பதினெட்டு சித்தர்களில் முதன்மை பெற்றவர் அகத்திய மாமுனிவர். இவரின் முதல் சீடர் உரோமச மகரிஷி. பிரம்மனின் பேரன். இவர் முக்தியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அகத்திய மாமுனிவர் உடனே, ‘‘புண்ணிய நதியான தாமிரபரணியில் ஒன்பது மலர்களை எடுத்து விடு. அந்த மலர்கள் எங்கெல்லாம் நிற்கிறதோ, அங்கெல்லாம் சிவாலயம் அமைத்து வணங்கு. பின் இறுதியான மலர் நிற்கும் இடத்திலுள்ள சங்கம தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி நின்றால், நீ முக்தியடையலாம்’’ என்றார். அதன்படி உரோமச மகரிஷி ஒன்பது மலர்களைப் பறித்து தாமிபரணியில் விட்டார். அவை பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம், நிறைவாக சங்கம தீர்த்தத்தில் நின்றன. இவ்விடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி நின்றார், முக்தி பெற்றார்.
உரோமச மகரிஷி உருவாக்கிய முதல் கயிலையான பாபநாசத்தில் சூரிய அம்சமாக சிவபெருமான் இருக்கிறார். சிம்ம ராசிக்காரர்கள் இங்கு வந்து சிவனை வணங்கி நலம் பெறலாம். ஈசனுக்கு பாபநாசர், கயிலாயநாதர், பழமறை நாயகன், முக்காளிங்க நாதர், வயிராசலிங்கம் என்று பல்வேறு பெயர்களும் உண்டு. அம்மையின் பெயர் உலகம்மை. இத்தலத்து இறைவனை வழிபட்டால் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபட்டதற்கு சமமாகும் என்கிறார்கள். வடநாட்டில் சித்திரை சேனன் என்ற அரசன் ஆட்சி நடத்தி வந்தான். அவன் ஊழ்வினைப் பயனாக மூடர்களுடன் உறவு கொண்டான். இதனால் தீய செயல்களை மேற்கொண்டான். நீதிமுறை தவறி மக்களை பல வகைகளிலும் துன்பத்தில் ஆழ்த்தினான். இதனால் அந்நாட்டு மக்கள் மனம் வெறுத்தனர். கொடுங்கோல் ஆட்சியில் வாழ்வதைவிட காட்டில் வாழ்வதே மேல் என்று கருதி நாட்டை விட்டு வெளியேறினர்.
வடக்கே கௌட நாட்டைச் சேர்ந்த அந்தணன் சுந்தரன். இவன் தீய விஷயங்களில் ஈடுபட்டு தாய், தந்தையரையே துன்புறுத்திக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. வருந்திய சுந்தரன் தனது பாவம் நீங்க பல இடங்களில் சென்று நீராடினான். ஆனால், குணமாகவில்லை. இறுதியில் பாபநாசம் வந்து மார்கழி மாதம் அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடினான். அங்கு அவன் தோஷம் நீங்கப் பெற்றான். அம்பாள் உலகம்மை, கேட்ட வரம் தரும் அன்னையாகத் திகழ்கிறாள். இக்கோயிலுக்கு தாமிரபரணி தீர்த்தம், வேததீர்த்தம், பழைய பாபநாச தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வைரவ தீர்த்தம், பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கு வருடம் முழுவதும் தண்ணீர் விழும் அற்புத அருவி, இயற்கையின் கொடையாகத் திகழ்கிறது. இங்கிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள பாணதீர்த்தம், ராமபிரான் தனது தந்தை தசரதனுக்கு ஆடி அமாவாசை அன்று நீத்தார் கடன் செலுத்திய இடமாகும்.
