Saturday, 12 August 2017

திருத்தொண்டரின் தோழன் திருவஞ்சிக்களநாதன்


இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவனார்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே!

- திருக்கயிலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான், இந்திரன், பிரம்மன் சிறந்த தேவர் ஆகிய எல்லோரும் வந்து என்னை எதிர்கொள்ளுமாறு எனக்கு யானை ஊர்தியை அளித்தருளி, அங்கு மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள் “இவர் யார்?” என்று கேட்க, ‘‘இவன் நம் தோழன் ஆரூரன் என்னும் பெயரினன் என்று திருவாய் மலர்ந்தருளினான்’’ என்கிறார் கயிலையை திரும்பி அடைந்த சுந்தரர்! ‘பித்தா’ என்று இறைவனைப் பழித்து தன் முதல் பாடலை ஆரம்பித்து பிறகு ‘‘பிறைசூடிப் பெருமானே அருளாளா’’ என்று தொடர்ந்த சுந்தரர், வன் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டார். திருமணக் கோலத்தில் இருந்த ஆலால சுந்தரர், முதியவர் வடிவில் ஓலைச் சுவடியுடன் வந்த ேவயுறு தோளி பங்கனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். அதனால் சமயக்குரவர்கள் நால்வரில் சுந்தரர் இன்றும் சர்வாலங்காரங்களுடன் மாப்பிள்ளையாகவே அனைத்து கோயில்களிலும் காட்சி தருகிறார்.

கனகத் திரளாகக் காக்கும் நஞ்சுகண்ட கண்டனும் சுந்தரரும், நட்பிற்கு, அதுவும் இளம் வயது தோழமைக்கு, எடுத்துக்காட்டாகவே இருந்திருக்கின்றனர். நண்பனின் தவறைச் சுட்டிக்காட்டிய நமச்சிவாயன், காதலுக்கும் தூது போகிறார். திருப்பனங்காட்டூரில் தாகம் தீர்க்க குளிர்ந்த நீரும், கட்டுச் சோறும் தருகிறார். ஆட்கொள்ள வேண்டிய தருணத்தில் இறைவழி காட்டுகிறார். இதுவல்லவோ உண்மையான நட்பு! தனது இருப்பிடமான கயிலை வாயிலில் தன் நண்பரை எதிர்கொண்டழைத்த பசுபதிநாதன் ‘இவர் என் தோழன்,’ ‘என் ஊரன்,’ ‘திருவாரூரைச் சேர்ந்தவன்’ என்று மற்றவர் களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்; ஆட்கொள்கிறார். 
சுந்தரருடன் சென்றதால் கயிலையில் இறைத் தம்பதியினரின் தரிசனம் கிடைத்தது சேரமன்னனுக்கும். 

திருஅஞ்சைக்களம் வந்தவுடன் ஒரு சில விளையாடல்களை நிகழ்த்திய சுந்தரருக்கு முன்பிறவி வாசம் வந்துவிட்டது. ‘போதுமய்யா! மழப்பாடியுள் மாணிக்கமே! 
சிற்சபேசனே! என்னை ஆட்கொண்டருள்வாய்’ என்று வேண்டினார். வெள்ளை யானை வந்துவிட்டது. அஞ்சைக் களத்து நாதனைத் துதிக்க சுந்தரருக்கு வாய்ப்பு இல்லை! கயிலைக்கு செல்லும் வழியில் பதிகங்களைப் பாடி ‘இவற்றை திரு அஞ்சைக் களத்தில் வீற்றிருக்கும் பெருஞ்சோதியான் கோகழி ஆண்ட குருமணியிடம் சேர்ப்பாயாக’ என்று வருணபகவானிடம் இறைஞ்சுகிறார்.

ஊழிதோ றூழிமுற்றும் உயர் பொன் நொடித் தான் மலையைச்
சூழிசையின் கரும்பின் சுவைநாவல ஊரன் சொன்ன
ஏழிசை இன் தமிழால் இசைந்தேத்திய பத்தினையும் 
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே!

