மலர மலர சிரித்துக்கொண்டு குளிரக் குளிர பாலாபிஷேகம் ஏற்றுக்கொண்டு, ‘உன்னிக் கிருஷ்ணனாக, அதாவது சின்னக் கண்ணனாக தெய்வக் குழந்தை அருள் வழங்கும் திருத்தலம், குருவாயூர். குருவாயூர் என்றாலே கூடவே நினைவுக்கு வருபவர் ‘நாராயணீயம்’ எழுதிய மேலபத்தூர் நாராயண பட்டத்திரி. குருவாயூர் கிருஷ்ணனை முன்னிறுத்தி, பாகவதத்தின் சாரமாக, சமஸ்கிருதத்தில் பக்தி சொட்டச்சொட்ட துலங்கும் கிருஷ்ண காவியமே ‘நாராயணீயம்.’ கேரளாவில் திருச்சூர் நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது குருவாயூர். பொழுது புலருகிறது என்றால் இங்கே மட்டும் விடியற்காலை மூன்று மணிக்கு என்று அர்த்தம். அதுதான் குருவாயூரப்பனின் நிர்மால்ய தரிசனம் காணும் வேளை. இது அந்தத் தலத்தில் மிக முக்கியமான தரிசனம். இதைக்காண பாரதத்தின் வட-தென் பகுதிகளிலிருந்தெல்லாம் தினந்தோறும் பக்தர்கள் வருகிறார்கள்.
‘குருவாயூரப்பா... குருவாயூரப்பா... நாராயணா...!’ என்று அவர்கள் ஓங்கி உச்சரிக்க, நாதஸ்வர இசை ஒலிக்க, சங்கம் முழங்க கிருஷ்ணனின் சந்நதிக் கதவுகள் திறக்கப்பட்டதும் தீப ஒளியுடன் அப்பனின் நிர்மால்ய தரிசனம்… மெய்சிலிர்க்கிறது! (ஆண்கள் மேல் சட்டை அணிந்து ஆலயத்தினுள் நுழையக்கூடாது என்று சம்பிரதாயம். அதற்காக சட்டை -மற்றும் காலணி உடைமைகளை பத்திரமாக வைக்க வெளிவாசலருகேயே ஒரு இடமிருக்கிறது.) கோயிலினுள் நுழைந்ததும் வெளிப்பிராகாரம். அதைக்கடந்து கருவறை நோக்கிச் செல்லலாம். பொதுவாக வெளிப்பிராகாரத்தைச் சுற்றிவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும். ஆனால், அப்பனின் நிர்மால்ய தரிசனம் காண விரும்புவோர் நேராகக் கருவறை நோக்கியே செல்கிறார்கள். சின்ன வாசல், நெருக்கியடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். ஆகம விதிப்படி அப்படித்தான் வாசல் இருக்க வேண்டுமாம். இன்னொரு கண்ணோட்டப்படியும் அது சரிதான் என்று தோன்றுகிறது. பகவான் இருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையும் இப்படித்தான் குறுகலாக இருக்குமாம்.
அதன்படி ‘பூலோக வைகுண்டம்’ எனப்போற்றப்படும் குருவாயூரப்பன் சந்நதிக்குச் செல்லும் வழியும் குறுகலாகவே இருக்கிறது. சரசரவென்று மக்கள் வேகமாக ஓடுகிறார்கள். ஆனால், நின்று நிதானமாக சாமியைப் பார்க்கவிட மாட்டார்கள். சுற்றிச் சுற்றி வந்து எத்தனை தடவையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். எத்தனை தரம் பார்த்தாலும் குருவாயூர் கிருஷ்ணனின் அழகு அலுக்காது, சலிக்காது. அப்படியோர் அழகுக் கிருஷ்ண விக்கிரகத்தை வேறு எந்தத் தலத்திலாவது காண முடியுமா? அதென்ன சர்வ சாதாரண விக்கிரகமா! நான்கு யுகங்களாகப் பல மகான்கள் பூஜித்து வந்த விக்கிரகம். இது சாதாரணக் கல்லில் ஆனதல்ல.
பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வப் புனிதப் பொருளில் ஆனது! இதை ஆதியில் மகாவிஷ்ணுவே வைத்திருந்தார். பின் அது பிரம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் காசியப பிரஜாபதி கைக்கு வந்து முடிவில் கிருஷ்ணாவதார காலத்தில் வசுதேவரிடம் வந்தது. பின் கிருஷ்ணனின் கைக்கு வந்து, துவாரகையில் இருந்தது.
கிருஷ்ணாவதார நோக்கம் நிறைவேறி, சுவாமி வைகுந்தத்துக்குச் செல்லுமுன், ‘‘தீமைகள் மலிந்திருக்கும் கலியுகத்தில் மக்களுக்குக் காவலாக இந்த விக்கிரகம் இருக்கட்டும். அதன்மூலம் நான் அருள்பாலிப்பேன்’’ என்று அந்த விக்கிரகத்தை விட்டுச் சென்றார். அதைப் பிரதிஷ்டை செய்வது பற்றி தன் அத்யந்த பக்தனான உத்தவரிடம் ஓர் ஏற்பாட்டையும் கூறிவிட்டுப் போனார், பகவான். அதாவது, துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும் என்றும் அப்போது அந்த வெள்ளப் பரப்பில், இந்த கிருஷ்ண விக்கிரகம் மாத்திரம் மிதக்கும் என்றும் அதனைத் தேவ குருவான பிரஹஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் பகவானின் ஏற்பாடு. கலியுகம் பிறந்ததும், பிரஹஸ்பதியான குருவும் வாயு பகவானும் அதைப் பிரதிஷ்டை செய்ய இடம் தேடி அலைந்தார்கள். அப்போதுதான் பரசுராம தேசமாகிய கேரளத்திலுள்ள இந்தத் திருத்தலத்தில் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யுமாறு சாட்சாத் சிவபெருமானே அருள்புரிந்தார்.
ஆமாம், அவர்கள் வரும்போது ஆலயத்தின் அருகிலுள்ள ருத்ர தீர்த்தத்தில் சிவன் தபசில் இருந்தாராம்; அந்த இடத்தை கிருஷ்ண விக்கிரகத்தின் பிரதிஷ்டைக்காக நியமித்துக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் அருகிலுள்ள மம்மியூரில் பார்வதியுடன் எழுந்தருளிவிட்டார். (இந்த தலத்துக்கு வந்து வழிபடும் பக்தர்கள் மம்மியூருக்குச் சென்று சிவன்-பார்வதியையும் வழிபட்டால்தான் பிரார்த்தனை நிறைவு பெறுமாம்!) இப்படி குருவும், வாயுவும் சேர்ந்து இணைந்து பிரதிஷ்டை செய்ததாலேயே இத்தலத்துக்கு, ‘குருவாயூர்’ எனப்பெயர். வெளிப்பிராகாரத்திலேயே கொடி மரத்தடியில் இருக்கும் பலிபீடம், குருவுக்கும் வாயுவுக்கும் அமைந்த அதிஷ்டானமாம்! ஒருமுறை கோவிலைச் சுற்றி மடப்பள்ளி, ஆபரண நிலவறை, கணபதி சந்நதி, பள்ளிகொண்ட பெருமாள் திருவுருவம் ஆஞ்சநேயசுவாமி சந்நதி எல்லாவற்றையும் தரிசனம் செய்துவிட்டு வருவதற்குள் தன் ஆபரணங்களையும் முந்திய நாள் மாலைகளையும் களைந்துகொண்டு அபிஷேகத்துக்கும், அடுத்த அலங்காரத்துக்கும் தயாராகி விடுகிறார் கிருஷ்ணன்!