எனவே, இங்கு ஆடி அமாவாசையில் பிதுர்க் கடன் கழிப்போர் லட்சக் கணக்கில் கூடுவர். நாம் பாவத்தினைப் போக்க கங்கையை நோக்கி பயணம் செய்கிறோம். ஆனால், கங்கையே தன் பாவத்தைப் போக்கிக்கொள்ள மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் சூட்சுமமாக வருவதாக முக்காளிங்க முனிவர் எழுதிய பாபநாச தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பாவம் போக்க காசிக்குச் செல்ல வேண்டும் என்பர். ஆனால், காசியில் செய்த பாவம் தொலைய பாபநாசம் வந்து தாமிரபரணியில் மூழ்கி பாபநாசரை வணங்கினால் தீரும் என்பது ஐதீகம். கோயிலிலுள்ள தாமரைத் தடாகத்தில் சித்திரை விஷு அன்று தெப்பத் திருவிழா நடக்கும். இக்கோயில் தரிசனம், கண் நோய், சரும நோய் நீக்கி உடல் நலம் மேம்படச் செய்யும். தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் பாபநாசம் பாபநாசர் கோயில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்ததால் இறைவனால் இங்கு அனுப்பப்பட்ட அகத்தியருக்கு இறைவன் தன் திருக்கல்யாணத்தை காட்டியருளிய தலம் இது.
இங்கு மலையின் மடியில் உறையும் இறைவனின் கால் தொட்டு ஓடும் தாமிரபரணி தீர்த்தக் கட்டத்தில் நீராடுவதும், மூத்தோர்களுக்கு சிரார்த்தம் செய்வதும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் இங்கு கோயில்கொண்டிருக்கும் ஈசனுக்கு பணிவிடை புரிந்தவர் கேசவன் போத்தி. தினமும் அதிகாலை எழுந்து தாமிரபரணியில் நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நந்தவனத்தில் அன்றலர்ந்த மலர்களை ஆரமாக்கி சூட்டி திருப்பணி செய்து வந்தார். இங்கு கொடிமரத்தின் முன்புள்ள நந்தி அப்போது உயிர்ப்புள்ளதாக இருந்தது. இறைவனிடம் அடங்கிப் போகும், ஆனால், மனிதர்களிடம் வம்பு செய்யும்! கடவுள் கைங்கர்யம் செய்து வந்த கேசவன் போத்தியிடமும் அது முரட்டுத்தனம் புரிந்தது. அடிக்கடி அவரை முட்டித் தள்ளியது.
இதனால் வேதனையடைந்த கேசவன் போத்தி ஒருநாள் ஆத்திரம் மிகுந்து நந்தியின் இடது காதை அரிவாளால் வெட்ட, நந்தியின் கோபம் அதிகரித்தது. தன் காதை அரிந்த கடுப்பில் கேசவன் போத்தியை வேகமாக முட்டித் தள்ளியது. இதில் அவர் நோய்வாய்ப்பட்டார். மரணப் படுக்கையில் இருந்த அவர், “இறைவா, உமது திருப்பணிக்கு நந்தி இடையூறு செய்தது, அதற்கு ஈசனான நீரே பொறுப்பு, நான் உமக்கு பணிவிடை புரிவதிலேயே அகமகிழ்ந்தவன். இப்போது அந்த வாய்ப்பை இழக்கப் போகிறேன். எனவே, உமது புகழ் நிலைக்கும்வரை எனது நினைவும் பக்தர்களுக்கு வரவேண்டும். ஆகவே உமது திருவிழா நாட்களில் முதல் பூஜை நான் சமாதியடையும் இடத்தில் நடக்க சித்தம் கொள்ள வேண்டும்’’ என்று வரம் கேட்டார். ஈசனும் அவ்வாறே ஈந்தார்.
இன்றளவும், பாபநாசர் கோயிலின் முக்கிய திருவிழாக்களான மார்கழி திருநாள், சித்திரை விஷு போன்ற விழாக்கள் தொடங்கும் முன்பு யானை பாலத்தின் கீழ் ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள கேசவன் போத்தியின் சமாதியிலேயே முதல் படையல், பூஜை நடக்கிறது. போத்தி இறைவனின் அருளாசி பெற்றவர் என்பதால் அவரது சமாதியில் தீபம் ஏற்றி வழிபடுவோருக்கு எண்ணியது நிறைவேறுகிறது. விழாக்காலங்களில் பலரும் இங்கு வந்து விளக்கேற்றி வணங்குகின்றனர். பாபநாசர் கோயிலில் உள்ள நந்தி இன்றளவும் காது அறுபட்ட நிலையில், அந்த இறைச் சம்பவத்துக்கு சாட்சியாக உள்ளது.
நெல்லை மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து பாபநாசத்துக்கு பஸ் வசதி உண்டு. அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோவிலும் இந்த கோயிலுக்குச் செல்லலாம்.
No comments:
Post a Comment