திருவஞ்சிக்களம் என்று மக்களால் அழைக்கப்படும் (நொடித்தான் மலை என்றும் சொல்லப்படுகிறது) சேரநாட்டு திருப்பதியிலிருந்து அல்லவா சுந்தரரும், சேரமன்னரும் புறப்படுகின்றனர். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்றுதான் சுந்தரரும், சேரமானும் ஆத்ம வேள்விக்குக் கிளம்புகிறார்கள்! கோயம்புத்தூரைச் சேர்ந்த சேக்கிழார் திருக்கூட்டம் இந்த நாளை பெரிய சிவத்திருநாளாக கொண்டாடுகிறார்கள். திருவஞ்சிக்களம் திருக்கோயிலில் மிகச் சிறப்பான வழிபாடு நடத்துகிறார்கள். கேரள அரசின் ஈடுபாடு அதிகம் இல்லை. முதல் நாளே நிறைய சிவனடியார்கள் சமையலுக்கும் தங்குவதற்கும் வேண்டிய அனைத்து ஏற்பாடுகளுடன் திருவஞ்சிக்களத்தில் குழுமிவிடுகிறார்கள். சுந்தரருக்கும், சேரமானுக்கும் உலோகச் சிலைகள் இருக்கின்றன. வெள்ளை யானை வாகனமும், வெள்ளைக் குதிரை வாகனமும் ஜொலிக்கின்றன. கோயிலின் வெளிப் பிராகாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அங்குதான் சிவனடியார்கள் தங்குகிறார்கள். 

இந்த அர்ச்சாமூர்த்திகளை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் பாரதப் புழை (நீலாவதி) ஆற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு புனித நதிக்கரையில், மிகவும் சிறப்பான அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்து, விடிகாலை கிளம்பி தேவாரத் திருவாசக முழக்கங்களுடனும் வாத்திய கோஷங்களுடனும் ஊர்வலமாகப் புறப்பட்டு சுவாதி நட்சத்திர தினத்தன்று காலையில் கோயிலை அடைகின்றனர். அங்கு மண்டபத்தில் இந்த அர்ச்சாமூர்த்திகளை வாகனங்களுடன் சிவனாரை நோக்கி எழுந்தருளச் செய்வித்து, மிகச் சிறப்பான ஆராதனைகளையும், கூட்டுப் பிரார்த்தனைகளையும் மேற்கொள்கிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் மலர் அலங்காரமும், விபூதி அபிஷேகமும் நடைபெறுகின்றன.

குருபூஜைக்குப் பிறகு படையல் போட்டு, எல்லா சிவநேசர்களுக்கும் மதிய உணவு  வழங்கப்படுகிறது. சிறிது ஓய்வுக்குப் பிறகு மறுபடி மாலை ஆராதனைகள், பூஜைகள், திருமுறை முழக்கங்கள், சிவபுராண விளக்கங்கள் நடைபெறுகின்றன. கோயில் பிராகாரத்தில் சுந்தரருக்கும் சேரமானுக்கும் கற்சிலைகள் உள்ளன. அங்கு திருவஞ்சிக்கள நாதரைப் போற்றிப் பாடும் பத்துப் பதிகங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு இருக்கும் ஒரு மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சேரமானுக்கு குருபூஜை நடக்கிறது. கோயிலின் வெளியே மலையாளத்தில் நிறைய எழுதப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்ச்சி பற்றி தமிழில் ஒரு விளம்பர பலகையும் குருபூஜை நடக்கும் மண்டபம் செல்லும் வழி பற்றிய அறிவிப்பும் இருந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்டு 
ஆழமுகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரம் அல்ல தொரு
வேழம் அருள் புரிந்தான் நொடித்தான் மலை உத்தமனே!

அடுத்த வருடம் ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளன்று திருஅஞ்சைக்களம் சென்று மேற்குறிப்பிட்ட வைபவங்களை கண்ணாற, உளமாறக் காண திட்டமிட்டுக் கொள்ளுங்கள் அல்லது ஆவல் மிகுத்திருக்குமானால் இப்போதே அங்கே சென்று கற்பனையால் அந்தக் காட்சிகளைக் கண்டு சுந்தரரையும், சேரமானையும் திருவஞ்சிக்களநாதனோடு தரிசனம் செய்துவிட்டு வரலாம். அப்படியும் இல்லையா, சுந்தரருக்கு கிடைத்த உமையொரு பாகனின் தரிசனமும், அருளும் நமக்கும் கிடைக்க நமசிவாய நாமம் ஜபிக்கலாம். இது சாத்தியம்தானே! திருவஞ்சிக்களம் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. 

திருச்சூருக்கும் எர்ணாகுளத்துக்கும் இடையே அமைந்துள்ளது. திருச்சூரிலிருந்து 50 கி,மீ. தூரத்திலும், எர்ணா குளத்திலிருந்து 40 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இரிஞ்சாலக்குடா என்ற ரயில் நிலையத்திலிருந்து இந்த இடத்திற்குச் செல்ல பஸ் வசதியும், ஆட்டோ வசதியும் உண்டு. 

No comments:

Post a Comment