அந்த பக்தர் பரிபாலனை பரவசத்துடன் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். நிர்மால்யங்களைக் களைந்ததும் தூய நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் நடக்கிறது. அந்த எண்ணெய் நீங்க வாகைப்பொடி பூசப்படுகிறது. இந்த வாகைச் சாத்து, அபூர்வ பிரசாதம். இதை உண்டு, தீர்த்தம் அருந்தியவர்களுக்கு தீராப்பிணி தீரும். நாராயண பட்டத்திரியும் அப்படித்தான் பிணி நீங்கப்பெற்றார். வாகைச் சாத்துக்குப் பின் நான்கு ஒதிக்கன்கள் (வேதம் சொல்லும் நம்பூதிரிகள்) புருஷஸுக்தம் சொல்ல, சங்காபிஷேகம் நடக்கிறது. பின் தங்கக் கலசத்தில் தூய நீர் அபிஷேகம், பின் சுத்த அன்னம் என்னும் ‘மலர்’ நைவேத்தியம்... இப்படி கண்ணனின் ஆலயத்தில் பூஜைமுறை தொடருகிறது. இந்தப் பூஜை முறையை அமைத்துக் கொடுத்தவர் அத்வைத ஆசார்யரான ஆதிசங்கர பகவத் பாதாள்தான்! கிருஷ்ணன் ஆலயத்தில் சைவ மகான் நிர்ணயித்த பூஜைமுறை! எங்கிருக்கிறது பேதம்? அபிஷேகம் முடிந்ததும் குழந்தைக் கண்ணனாக முதல் அலங்காரம்.
இடையில் அரைஞாண், கையில் குழல். தலையில் மயிலிறகு... ‘உன்னிக் கிருஷ்ணா ஓடிவா! ஓடிவா!’ என்று உருகுகிறது மனசு. அடுத்த பூஜையின்போது குட்டிக் கிருஷ்ணன் அலங்காரம் களைந்து அபிஷேகம் செய்து, பெரிய கிருஷ்ணனாக அலங்காரம் கொள்கிறார் பகவான். கதகளி முதலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார் இந்த வளர்ந்த கிருஷ்ணன்! வெளிப்பிராகாரத்தில் ‘அன்னப் பிராசனம்’ காட்சிகள் காணப்படுகின்றன. கைக்குழந்தைக்கு முதன் முதலாக அன்னம் ஊட்டும்போது, குருவாயூரப்பன் சந்நதியிலிருந்து லய நைவேத்தியப் பிரசாதத்தைப் பெற்று, ஊட்டும் பிரார்த்தனையே அது. தான் தின்ற வெண்ணெயின் பலனை, நம் பிள்ளைகளுக்கு இப்படி அன்னப் பிரசாதமாகத் தந்து அவர்களை ரட்சிப்பதற்காகவே, கோபியரிடமிருந்து முன்பு திருடித் தின்றானோ கிருஷ்ணன்! சந்நதிக்கு எதிரேயே தென்புறத்தில் இன்னொரு விசேஷ பிரார்த்தனை - துலாபாராம்! பிரார்த்தனை செலுத்துபவர்கள் வரிசையில் காத்திருந்து தம் எடைக்கு எடை, தாம் பிரார்த்தித்துக் கொண்ட பொருளைக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.
வாழைப்பழம், இளநீர், வெல்லம், கயிறு... இப்படி ஏதோ ஒன்று. இதற்காக பக்தர்கள் தாங்களே பொருளை வாங்கிக்கொண்டு போக வேண்டுமென்பதில்லை. எல்லாப் பொருட்களும் கோயிலிலேயே கிடைக்கிறது. எடை போட்டு நாம் எடைக்குரிய பொருளின் விலையை மட்டும் செலுத்தினால் போதும். அந்தப் பிராகாரத்தில் சிலர் உண்டியலில் பணம் செலுத்துகிறார்கள். வேறுசிலர் கொடி மரத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் குன்று மணியைத் துழாவிவிட்டு காசு போடுகிறார்கள். பரு போன்ற சரும வியாதிகள் இந்தப் பிரார்த்தனையால் வராமலிருக்குமாம். ஆலயத்தின் வெளிவாசலில் தினமும் ஏகப்பட்ட கல்யாணங்கள். பத்து நிமிடத்தில் முடிகிறது. படு சிக்கனம்! விடியற்கால நிர்மால்ய தரிசனம் தொடங்கி உஷத்கால பூஜை காலசந்தி, உச்சி பூஜை, பின் மாலை தீபாராதனை, அத்தாள பூஜை திருப்புகா (வாசனைப் புகை போடுதல்) ஆகிய பூஜா காலங்கள் வரை ஆலய வெளிப்பிராகாரம் விசேஷ கலகலப்புடன் திகழ்கிறது.
