தவித்தது. வறுமையில் வாடிய மக்கள் தங்கள் மன்னனிடம் முறையிட்டனர். மக்களின் குறைதீர்க்க மாட்டாது மன்னனும் அவன் மனைவியும் மனம் வருந்தி, இறைவனை வேண்டினர். ஒரு திருவிளையாடல் புரிந்து அவர்களைச் சோதிக்க விரும்பிய ஈசன், அசரீரியாகக் கூறினார்: ‘‘அரசனே! உன் மக்களின் குறை தீரவேண்டுமானால், நீயும் உன் மனைவி செண்பகாதேவியும், திருவலஞ்சுழி அருகில் காவிரி நுழைந்த பிலத்தினுள் சென்று விட்டால், காவிரி, வெளிவந்து உன் நாடு வளமாகும்.’’

உடனே, தான் அரசியுடன் பிலத்தினுள் புகப்போவதாக அமைச்சரிடமும், மற்றவர்களிடமும் தெரிவித்தான். ஆனால், மந்திரிகளுக்கும், மக்களுக்கும் தங்கள் மன்னவனை இழப்பதில் சம்மதமில்லை. எனவே அவர்கள் மன்னனையும், அரசியையும் திருக்கொட்டையூரில் தவமியற்றும் ஏரண்ட முனிவரிடம் அழைத்துச் சென்றார்கள். தம்மை வந்துப் பணிந்த மன்னனையும், அரசியையும், ‘நீண்ட ஆயுளுடன் வாழ்வாய்’ என்றும், தீர்க்க சுமங்கலியாகத் திகழ்வாய்’ என்றும் கூறி ஆசீர்வதித்தார் முனிவர். ஆசிகூறிய முனிவரைப் பார்த்து மந்திரியும், மற்றையோரும் நடந்ததைக்கூறி நல்வழி காட்டும்படி வேண்டினர். நடந்ததை அறிந்துகொண்ட நற்றவ முனிவர் மன்னனைப் பார்த்து, ‘‘அரசனே! வருந்தாதே. உன் நாட்டு மக்களின் குறைநீங்கிட, யாமே காவிரி புகுந்த பிலத்தினுள் நுழைந்து காவிரியை வெளிப்படுத்துகிறோம்,’’ என்றார். ஆனால், நாட்டின் பொருட்டு, நற்றவ முனிவர் தம்மைத் தியாகம் செய்ய அனுமதிக்க மன்னன் விரும்பவில்லை. மனங்கலங்கி நின்றான்.

அவனிடம் முனிவர், ‘‘மன்னனே! நீ என் பொருட்டு மனக்கலக்கம் கொள்ள வேண்டியதில்லை. மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் உனக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமான பொறுப்பு எம்மைப் போன்ற முனிவர்களுக்கும் உண்டு. மேலும் உனக்கும், உன் மனைவிக்கும் நான் வழங்கிய ஆசிமொழிகள் பொய்க்காமல் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. இந்திரன் பொருட்டு, அவன் வஜ்ராயுதம் செய்வதற்காகத் தமது எலும்பினையே அளித்து, உயிர்த்தியாகம் செய்த ததீசி முனிவரைப் பற்றி நீ கேட்டதில்லையா? எனவே, மனம் வருந்தாமல் என்னுடன் வா!’’ என்று மன்னனையும், மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு, திருவலஞ்சுழி வந்துசேர்ந்தார். ஈசனைத் தியானித்தபடியே ஏரண்ட முனிவர் காவரி புகுந்த பிலத்தினுள் நுழைந்தார். அவ்விதம் அவர் நுழைந்தவுடனேயே காவிரி வெளிவந்து பாய்ந்து பழையபடி சோழ நாட்டைச் செழிக்கச் செய்தது. மாமுனிவரைப் பணிந்து வணங்கிய மன்னன், அவர் பிலத்தினுள் புகுந்த இடத்தில் தோன்றிய ஏரண்ட லிங்கத்திற்குப் பூஜைகளும், வழிபாடு களும் செய்ததுடன், தியாகத்தின் திருவுருவான ஏரண்ட முனிவரின் ஆணைப்படி, திருக்கொட்டையூரில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஏரண்டேஸ்வரருக்கும் ஆலயம் அமைத்து வளம் பெற்றான்.

திருக்கொட்டையூரில் சிவத்தியானம் செய்து, தாம் செய்த தியாகத்தின் பலனாய்த் திருவலஞ்சுழியில் சிவத்தலம் பெற்ற ஏரண்ட முனிவரென்னும் தியாகயோகி தவமியற்றியதாலும், பிரதிஷ்டை செய்து வழிபட்டதாலும்தான் இத்தலமும், மூர்த்தமும் கோடி தலங்களுக்கும், கோடி மூர்த்தங்களுக்கும் இணையானதாக ஈசனாலேயே பத்ரயோகி முனிவருக்கு அடையாளம் காட்டப்பட்டது போலும்! அமரர்கள் பொருட்டு ஆலகால விஷத்தினை தாம் உகந்து ஏற்றுக்கொண்ட தியாகேசன் பிறர் நலனுக்காக, உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த தமது பக்தரான ஏரண்ட முனிவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருக்கொட்டையூர் திருத்தலத்திற்குக் கோடி பெருமைகள் சேர்த்த ஈசன், அவனை வழிபட்டுத் திரும்பும் நமக்கும் அருள் கோடி தந்திடுவான் என்ற உறுதியான நம்பிக்கை நம்முள் விடிவெள்ளியென விளைந்து ஒளி தருகிறது. இத்தலம் கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.

No comments:

Post a Comment