Monday, 7 August 2017

உச்சிநாதரை வணங்கினால் வாழ்வில் உச்சம் தொடலாம்


உய்யக்கொண்டான் திருமலை

திருச்சி - வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடியில் உஜ்ஜீவநாதர் (உச்சிநாதர்) கோயில் உள்ளது. திருமலை என்றால் போற்றுதலுக்குரிய, வணக்கத்துக்குரிய மலை என்று பொருள். வடக்கே வேங்கடம் எனப்படும் திருப்பதியில் வேங்கடசப் பெருமாளுக்கு ஒரு திருமலை என்றால், தெற்கே சிவபெருமானுக்கு திருச்சியில் இந்தத் திருமலை. உய்யக்கொண்டான் திருமலை என்ற பெயரைக் கேட்டதும் பெரிய மலையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். 50 அடி உயரமுள்ள சிறிய குன்று தான். உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் இந்தக் குன்று உள்ளது. குன்றின் மேல் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிக்கட்டுகளை கடந்து சென்று உயரே இறைவனை தரிசிப்பதன் உள்ளர்த்தம், பல படிகளை கடந்து தான் உயர முடியும் என்ற வாழ்க்கை அனுபவத்தை நமக்கு உணர்த்துவதற்காகத் தான்.

10 படிகள் ஏறியதுமே விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு 100 படிகளுக்கு மேல் கடந்து சென்றால் வலுவான கோட்டையாக உய்யக்கொண்டான் திருமலை கோயில் திகழ்கிறது. கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. அவற்றைச் சுற்றி சுற்றுச்சுவரும், அதற்கு வெளியே ஆறு அடி அகலம் உள்ள வலிமையான மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் மேற்கு நோக்கி சிவபெருமான் சன்னதி உள்ளது. மூலவருக்கு உஜ்ஜீவனேஸ்வரர் என்ற பெயர். தூய தமிழில் உச்சிநாதர் என்றழைக்கப்படுகிறார். வாழ்வின் உச்சியை அடைய நமக்கு அருள்பவர் என்று இதற்கு பொருள். நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மேலான முக்தி நிலையை அடைவதற்கு வழிகாட்டுபவர் என்றும் பொருள். பக்தர்களை அன்பினால் ஆட்கொள்பவர் என்பதால் உய்யக்கொண்டான் திருமலையில் அருளாட்சி செய்யும் சிவபெருமான், ஆளுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். 

சிவபெருமான் சன்னதி உள் பிரகாரத்தில் உள்ள கோஷ்டத்தில், கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு இருப்பது வழக்கம். ஆனால் இங்கே வித்தியாசமாக பெண்ணுக்கு சரிபாதி தந்தவராய், அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். உய்யக்கொண்டான் ஆலயத்தின் சிறப்பம்சம், இங்கே அம்பாளுக்கு இரண்டு சன்னதிகள். கிழக்கு நோக்கி இருக்கும் சன்னதியில் அம்பாளுக்கு அஞ்சானாட்சி என்று திருப்பெயர். தூய தமிழில் மைவிழியாள் என்று பொருள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சன்னதியில் பாலாம்பிகா அருள்பாலிக்கிறார். உய்யக் கொண்டான் கோயிலை 1200ஆண்டுகளுக்கு முன்பு நந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கே கோயில் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ராமாயண காலத்தில் ராவணனின் படைத் தளபதியாக இருந்த கரன் என்ற அரக்கன், இந்தக் கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வரங்களை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டில் நந்திவர்ம மங்கலம், ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்றும் இறைவர் உய்யக்கொண்டநாதர் என்றும் குறிக்கப்படுகிறது. கி.பி 18ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின் போது இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், மைசூர்க்காரர்கள் மாறிமாறி தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக அறியப்படுகிறது.

எம பயம் நீங்கும்

மார்க்கண்டேய மகரிஷி 16 வயது நிறைவடையும் தருணத்தில் இங்கே வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. 16 வயது நிறைவடைந்ததும், தனது உயிரை எமன்  வாங்கிவிடுவான் என்ற காரணத்தால், தன்னைக் காப்பாற்றும்படி உச்சிநாதரை மார்க்கண்டேயர் மனமுருக வேண்டியிருக்கிறார். உடனே மனமிரங்கிய அம்பாள்  சிவபெருமானை கேட்டுக் கொள்ள, மார்க்கண்டேய மகரிஷிக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை இங்கு தான் சிவபெருமான் வழங்கினாராம். ஆகையால் இங்கு  வந்து உச்சிநாதரை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. உய்யக்கொண்டான் திருமலையில் நாரதர், உபமன்யு போன்ற  மகரிஷிகளும் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். கோயிலில் கொடிமரம் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு எமனை தடுப்பதற்காக கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் பாதம் உள்ளது.

No comments:

Post a Comment