‘சாக்கியக் கூத்து,’ ‘கிருஷ்ணனாட்டம்’ என்ற விசேஷ பக்திக் கூத்துகளும் தினந்தோறும் பரவசம் பொங்க நாராயண ஜபமும் நடக்கும் கூத்தம்பலம் அந்தப் பிராகாரத்தில்தானிருக்கிறது. ஆறுமாத காலம் தம் குடும்பத்திலிருந்து விலகி ஆலயத்திலேயே பிரம்மச்சரிய ஒழுக்கத்துடன் வாழும் மேல் சாந்தி இருக்குமிடம், மடப்பள்ளி இவற்றோடு, ஆலயத்தின் தெய்வீக வரலாற்றில் சம்பந்தப்பட்ட மகான்கள் கவிஞர்கள், ஆலயத்தை நிறுவிய மானவேத ராஜா போன்றோரின் திருவுருவச் சிலைகளும், தெய்வச் சிலைகளும் உள்ள அந்தப் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில், நைவேத்தியங்களுக்குச் சீட்டு கொடுக்குமிடமும் நைவேத்தியங்கள் வாங்குமிடமும் உள்ளன. கம்பீரமாக யானைமீது உற்சவ மூர்த்தியை எழுந்தருளச்செய்து பரிவாரத் தேவதைகளுக்கு சீவேலி (நைவேத்தியப் பிரசாதம் அளிக்கும்) பூஜையும் அங்கே நடக்கிறது.
யானைமீது அமர்ந்திருக்கும் கம்பீரம் மனதை மயக்கும். ஏராளமான யானைகள், ஆலயத்துக்குச் சொந்தமாக இருக்கின்றன. அத்தனையும் பக்தர்கள் காணிக்கையாக அளித்தவை! வேறு எந்த ஆலயத்துக்கும் இவ்வளவு யானைகள் கிடையாதாம். ஆண்டு உற்சவத்தின்போது இவற்றைக்கொண்டு ‘யானை ஓட்டம்’ என்ற பந்தயம் நடக்கிறது. இந்த யானைகளுள் ‘குருவாயூர் பத்மநாபன்,’ ‘கஜராஜன் கேசவன்’ என்ற யானைகள் ரொம்ப அறிவுடனும், தெய்வ சக்திகொண்டும் திகழ்ந்தவையாம், மதம் இளகிய காலத்திலும் ஓர் உயிருக்கும் துன்பம் தரவில்லையாம்! இரண்டும் இப்போது உயிரோடு இல்லை. ‘குருவாயூர் பத்மநாபன்’ யானையைப் படமாக வரைந்து, ஆலயத்தில் மாட்டி வைத்திருக்கிறார்கள்! கேசவனைப் பற்றி ஒரு திரைப்படமே எடுத்திருக்கிறார்கள்! ஏகாதசி அன்று விரதம் காத்து இறந்த யானை அது! இந்தப் பிராகாரத்தை ஒட்டி ரொம்பச் சின்னதாக ஒரு சந்நதி கொண்டிருக்கிறாள் பகவதி அம்மன். இரவு அத்தாள பூஜை, ஏழைகளின் பூஜை. அந்த அத்தாள பூஜைக்குப் பின் ஏழைகளுக்கு அன்னதானம் உண்டு. தினமும் யாராவது குருவாயூரப்பன் அருளால் கட்டாயமாக ஏற்பாடு செய்வார்கள். அதற்காகவே மக்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த அத்தாள பூஜையில் ஆபரணங்கள் அணிந்து, மாலைசூடிக் கண்கொள்ளாத் திருக்காட்சியுடன் ஜொலிக்கிறார் கிருஷ்ணன். அப்போது அந்த மாலைகளில் நம் கண்ணுக்கு ஓர் அழகிய இளம் பெண்ணின் அழகு முகம் தெரிகிறது! ஆண்டாளைப் போல் கிருஷ்ணனுக்கு மாலை சூடித் தந்து, தன் பக்தியால் அவனோடு அவள் ஒன்றிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்பெண்ணின் பெயர் மஞ்சுளா. தினம் அத்தாள பூஜையின்போது, தன் கையினால் கிருஷ்ணனுக்கு மாலை கட்டிக் கொடுப்பாள். ஒருநாள் அவள் மாலை கொண்டுவரும் முன் அத்தாள பூஜை முடிந்து நடை சாத்தி விட்டார்கள். மாலையோடு ஓடிவந்த மஞ்சுளா, கண்ணீருடன் சந்நதியைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அவளைக்கண்ட பூந்தானம், அவளைத் தேற்றி ஆறுதலாக ஓர் உபாயம் சொன்னார். ‘மாலையை கோயிலுக்கு நேர்க்கிழக்காக இருக்கும் ஆலமரத்தடியில் வைத்துக் கிருஷ்ணனை நினைத்துக்கொண்டால், மாலை கிருஷ்ணனிடம் சேர்ந்துவிடும்,’ என்றார்.
அவளும் அதன்படியே செய்தாள். என்ன ஆச்சரியம்! மறுநாள் நிர்மால்யத்தைக் களையும்போது, மஞ்சுளாவின் மாலையும் கிருஷ்ணன் கழுத்திலிருந்தது! மேல்சாந்தி நிர்மால்யத்தைக் கலைக்கும்போது, அந்த மாலை கீழே விழவே இல்லை. ‘இது மஞ்சுளாவின் மாலையாக இருந்தால் அதுவும் விழட்டும்’ என்று வேண்டியபோதுதான் விழுந்தது! அன்று மாலையை வைத்து மஞ்சுளா வணங்கிய ஆலமரம் இன்றும் ‘மஞ்சுளால்’ என்று அழைக்கப்படுகிறது. (யானை ஓட்டம் இங்கிருந்துதான் ஆரம்பமாகும்.) இப்படி மலர் மாலையால் கிருஷ்ணனை வழிபட்ட மஞ்சுளா தன் பக்தியால் கிருஷ்ணனோடு ஒன்றி, அவன் மார்பில் மாலையாகவே பின்னர் மாறிவிட்டாள். இராக்காலங்களில் கிருஷ்ணன் அவளோடு அந்த ஆலமரத்தடியில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி பிரத்தியட்சமாகப் பல பக்தர்கள் கண்களுக்குத் தென்பட்டதுண்டாம்! திருமகள் உறையும் உன் கருணாகரா, இதய வாசலின் திருக்கதவங்கள் ஏழையராம் எங்கள் அடைக்கலத்துக்காகத் திறக்கட்டுமே!
உன் கமலத் திருப்பாதங்கள் எங்களுக்கு காவலாகட்டுமே!
உன் பாஞ்சாசன்யம் எங்கள் அவல அச்
சங்களைத் தீரக்க முழங்கட்டுமே!
உன் சுதர்சனம் எங்கள் தீவினைகளை
அறுத்தெறியட்டுமே!
உன் புன்னகைச் சாரலில் நாங்கள் இளைப்
பாற உன் கருணைக் கண்கள் அருள்
புரியட்டுமே!
உலகளந்த மாயவனே, உன்னிக்கிருஷ்ணா,
நமோ நாராயணா சரணம்.
No comments:
Post a Comment